Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது படகுச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அறிவித்துள்ளது. மட்டக்களப்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே தமிழ் மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் அதிகாரம் தேவை என்பதை மக்கள் உரத்துக் கூறத் தொடங்கிவிட்டனர். கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தை முஸ்லிம் காங்கிரஸிடம் கொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது வடக்கு- கிழக்கு இணைந்தால் அங்கும் ஒரு முஸ்லிம் முதலமைச்சரை கொண்டுவர தயாராக இருக்கின்ற நிலையில், கிழக்கில் அதுவும் மட்டக்களப்பில் நடைபெறும் திட்டமிட்ட காணி அபகரிப்பு நிதி நிர்வாக எல்லை முரண்பாடுகளை கண்டும் காணாமல் இருக்கின்றது.

நிதி, நிர்வாக, காணி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இரண்டரை வருட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்க ஆட்சி பாரிய பின்னடைவை தமிழருக்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்நெறிப்படுத்தப்பட்ட இன ரீதியான பாதிப்புகளை சீர்படுத்துவதற்கு மேலும் இரண்டு தடவைகளாவது சிவநேசத்துரை சந்திரகாந்தன் முதலமைச்சராக ஆட்சி புரிந்தாலே முடியும் என, கிழக்கு மாகாண மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் குறிப்பாக மட்டக்களப்பு மாநகர சபை ஆரையம்பதி பிரதேச சபை செங்கலடி பிரதேச சபை கோரளைப்பற்று, கோரளைப்பற்று வடக்கு உள்ளூராட்சி மன்றங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் பலம் மேலோங்கப்பட்டாலே இப்பகுதிகளில் தமிழரின் இருப்பை பாதுகாக்க முடியும். இல்லையேல் அடுத்த ஐந்து வருடங்கனின் பின்னர் பல தமிழ் எல்லைக் கிராமங்களை வரைபடத்தில் மாத்திரமே பார்க்கும் சூழல் உருவாகும்.

நாம் யாரையும் சாடவில்லை. சந்திரகாந்தனால் கட்டப்பட்ட மட்டக்களப்பு பொது நூலகத்தை முடிப்பதற்கோ மட்டக்களப்பு மாநகரத்தில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு அமைக்கப்பட்ட வடிகான்களும் ஆட்சி மாற்றத்தால் இடைநடுவே நிற்கின்றது. இவற்றை பூர்த்தி செய்யமுடியாத மக்கள் நலன் சார்ந்து சிந்திக்காதவர்களால் எதுவும் செய்யமுடியாது.

சமுகத்தை நேசிக்கும் பல சமுக ஆர்வலர்களும் புத்திஜீவிகளும் இளைஞர்கள் மகளிர் என இம்முறை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கு தங்களது விண்ணப்பங்களை கொடுத்துள்ளனர். மிக விரைவில் அவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்தல் களத்தில் இறக்கப்படுவார்கள்.” என்றுள்ளார்.

0 Responses to எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com