ஈழத்தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் இந்திய அரசுக்கு அக்கறை இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் இல.கணேசன் குற்றம் சாற்றியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் போர் முடிந்துவிட்டதாக அறிவித்துள்ள சிறீலங்கா அரசு, அங்குள்ள தமிழர்களை அகதிகள் முகாம்களில் அடைத்து வைத்துள்ளது.
இதனால் சொந்த நாட்டிலேயே அவர்களை அடிமைகள் போல் நடத்தி வருகிறது. அந்த முகாம்களில் தமிழர்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.
ஆடு, மாடுகளை விட அவர்கள் மிக கேவலமாக நடத்தப்படுகின்றனர். தமிழர்களுக்கு அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் அவர்களுக்கு போய் சேர்ந்ததா என்பது தெரியவில்லை. அந்த நிவாரணப் பொருட்கள் தமிழர்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
அகதிகள் முகாம்களில் நேரடியாக ஆய்வு செய்த ஐ.நா. சபை பணியாளர்களுக்கு அனுமதி வழங்க சிங்கள அரசு மறுத்துவிட்டது. இதனால் இலங்கை தமிழர்களுக்கு உதவ முடியாது என ஐ.நா.சபையும் பின்வாங்கிவிட்டது. இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக இந்திய அரசு ரூ.500 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கியிருப்பதாக அறிவித்துள்ளது. இது போதுமானதாக இல்லை.
இலங்கை தமிழரின் நிலையை ஆராயாமல் மேம்போக்காக இந்த தொகை ஒதுக்கப்பட்டிருப்பது இந்திய அரசின் அக்கறையின்மையையே காட்டுகிறது. இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றி, அவர்களது சொந்த கிராமத்தில் குடியமர்த்த வேண்டும். அவர்களுக்கு வேலை உள்பட அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்துதர வேண்டும்.
இதற்காக இந்திய அரசு, இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்திய அரசு இதில் தலையிட்டு, தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவேண்டும் என்றார்.
ஈழத்தமிழருக்கு மறுவாழ்வு அளிப்பதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: இல.கணேசன்
பதிந்தவர்:
தம்பியன்
15 July 2009
0 Responses to ஈழத்தமிழருக்கு மறுவாழ்வு அளிப்பதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: இல.கணேசன்