ஈழத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட போராளிக்குழுக்கள் ஆயுதமேந்தி, ஈழத்தை அடைவதற்காகப் போராடினர் என்பதும், அதில் தமிழீழ விடுதலைப் புலிகள், (LTTE) தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், (PLOTE) தமிழீழ விடுதலை இயக்கம், (TELO) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, (EPRLF) ஈழப்புரட்சிகர இயக்கத்தினர் (EROS) என ஐந்து அமைப்புகள் முன்னணியில் இருந்தனவென்பதும், கொள்கை, கோட்பாடுகள் குறித்தும், இவ்வியக்கங்கள் அரசின் மீது தொடுத்தத் தாக்குதல் குறித்தும் அவர்களது வெளியீடுகள் மூலம் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றன என்றும் முந்தைய பல பகுதிகளில் பார்த்தோம்.
இவ்வியக்கங்களின் தோற்றுவாய் என்பது தமிழ் மாணவர் பேரவை, பின்னர் தமிழ் இளைஞர் பேரவை ஆகியன. இக்குழுக்களில் 30 ஆண்டுகளாக களத்தில் நின்று போராடிய, பலம் பொருந்திய அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்ற நிலையில், பெங்களூரில் நடைபெற்ற தெற்காசிய மாநாட்டின்போதும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போதும் ஒரு முடிவுக்கு வர இவ்வியக்கமே நெருக்குதலுக்கு ஆள்பட்டது என்கிற அளவிலும் அவ்வியக்கம் குறித்து இங்கே விரிவாகப் பார்ப்பது அவசியமாகிறது.
இலங்கையின் வடக்கு மாநிலத்தின் பருத்தித் துறைப் பகுதியில் வல்வெட்டித்துறை திருவேங்கடம் வேலுப்பிள்ளை - பார்வதி தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள். இரு ஆண்கள்; இரு பெண்கள். இதில் பிரபாகரன் கடைக்குட்டி ஆவார். மனோகரன் மூத்தவர், இரு சகோதரிகள் ஜெகதீஸ்வரி, விநோதினி. தந்தை வேலுப்பிள்ளை அரசு காணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.
பிரபாகரன் பத்தாம் வகுப்பு வரை படித்தார். சிறு வயது முதலே வெடி மருந்து, வெங்காய வெடி செய்வதில் நாட்டம் கொண்டிருந்தார். கப்பல் பணிக்கு இவரது நண்பர்கள் மனு போட்டு வேலையில் சேர்ந்திருந்தார்கள். அவர்களைப் போன்று கப்பல் பணி ஊழியராகச் சேர ஆசைப்பட்டது -வெடிபொருள்கள், துப்பாக்கி வாங்கலாம் என்ற ஆசையில்தான். ஆனால் தந்தை அனுமதிக்கவில்லை.
இலங்கையில் தமிழ்த் தலைவர்களின் ஜனநாயக வழியிலான போராட்டங்கள் அசட்டை செய்யப்பட்டன. இலங்கையின் ஆட்சிப் பொறுப்பில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று ஒதுக்கியே வைத்திருந்தனர்.
இடதுசாரிகளோ, பிரச்னைகளுக்கு வன்முறை மூலமே தீர்வுகாண வேண்டும் என்பதைச் சொன்னார்கள். அதைப் பலமுறையில் செய்தும் காட்டினார்கள், சீனச் சார்பு கம்யூனிஸ்ட்டுகள். அவர்களே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வன்முறையை அறிமுகம் செய்தவர்களும் ஆவர் (புஷ்பராஜா பக். 44).
இவர்களும் சிங்கள பேரினவாதத்துக்கு அடிமையாகி, முதலாளித்துவக் கட்சிகள் என்று யாரை விமரிசனம் செய்தார்களோ அவர்களுடனே கூட்டு சேர்ந்து, மற்றவர்களைக் காட்டிலும் தமிழர்களுக்கு அதிக துரோகம் செய்தார்கள். எனவே, சிங்கள அரசின் அடக்குமுறைகளைக் கண்டு கொதித்தெழுந்த தமிழ் மாணவர்கள் 1970-களில் தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர் என்பதை முன்பே பார்த்தோம்.
சிங்கள அரசின் மீது கோபம் கொண்டிருந்த இளைஞர்கள் மாணவர் பேரவையை நாடிச் சென்று இணைந்து கொண்டனர்.அதே வகையைப் பின்பற்றி சத்தியசீலன் தொடங்கிய தமிழ் மாணவர் பேரவையில் (நவம்பர் 1970) பிரபாகரனும் இணைந்து கொண்டார்.
இப்பேரவையில் தீவிரவாதக் குழு ஒன்றும் இருந்தது. அக் குழுவில் தங்கதுரை, சின்ன ஜோதி போன்றோர் இருந்தார்கள். அவர்கள் பிரபாகரனைக் காட்டிலும் வயதில் பெரியவர்கள். தங்கதுரையும் பிரபாகரனும் ஒரே ஊரானதால் இருவருக்கிடையே நெருக்கம் ஏற்பட்டது. பிரபாகரனுக்குத் துப்பாக்கிச் சுடவும், தொடர்ந்து கைக்குண்டுகள் செய்யவும் பயிற்சி அளித்தார்கள். அவர்களாக சொல்லிக் கொடுத்தது பாதி என்றால், இவராக அறிந்து கொண்டதே அதிகம்.
இந்த நேரத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர் "தரப்படுத்துதல்' என்கிற சட்டத்தைக் கொண்டுவந்து மாணவர்களை கோபத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றார்.
இந்தத் தரப்படுத்துதல் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய, கல்வி அமைச்சரும் தமிழருமான பதியுத்தீன் முகமதுவையே அவர் பயன்படுத்தினார். நாடாளுமன்றத்தில் மசோதாவைத் தாக்கல் செய்யும்போது பதியுத்தீன் முகமது, "மருத்துவம் பொறியியல் துறையில் மாணவர்கள் பயிலும்போது, தமிழ் மாணவர்களே அதிக எண்ணிக்கையில் இடம்பிடிக்கின்றனர். சிங்கள மாணவர்கள் அவர்களைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். இதற்கு - தமிழ் மாணவர்களுக்கு, தமிழ் ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் அளிப்பதே காரணம்' என்று உண்மைக்கு மாறான தகவல் ஒன்றை கூறி அவையில் பதிவு செய்தார்.
இதன் முதற்கட்டமாக செய்முறைத் தேர்வுகள் ரத்தானது. இதனால் கோபமுற்ற மாணவர்கள் தமிழ்த் தலைவர்களை நெருக்கினர். தமிழ்த் தலைவர்கள் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவைச் சந்தித்து முறையிட்டபோது, "நீங்கள் கல்வி அமைச்சரிடம் முறையிட வேண்டிய விஷயம்' என்றார். கல்வி அமைச்சரான பதியுத்தீன் முகமது, "இது அமைச்சரவை முடிவு; இதில் நான் வெறும் கருவி மட்டுமே; எனக்கு பணிக்கப்பட்டதைச் செய்தேன்; இதில் மாற்றம் செய்யும் அதிகாரம் எதுவும் எனக்கு இல்லை' என்றார்.
இவையெல்லாம் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக வந்ததும், மாணவர் பேரவையினர் இதற்குத் தக்க எதிர்ப்பைக் காட்ட விழைந்தனர். அரசுப் பேருந்து ஒன்றை கொளுத்துவது என்று முடிவானது. இதில் பங்கு பெறப் பலரும் போட்டியிட்டனர். கிட்டத்தட்ட இருபது பேர். அதில் நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டனர். அதில் பிரபாகரனும் ஒருவர். மற்றவர்களைவிடப் பிரபாகரன் வயதில் சிறியவர் என்றாலும், அப்படியொருவர் தேவை என்று அவரைத் தேர்வு செய்தார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வரில் மூவர் குறிப்பிட்ட நேரம் நெருங்க நெருங்க பயந்து ஓடிவிட்டனர். நான்காவது நபரான பிரபாகரன் எப்படியும் பேருந்தைக் கொளுத்தியே தீர்வது என்று, அன்று இரவு பணி முடிந்து, பணிமனையில் வண்டியை விட்டுவிட்டுப் போகும் வரைக் காத்திருந்து, பேருந்தை எண்ணெய் ஊற்றி கொளுத்தினார். பேரவையினர் பிரபாகரனின் வீரச்செயலைப் பாராட்டி, அணைத்துக் கொண்டனர்.
சுதந்திர ஈழம் என்பது அவரது தாகம் ஆயிற்று. அநீதியை எதிர்த்துப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சாக்ரட்டீஸ் போன்றோரின் வாழ்க்கை அவருக்குப் பிடித்தது.
"இதற்கெல்லாம் காரணம் 1958-இல் நடைபெற்ற பயங்கரப் படுகொலைகள்தான். இதன் உச்சம் தெற்கே பாணந்துறை சிவன் கோயிலில் உறங்கிக்கொண்டிருந்த பூசாரியை எழுப்பி, அவர்மீது எண்ணெய் ஊற்றி சிங்களவர்கள் எரித்துக் கொன்ற சம்பவம். வடக்கு மாநிலமே உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தது. இதே கலவரத்தில் சின்னஞ்சிறு சிசுவை, கொதிக்கும் தாரில் போட்டுக் கொன்ற சம்பவம் இளைஞர்களை உசுப்பேற்றியது. அப்பாவிகளை சிங்களவர்கள் கொல்கிறார்கள். நாங்கள் ஏன் இவர்களைத் திருப்பித் தாக்கக்கூடாது என்ற எண்ணம் இளைஞர்களாகிய எங்களுக்கு ஏற்பட்டது. கர்ணன், வீமன், விவேகானந்தர் ஆகியோரை எங்களுக்குப் பிடித்தது. "இளைஞர் அணி' ஒன்றை உருவாக்கினோம். எங்களது வரலாற்றுப் பின்னணியே எங்களை ஆயுதம் தரிக்கச் சொல்லிற்று. அப்போது எனக்கு வயது பதினாலுதான்' என்று ஒரு பேட்டியில் சிறுவயதைப் பற்றி பிரபாகரன் குறிப்பிட்டிருக்கிறார்.
பின்னர் ஒரு நாள் அதிகாலை பிரபாகரனைத் தேடி போலீஸ் வந்தது. கதவைத் திறந்தால் பெருமளவில் போலீஸ். வீட்டைச் சோதனையிட்டும் பிரபாகரன் கிடைக்கவில்லை. அப்போதுதான் பெற்றோருக்கு பிரபாகரனுக்குத் தீவிரவாத நண்பர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.
பிரபாகரன் வீட்டுக்கு வருவதை நிறுத்திக்கொண்டார். ஆனாலும் பிரபாகரன் வீட்டைச் சோதனையிட போலீசார் அடிக்கடி வந்தனர். பிரபாகரன் என நினைத்து அவரது அண்ணன் மனோகரனை அழைத்துச் சென்ற சம்பவமும் நடந்தது. நீண்டநாள்கள் பிரபாகரன் வீட்டுக்கு வராததால் கவலையுற்ற தந்தை வேலுப்பிள்ளை, பிரபாகரன் தங்கியிருந்த தீவிரவாதக் குழுவினரைக் கண்டுபிடித்து அவரை அழைத்து வந்தார். போலீஸ் நடவடிக்கை தொடரவும் பிரபாகரன் அங்கிருந்து கிளம்பினார்.
மாணவர் பேரவையின் தீவிரவாத செயல்களை ஒடுக்க உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வலைவீச்சில் பேரவைத் தலைவரான சத்தியசீலன் சிக்கினார். கடும் சித்திரவதைகளுக்கு ஆளான அவரைத் தொடர்ந்து ஸ்ரீ சபாரத்தினம் கைதானார். பிரபாகரனைத் தேடுவதில் போலீஸôர் தீவிரமாக இருந்தனர்.
பாவை சந்திரன்
தினமணி
0 Responses to பிரபாகரன் போராளியானது ஏன்?