Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரு பிரதான வேட்பாளர்களுக்கும் நிட்சயம் ஆதரவு வழங்கப்போவதில்லை. தமிழ் மக்களின் உணர்வை மதித்தே இறுதி முடிவெடுக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஐனாதிபதி தேர்தல் தொடர்பாக அவரிடம் சர்வதேச ஊடகமொன்று கருத்துக் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தமிழ் மக்களைக் கொன்று குவித்தும், அகதிகளாக்கியும் தேசிய விடுதலைப்போராட்டத்தை சதியின் மூலம் பின்னடைவை ஏற்படுத்தியவர்களான ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகிய இருவரும் தற்போது தேர்தலில் எதிரும் புதிருமாகக் குதித்துள்ளனர். அவர்கள் தமிழ் மக்களின் அழிவையும் போர் வெற்றியையும் தட்டில் ஏந்திக் கொண்டே சிங்கள மக்களிடம் வாக்குக் கேட்கின்றனர். தமிழர்களின் குருதி காயமுன்னர் தமிழ் மக்களிடம் எல்லாவற்றையும் மறந்து ஆதரவு கேட்கின்றனர். இவர்களுக்கு எவ்வாறு தமிழ் மக்கள் வாக்களிக்க முடியும்.

பெரும்பான்மையான தமிழ் மக்கள் இவர்களுக்கு வாக்களிக்க முடியாது என்ற கருத்திலேயே உள்ளனர். எனவே தமிழ் மக்களின் விருப்புக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கப்போவதில்லை என ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துளளார்.

மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து ஒன்றாகவே செயற்படும். ஆனால் ஐனாதிபதி தேர்தல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் பல்வேறுபட்ட கருத்துவேறுபாடுகள் உண்டு. அவையாவும் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும். கட்சியில் உள்ள குறிப்பிட்ட ஒருசிலர் தாம் எடுக்கும் முடிவுகளை அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் திணிக்கவோ மக்களை விருப்புக்கு மாறாக வழிநடத்தவோ முடியாது. அவ்வாறு செயற்பட யாராவது முற்பட்டால் அவர்களை வரலாறு மன்னிக்காது. இவ்வாறுதான் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை இவர்கள் எழுதிவிட்டு ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது திணிக்க முற்பட்டனர். ஆனால் அதில் ஏற்பட்ட கருத்துமுரண்பாடுகள் காரணமாக தற்போது அது பிசுபிசுத்துப்போயுள்ளது.

சுயநல அரசியலுக்காக எமது உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது, இந்த ஐனாதிபதியின் ஆட்சிக் காலத்தின்போது எமது மக்கள் பட்ட துன்ப துயரங்களை எவரும் மறந்துவிட முடியாது. இதை மறந்துவிட்ட நிலையில் கூட ஒரு சிலர் நடந்து கொள்வது வேதனை தருகின்றது. இவர்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலை நோக்காகக் கொண்டு செயற்பட்டாலும் மக்களின் வலியைப் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறானவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இந்தியாவின் நலனுக்காக நாம் அரசியல் செய்ய முடியாது. இந்தியாவின் சதிமுயற்சியினாலேயே நாம் இன்று இந்நிலைக்கு வந்துள்ளோம். இந்த ஐனாதிபதி தேர்தலிலும் இந்தியா தனது நலனைக் கருத்தில் கொண்டு யாருக்கு ஆதரவு வழங்க வேண்டுமென கூட்டமைப்புக்கு உத்தரவிடலாம். ஆனால் நாம் அதற்கு இணைந்துபோக முடியாது. எனினும் இந்தியாவின் சொல்லைத் தட்ட முடியாது எனத் தெரிவித்து அல்லது இராஐதந்திர காய் நகர்த்தல் எனக் கூறி எமது கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒரு சிலர் இந்தியாவின் உத்தரவுக்கு இணைந்துபோக முற்படலாம். ஆனால் அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமானால் அது பாதகமான நிலையையே ஏற்படுத்தும்.

ஐனாதிபதி வேட்பாளர்களுடன் நான்கு அம்சக் கோரிக்கை ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து ஆதரவு வழங்கலாம் எனக் கூறுவதெற்கெல்லாம் பின்னணிக் காரணங்கள் உண்டு. இவ்வாறான உறுதி மொழிகளுக்கு கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை மக்கள் மறந்துவிடவில்லை. தேர்தலின் பின்னர் எல்ல உறுதிமொழிகளும் காற்றில் பறந்துவிடும். எனவே இப்போதும் இவ்வாறான பசப்பு வார்த்தைகளைக் கூறி மக்களை ஏமாற்ற முடியாதுஎன்றார் ஜெயானந்தமூர்த்தி

மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்கனகரெத்தினம் எம்.பி தற்போதும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனினும் அவரின் விடுதலையில் கூட்டமைப்பு உரிய நடவடிக்கையோ முறையான அழுத்தமோ கொடுக்கவில்லை என்றே கூறவேண்டும். அவரை கட்சி ரீதியில் உரியவர்கள் சென்று பார்வையிட முயற்சிக்கவில்லை. என்றும் அவர் தெரிவித்தார்.

0 Responses to தேர்தலில் கூட்டமைப்பு இரு பிரதான வேட்பாளர்களுக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லை: ஜெயானந்தமூர்த்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com