Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிங்களப்படைகளால் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் கொன்றொழிக்கப்பட்ட பிரதேசமான புதுமாத்தளன் பகுதியில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்த படையினருக்கான நினைவுத்தூபி என்ற பெயரில் தமிழ்மக்களை வென்ற வெற்றிச்சின்னத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் திறந்து வைத்தள்ளார்.

இலங்கையில் 30 வருட காலமாக நிலவிய பயங்கரவாதத்தை அழிக்க புலிகளுடன் கடுமையாகப் போரிட்டு, புலிகளை அழித்து, தோற்கடித்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டை ஒன்றுபடுத்திய படைவீரர்களின் பெருமையை எப்போதும் பறைசாற்றும் வண்ணம் இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளதுஎன்று நினைவுத்தூபி திறப்புவிழாவில் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்நிகழ்வு தொடர்பாகதேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன்(கருணா) அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்இந்த இடம் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த இடமாகவே பார்க்கப்படுகின்றதே தவிர தமிழர்களை வென்ற இடமாகவோ கொன்றொழித்த இடமாகவோ பார்க்கப்படவில்லை. இலங்கையில் பிரிவினைக்கான பயங்கரவாத ஆயுதப்போராட்டத்தை முடிவிற்குகொண்டு வந்த இடமாகவே பார்க்கப்படுகின்றதுஎன தெரிவித்தார்.

யுத்தத்தில் தமிழ்மக்களை வெற்றி கொண்ட ஆணவத்தில் தமிழ்மக்களின் இனவிடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக குறிப்பிட்டுபயங்கரவாதம்என்ற சொல் வட்டத்திற்குள் முன்னைய சிங்களத் தலைவர்களைப் போல உள்ளடக்க முனைகின்றார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள்.

ஜனாதிபதி அவர்கள் யுத்தம் முடிவிற்கு வந்ததாக ஆறு மாதங்களிற்கு முன்பே அறிவித்து விட்டார். தற்போது ஆயுதக்கிளர்ச்சி முடிவுக்கு வந்த இடத்தில் வெற்றி நினைவுத்தூபியும் அமைத்து விட்டார். இப்படியான கருத்துப்பரம்பலின் சூழலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களிடம் கேள்விகளை கேட்கத் தோன்றுகின்றது.

ஆயுதப்போராட்டம் முடிவிற்கு வந்துவிட்டால்!

ஏன் இன்னும் தமிழர்வாழும் பிரதேசங்களில் கூடுதலான படைகளை வைத்திருக்கிறீர்கள்?

ஏன் வன்னிப்பிரதேசத்தில் பாரிய இராணுவமுகாம்களை; மேலும் அமைக்கவேண்டும்?

தமது சொந்த வாழ்விடங்களை விட்டு வெளியேறி கடந்த இரண்டு தசாப்தங்களாக அகதிகளாக இருக்கும் மக்களை இன்னும் குடியேற்றாமல் ஏன் வைத்திருக்கிறீர்கள்?

விடுதலைப்புலிகளின் கனரக ஆயுததாக்குதல் வீச்சு எல்லைக்குள் முகாம்களின் பிரதான இடங்கள் வந்துவிடக்கூடாது என்றும் இராணுவ மைய இடங்கள் குறுகிய தாக்குதல் எல்லைக்குள் இருக்கக்கூடாது என்பதால் உயர்பாதுகாப்பு வலையங்கள் அமைக்கப்பட்டதாக கூறினீர்கள். தற்போது ஆயுதப்போராட்டம் முடிவிற்கு வந்ததாக நீங்கள் அறிவித்த பின்னர் ஏன் இந்த உயர்பாதுகாப்பு வலயம்?

மக்கள் வசிக்கும் பகுதிகளில் படைவீரர்களின் எண்ணிக்கையை குறைக்க மறுப்பது ஏன்?

இன்றும் மக்களின் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது ஏன்?

நாட்டில் இன்னும் ஏன் அவரசால தடைச்சட்டம்,பயங்கரவாதச் தடைச்சட்டம் அமுலில் உள்ளது? என்பது போன்ற பல கேள்விகளை தங்களிடம் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவற்றிற்கான விடை ஒருபோதும் கிடைக்காது.

இலங்கையில் அரசியல் வரலாற்றில் தமிழ்மக்கள் தங்களிற்கான அரசியல் உரிமைகளைக் கேட்டு ஜனநாயக மற்றும் அகிம்சை வழியில் போராடிய போது அப்போராட்டங்கள் இலங்கை அரசபடைகளைக் கொண்டு ஆயுதவழி மூலம் ஒடுக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடே தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்த தூண்டியது. 1976 ம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானமான தமிழர்களிற்கான தனியரசை அமைக்கும் இலக்கோடு ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்து போராடி இற்றைவரை அந்த மக்களின் ஆணையை நிறைவேற்ற 30,000 க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் தங்களை இந்த அறப்போருக்கு ஆகுதியாக்கினார்கள்

இறுதிவரை கொள்கைக்காகவே நின்று போராடி வீரமரணமடைந்த மாவீரர்களினதும், அநியாயமாக கொல்லப்பட்ட தமிழ்மக்களின் விதைகுழிகளின் மீதும் நின்று, தமிழர்களை சிங்களம் வென்ற நினைவுத்தூபியை எழுப்பி இறுமாப்புடனும் திமிருடனும் வெறுமனே இதுபயங்கரவாத ஆயுதக்கிளர்ச்சி என்று சொல்வதை எந்த தமிழன் ஏற்பான் என்று ஜனாதிபதி ராஜபக்ச அவர்கள் நினைக்கின்றாரோ தெரியவில்லை.

மேலும் இவ் இடத்தை தமிழ்மக்களை வென்ற இடமாக கருதுவதாக எண்ண வேண்டாம். இந்த இடத்தில் தான் இன நல்லிணக்கம் ஏற்பட்டது. அதைப் பெற பாடுபட்ட வீரர்களை நினைவுகூறும் நினைவுத்தூபியே இது என்ற வார்த்தை ஜலாங்களை கூறுகின்றார் ராஜபக்ச அவர்கள். ஆனால் அதை வெற்றித்தூபியாக சிங்களம் நினைத்தாலும் அந்த தூபியைப் பார்க்கும் ஒவ்வொரு மானத்தமிழன் மனங்களிலும் இத்தூபியை அப்புறப்படுத்தும் நாள் தான் இலங்கைத்தீவில் தமிழ்மக்களிற்கான விடுதலைநாள் என்பதையே
நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் என்பதை சிங்களம் கணிக்கத் தவறிவிட்டது!

மற்றும் தமிழ்மக்களிடம் தனக்கான வாக்கைப்பெற சலுகைகளையும் மாயாயால வார்த்தைகளையும் தமிழ் மொழியில் பேசிக்கொண்டு வருவதும். சிங்கள மக்களிடம் செல்லும்போது, தமிழர்களை இறுதியாக வென்றழித்த இடத்தில் சிங்களத்தின் நினைவுதூபியை நிறுவி, சிங்களத்தின் வீரத்தை பறைசாற்றியவராக காட்டியே ராஜபக்ச அவர்கள் சிங்களத்தின் வாக்குகளை பெறப்போகின்றார்.

இந்த அரசியல் சூட்சுமத்தையும் அரசியல் விளையாட்டுகளையும் தமிழ்மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழினத்திற்கு பேரவலத்தைத்தந்து தமிழ்மக்களை சின்னாபின்னமாக்கிய ராஜபக்ச அவர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பெரும்பான்மை பங்காளர்கள் தமிழர்களே என்பதை
தமிழினம் மறக்கக்கூடாது.

மேலும் தமிழ்மக்களின் ஆயுதப்போராட்டத்தில் நடைபெற்ற சரி, பிழைகள் என்ற விமர்சனங்களிற்கு அப்பால் இறுதிவரை கொள்கைக்காகவே நடந்தார்கள், பல அர்ப்பணிப்புகளை
செய்தார்கள், தமிழ்மக்களின் போரிடும் வீரமரபை உலகறியச் செய்தார்கள், தமிழர்களாக தமிழர்களை பெருமைப்பட வைத்தார்கள். தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வாக மாவட்டசபையைத்தான் தருவோம் என்ற சிங்கள ஆட்சியாளர்களை உள்ளக சுயாட்சித் தத்துவம் வரை பேசப்பண்ணினார்கள். தமிழ்மக்களின் விடுதலைக்காகவே இறுதிவரை தணியாத இலட்சியத்துடன் போராடி வீரமரணமடைந்தார்கள்.

இப்போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறுவதை சிங்களத்திடம் தங்களின் இருப்பு அரசியலுக்காக கைகட்டி நின்று வாலாட்டும் தமிழ் விரோத சக்திகள் வேண்டுமென்றால் தலையாட்டி ஒப்புக் கொள்வார்கள். ஆனால் தமிழ்மக்களல்ல என்பதை எப்போதும் நிரூபித்து நிற்பார்கள்.

அண்மைக்காலமாக ராஜபக்ச அவர்களின் அரசியல் நகர்வுகளில் சிங்களப் பேரினவாதத்தின் கொக்கரிப்புத்தன்மை தெரிகின்றது. புலிகளின் அழிவுடன் வடக்கு கிழக்கு இணைப்பும் செத்துவிட்டது என்று ராஜபக்ச அவர்கள் கூறிய போதும் பம்பலப்பிட்டியில் சிங்கள பொதுமக்கள் பொலீசுடன் இணைந்து கடலிற்குள் தமிழ் பொதுமகனை கும்பிடக் கும்பிட அடித்துக் கொன்றபோதும் புலிகள் இல்லாதபடியால் தான் இப்படி நடந்ததோ? என்ற சிந்தனையைத் தமிழ்மக்களிடம் தூண்டியிருக்கும் என்பதை இங்கு நினைவு கூருவது பொருத்தமானது.

தமிழ்மக்களின் போராட்டம் பின்னடைவைச் சந்தித்துள்ளதேயன்றி தமிழ்மக்களின் வீரமும் தியாக உணர்வும் எப்போதும் பின்னடைவைச் சந்திக்காது என்பது வெளிப்படை. தமிழ்மக்களின் மானமறவர்களான மாவீரர் கல்லறைகளை அழித்தாலும் மனங்களில் மாவீரர்களின் கனவுகளையும் நினைவுகளையும் சுமந்திருக்கும் தமிழ்மக்கள் இருக்கும் வரை அவைகள் மறக்கப்படமாட்டாது என்பதுடன் மாவீரர்களின் கனவுகளைச் சுமந்த தமிழ் மக்களின் உரிமைக்குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும். அதற்கான காலம் கனியும் வரை தமிழினம் ஒற்றுமையை பலமாக்கி செயற்படவேண்டும்.

அபிஷேகா

abishaka@gmail.com

0 Responses to தமிழர்களின் சவக்குழிகள் மீது சிங்களத்து படைகளின் வெற்றித்தூபி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com