Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கு மாகாணத்தில் நேற்று வீசிய 'வார்ட்' என்ற புயல்காற்றுடன் கூடிய அடைமழையினால் சுமார் 50 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். தடுப்புமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.

திருகோணமலைக்கு கிழக்கே 250 கிலோ மீற்றர் தொலைவில் மையம் கொண்டிருந்த வார்ட் புயல் காற்று நேற்று திங்கட்கிழமை இரவு கிழக்கு மாகாணத்திற்குள் புகுந்தது. மணிக்கு 80 மைல் வேகத்தில் வீசிய இந்த புயல் காற்றுடன் பெய்த அடை மழையினால் கிழக்கு தமிழீழத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மட்டக்களப்பில் வாகரை, வாழைச்சேனை, காத்தான்குடி, வவுணதீவு பிரதேசங்களும் திருகோணமலையில் மூதூர் கிழக்கு, ஈச்சிலம்பற்று பிரதேசங்களும் அம்பாறையின் பெரும்பாலான பிரதேசங்களும் கடும் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை சம்பூர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து பட்டித்திடல், மணற்சேனை, கிளிவெட்டி ஆகிய பிரதேசங்களில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மக்கள் பெருவெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது தற்காலிக குடியிருப்புகளின் கூரைகளை புயல்காற்று அடித்துச்சென்றுள்ளது. குடியியருப்புக்களுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. இதனால், அங்கிருந்து இடம்பெயர்ந்து அருகில் உள்ள பாடசாலைகளுக்குள் அவர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 70 சதவீதமான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மாவட்டத்தின் பெருவீதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணம் முழுவதும் மொத்தம் 50 ஆயிரம் மக்கள் இந்த கடும் காற்றினாலும் அடை மழையினாலும் பெரு வெள்ளத்தினாலும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சிறிலங்கா அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஏற்கனவே இடம்பெயர்ந்து சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்படாமலிருந்து தற்போது இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் உடனடி நிவாரண பணிகளை மேற்கொள்ளப்படவேண்டும் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.துரைரட்ணசிங்கம் சிறிலங்கா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

0 Responses to கிழக்கு மகாணத்தில் இயற்கை அனர்த்தம்: மின்னல் தாக்கி மூவர் பலி!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com