Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எம் உயிரிலும் மேலான தமிழீழ மக்களே!

பிறக்கப்போகும் புதிய ஆண்டு ஈழத்தமிழ் மக்கள் வாழ்வில் புதிய எழுச்சியையும், புதிய உத்வேகத்தையும், திடசங்கற்பம் பூணும் ஆண்டாகவும் அமையப்போகின்றது. கடந்த ஆண்டும் இறுதியாண்டும் ஈழத்தமிழ் மக்கள் எங்களுக்கு சொல்லெண்ணா துன்பத்தையும், துயரத்தையும் ஆற்றமுடியாத வடுக்களையும் வாழ்வான வாழ்வுவரை மறக்கவோ மன்னிக்கவோ முடியாத வரலாற்றை சிங்கள தேசமும் பாரததேசமும், இதற்கு துணைபோனவர்களும் தந்து சென்று விட்ட அதே நேரத்தில் ஈழத்தழிழ் மக்கள் மனதில் தாயகம் , தேசியம் , சுயநிர்ணயம் கொண்ட தமிழீழ தனியரசு என்ற வேள்விதீயினை இன்னும் கொழுந்து விட்டு எரியச்செய்துள்ளதையும், அதற்கு அண்மையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்மக்கள் கொடுத்திருக்கும் ஆணையும், சனநாயக அங்கீகாரமும் சிறீலங்கா, இந்தியாவையும் மற்றும் தமிழின அழிப்பிற்கு துணைபோன நாடுகளையும் சிந்திக்கவும், அந்த வரலாற்று வடுக்களில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்கின்ற சிந்திக்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.

இதே நேரத்தில் எமது மக்களின் உணர்வுகளை கூட தரமற்றதாக குற்றம் சாட்டியவர்களைக்கூட சிந்திக்கவும், எதிர்காலத்தில் மக்களின் ஆணைக்கும் மனவிருப்பத்திற்கும் ஏற்ற வகையிலேயே தமது அரசியல் செயற்பாட்டையும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதனையும் உணர்த்தியுள்ளனர்.

சிங்கள தேசம் தனது அரசியல் நிலைப்பாட்டால் அடிபணிந்து அதிபாதாளத்திற்கு செல்லும் ஓர் அரசியல் ஸ்திரமற்ற நிலைக்கு, தானும், தனது சிங்கள மக்களையும் கொண்டு செல்கின்றது. இந்த நிலையில் எமது தமிழீழ தேசத்தையும், மக்களையும் அதிலிருந்து காப்பாற்ற வேண்டிய தார்மீக கடமை புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களுக்கு உண்டு. இந்த நேரத்தில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் தீர்க்கதரிசனமாக 2005 ஆண்டு மாவீரர்நாள் உரையிலிருந்து கூறியதை பார்க்க வேண்டும்.

"சுயநிர்ணய உரிமைகோரி, தம்மைத் தாமே ஆட்சிபுரியும் அரசியற்சுதந்திரம் கோரி, தமிழீழ மக்கள் எழுப்பும் உரிமைக்குரலானது உலக மனசாட்சியின் கதவுகளைத் தட்டத்தொடங்கியுள்ளது. ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட தேசமாக அணிதிரண்டு நிற்கும் தமிழினத்தின் உரிமைக்குரலைச் சர்வதேச சமூகம் இனியும் அசட்டை செய்ய முடியாது. தமது அரசியல் தகமையைத் தாமாகவே நிர்ணயித்துக்கொள்ள எமது மக்கள் விரும்புகின்றார்கள். காலம் காலமாக அரச ஒடுக்குமுறைக்கு ஆளாகிய ஒரு தேசிய இன மக்கள் சமுதாயம் என்ற ரீதியில், தமது அரசியல் அபிலாசைகளைச் சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதே எமது மக்களின் அறைகூவலாகும்."

இந்த அறைகூவல் தமிழ்மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் உரக்க ஒலிக்க தொடங்கிவிட்ட அதே வேளை சிங்கள தேசத்தின் பொருளாதார பலத்தை இல்லாதொழிக்கும் பல்வகைச்செயற்பாட்டை நாம் முன்னெடுக்க வேண்டும். அதற்காக ஒரு ஒத்துழைப்பையும், ஏன் ஓர் அர்ப்பணிப்பையும் எமது மக்களும் அது சம்பந்தப்பட்டவர்களும் செய்துதான் ஆக வேண்டும்.

அதனால் இத்தனை நாள் எமது மக்கள் செய்த தியாகமும், அர்ப்பணிப்பும் ஒரு பங்கு பலன் கிடைக்கும் இந்த மாபெரும் அரசியல் பொருளாதார முன்னெடுப்பில் அனைத்து தமிழ் ஊடகங்களும், பத்திரிகைகளுக்கும், எழுத்தாளர்கள், மொழிவல்லுனர்கள், சட்டவாளர்கள், பொருளாதார வணிகத்துறை வல்லுனர்கள் அரசியல் ராஐதந்திரங்களை தெரிந்தவர்கள், நாளைய எமது இளைய சந்ததி இணைந்து கொள்ள வேண்டும். சரியான திட்டமிடல் ஊடாக சர்வதேச ரீதியாக நகர்த்தப்படல் வேண்டும்.

வரும் 2010ம் ஆண்டில் தாயகத்திற்கு வலிமைசேர்க்கும் வகையிலும், துன்பத்தை தந்தவர்கள் உலக நீதிக்கு முன்னால் நிறுத்தவும், எல்லாவற்றையும் இழந்து நிற்கும் எமது மக்களை கைகொடுத்து சந்தோசமாக வாழவைக்கவும், நாம் அனைவரும் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழீழ தனியரசை பெற்றிடுவதற்கு முனைப்போடு மாவீரர் தெய்வங்களிலும், மக்கள் மீதும் சத்தியமிட்டு உண்மையாக உழைப்போமாக.

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு.

என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் 2010 புதிய ஆண்டிற்கான செய்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com