Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா இராணுவத்தினர் இளைஞர்கள் சிலரைச் சுட்டுக் கொல்கின்றமையைக் காண்பிக்கும், "சனல்4" தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிக் காட்சி உண்மையானதா என்பதைக் கண்டறிவதற்காக சிறீலங்கா அரசு மேற்கொண்ட விசாரணை திருப்தியானதாக இல்லை என்று ஐ.நா சபையின், சட்ட விரோதப் படுகொலைகள் தொடர்பான விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டொன் தெரிவித்துள்ளார்.

இந்த காணொளிக் காட்சி போலியானது என்று விசாரணைகள் மூலம் நிரூபிக்கப்பட்டு விட்டதாக சிறீலங்கா அரசு கூறினாலும், அந்த விசாரணை பக்கச்சார்பானது என்று அவர் அழுத்தமாகக் கூறியிருக்கின்றார். "இலங்கையில் மோதல் முடிவடையும் தறுவாயில் பல படுகொலைகள் இடம்பெற்றன என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை குறித்த விசாரணை செய்வதற்காக இலங்கைக்குச் செல்வதற்கு அனுமதி கோரினேன். எனினும், இதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.'' எனத் தெரிவித்துள்ள அல்ஸ்டொன், இக்குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்கான விருப்பம் சிறீலங்கா அரசிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:

சிறீலங்கா அரசு மிக சமீபத்தில் நான்கு நிபுணர்களின் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தது. மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் போது, இக்குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான பக்கச் சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியது சர்வதேச சட்டத்தின் கீழ் அவசியமான நடவடிக்கையாகும்.

சிறீலங்கா அரசு என்ன செய்துள்ளதென்றால், தனது இராணுவத்தைச் சேர்ந்த இருவர் மேற்கொண்ட ஆய்வு ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதாவது, குறிப்பிட்ட குற்றத்தை மேற்கொண்டவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைப்பைச் சேர்ந்தவர்களே அது குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இந்த இரு இராணுவ அதிகாரிகளும் "சனல் 4" வீடியோ நம்பக்கூடியதல்ல எனத் தாம் கருதுகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் முன்னர் சிறீலங்கா அரசுக்காகப் பணியாற்றிய கல்விமான் ஒருவரும் வீடியோ குறித்த ஆய்வுக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சுயாதீன பக்கச்சார்பற்ற விசாரணை உண்மையில் நடைபெற்றதா என்பதைப் பார்க்கும்போது இது திருப்தியளிக்கவில்லை. இறுதியாக அவுஸ்திரேலியாவில் வாழும் சிறீலங்காப் பிரஜை ஒருவரின் ஆய்வையும் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். அவருக்கு இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப ஆற்றல் உள்ளது போலத் தோன்றுகிறது. "சனல் 4" வீடியோ போலியானது எனத் தெரிவித்து அவர் சிறீலங்கா செய்தித்தாள் ஒன்றில் தனது கருத்தை எழுதினார்.

தனது ஆய்வுகளை அடிப்படையாக வைத்தே அவர் இந்த முடிவுக்கு வந்தார். அரசு அவரை அழைத்து மேலும் தெளிவான அறிக்கையைத் தயாரிப்பதற்கான பணியை வழங்கியுள்ளது. சிறீலங்கா அரசு இந்த நான்கு அறிக்கைகளில் எவற்றையும் எமக்கு முழுமையாகக் காண்பிக்கவில்லை; வழங்கவில்லை. அவர்கள் இந்த அறிக்கைகளின் சுருக்கத்தை மாத்திரமே காண்பித்துள்ளனர்.

இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால், உங்களுக்கு எதிராக மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அரசுக்கு மிகவும் நெருக்கமான சிறிய எண்ணிக்கையிலான நிபுணர்கள் இதனை ஆய்வுசெய்யுமாறு கூறுகிறீர்கள். இது பக்கச்சார்பற்ற விசாரணை இடம்பெற்றதற்கான அர்த்தமல்ல.

சுயாதீன நிபுணர்களைக் கொண்ட விசாரணைக்குழு தேவை இவ்வாறான சூழ்நிலைகளில் வழமையாக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறதென்றால், சில சுயாதீன நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்படுகின்றது. அரசோ, ஐ.நாவோ அல்லது வேறொரு மூன்றாம் தரப்போ வீடியோவை ஆராய்ந்து மதிப்பிடுவதற்கான நிபுணர் குழுவை அமைப்பது வழமை. சிறீலங்கா அரசு திட்டமிட்ட வகையில் இதனைச் செய்வதற்கு மறுத்து வருகின்றது.

இவ்வாறான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எனக்கோ அல்லது வேறு ஐ.நா. அதிகாரிகளுக்கோ அவர்கள் அழைப்பு விடுக்கவில்லை. வீடியோ குறித்து விசாரணை செய்வதற்கு சிறீலங்காவுக்குச் செல்வதற்கான அனுமதி இன்னமும் எனக்கு கிடைக்கவில்லை.

அரசு இது குறித்து ஆர்வம் காட்டவில்லை.இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு எவ்வித சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதிலும் அக்கறை கொள்ளவில்லைப் போலத் தென்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

0 Responses to போர்க்குற்ற விசாரணையை செய்வதற்கு சிறீலங்காவுக்கு விருப்பம் இல்லை: பிலிப் அல்ஸ்டொன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com