Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தளபதி.கேணல்.கிட்டு

வீர வித்தாய் மண்ணில்: 02.01.1961
வீர காவியமாய் வங்கத்தில்: 16.01.1993

நிலைப்பெயர்: சதாசிவம் கிருஸ்ணகுமார்
நிலையுடன் பெயர்: கிட்டு அல்லது வெங்கிட்டு

தமிழீழ தேசியத்தலைவருக்கு மிக நெருக்கமானவராகவும்,அவரிடம் இராணுவப்பயிற்சி பெற்றவரும், அதி திறமைசாலியுமான தளபதி கேணல் கிட்டு, தனது 18 ஆவது வயதில் போராளியாக விடுதலைப் பயணத்தை ஆரம்பித்து, ஒரு பயிற்சி ஆசிரியராக, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக என ஒரு குறுகிய காலத்திலேயே தனது திறமையை நிரூபித்துக் கொண்டார்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறானது, பல ஆற்றல்மிகு போராளிகள், சிறந்த தலைமைத்துவப் பண்புள்ளவர்களை இனங்கண்டு, அவர்களைப் பயன்படுத்திப் பெருமை சேர்த்திருக்கின்றது. இந்த வரிசையில் அனைத்துத் துறைகளிலும் ஒரு சேரப் பிரகாசித்தோர் ஒரு சிலரே. அவர்களுள் ஒருவர் கேணல் கிட்டு.


எதனைச் செய்வதானாலும் நேர்த்தியாகச் செய்ய வேண்டும்" என்ற கோட்பாட்டைக் கொண்ட அவர், வாழ்ந்த போதும் தனது வாழ்வை முடித்துக்கொண்ட இறுதிக் கட்டத்திலும் தனக்குத் தரப்பட்ட பணியை நேர்த்தியாகச் செய்து முடித்தவர்.

விடுதலைப் போராட்டம் பரிணாம வளர்ச்சி கண்ட காலத்தில் கேணல் கிட்டு ஆற்றிய பங்களிப்பு மிக அளப்பரியது. பல்வேறு கெரில்லாத் தாக்குதல்களில் பங்கு கொண்டு தனது மன உறுதியையும், திறமையையும் நிரூபித்த அவர், 1985 இல் திம்புப் பேச்சுவார்த்தை நடைபெற்ற காலகட்டத்தில் தனது மதிநுட்பமான செயற்பாடுகளால் குடாநாட்டில் நிலைகொண்டிருந்த படையினரை முகாம்களுக்குள் முடக்குவதில் வெற்றி கண்டார்.

சகோதர இயக்கங்கள் மீதான தாக்குதல்கள் அவரது போராட்ட வாழ்வில் விமர்சனத்துக்குரிய ஒரு அத்தியாயமாக அமைந்திருந்த போதிலும் முன்னாள் போராளிக் குழுக்களின் பிற்காலச் செயற்பாடுகள் அவரின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


சிங்களப் படையினரை முகாம்களுக்குள் முடக்கியமை, தமிழர் போராட்டத்தில் மக்களைப் பாதுகாக்கக்கூடிய திறன் போராளிகளுக்கும் உள்ளது என்ற செய்தியைக் கூறியதென்றால் அதனைத் தொடர்ந்து அவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நிர்வாகம் போராளிகளால் ஒரு தனியரசை நிர்வகிக்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது.

தொடர்ந்து வந்த காலங்களில் அவர் வித்திட்ட போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான சிநேகபூர்வமான உறவு இன்று வரை பிரிக்க முடியாத ஒரு உறவாக இருப்பதைக் காணலாம்.

தாக்குதல் சம்பவங்களே ஊடகங்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்து வந்த காலகட்டத்தில் நடிகர் விஜய குமாரதுங்க உள்ளிட்ட குழுவினரின் யாழ். வருகை, கைதிகள் பரிமாற்றம் என பல விடயங்களூடாகவும் ஊடக அவதானத்தைப் பெறுவதில் கிட்டு வெற்றி கண்டார். அது மட்டுமன்றி, இத்தகைய செயற்பாடுகள் ஊடாக தமிழர் போராட்டத்தின் நியாயத்தை சிங்கள மக்களுக்கு விளக்குவதற்கான வாய்ப்பும் அவருக்குக் கிட்டியது.

1987 மார்ச் இறுதியில் தேசத்துரோகி ஒருவனின் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்த கிட்டு தனது மனஉறுதியால் முன்னைய வேகத்துடனும், திடகாத்திரத்துடனும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பவராக வளர்ந்து வந்தார்.

இந்தியப் படையினர் இலங்கையில் நிலை கொண்டிருந்த காலகட்டத்தில் சிகிச்சைக்காக இந்தியா சென்றிருந்த அவர், மோதல்கள் உருவானதன் பின்னர் மோதலுக்கான காரணத்தையும் தமிழர் தரப்பு நியாயத்தையும் வெளிக்கொணர மிகவும் பாடுபட்டார். இந்தச் செயற்பாடுகளின் போது இந்திய நடுவண் அரசு அவரை மிகவும் துன்புறுத்திய போதிலும் கூட அவற்றை மிகவும் இலாவகமாக எதிர்கொண்டு தன்னுடைய குறியை அடைவதில் சிரத்தையுடன் செயற்பட்டார்.

90 இல் இலண்டனுக்குச் செல்ல வேண்டிய பணி தரப்பட்ட போது, அதனைக்கூட சிறப்பாக ஏற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். புலிகள்-பிரேமதாசா பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி விழும் முன்பாக, கிட்டுவும் அவரது மனைவி சிந்தியாவும் லண்டன் சென்றார்கள். அங்கு கிட்டுவின் இழந்த காலுக்கு ஏற்ற சிகிச்சை மேற்கொண்டதுடன், புலிகளின் பன்னாட்டுச் செயலகத்தை அமைக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார்.

உலக நாடுகளின் 52 நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் அலுவலகங்களை லண்டன் அலுவலகத்துடன் இணைத்தார். இதன்மூலம் வெளிநாடுகளில் வசித்த ஈழத் தமிழர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழர்களும் ஒன்றிணைந்தனர்.

அதிகம் படித்திராத போதிலும் வாசிப்புக்கு ஊடாகத் தன்னை வெகுவாக வளர்த்துக் கொண்டிருந்த அவர் சர்வதேசப் பரப்புரைகளின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தவற்றை அவரோடு இணைந்து பணியாற்றியவர்கள் இன்றும் கூட நினைவில் இருத்திச் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது..

மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேசி புலிகளின் பிரச்னைகளையும், ஸ்ரீலங்கா அரசு இழைத்துவரும் அடக்குமுறைகளையும் விவரித்தார் கிட்டு. இந்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை அரசுகள், கிட்டுவை லண்டனிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தின. இறுதியாகக் கிட்டு, லண்டனிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஐரோப்பிய நாடுகளில் ஒரு நாடோடி போலத் திரிந்தார். எந்த நாட்டில் இருந்தாலும், அந்நாட்டிலிருந்தே தனது அலுவலக வேலைகளைச் செய்தார்.

மேற்குலக நாடுகளில் பிரபலமான குவேக்கர்ஸ் அமைப்பு இலங்கை வந்து, அரசுத்தரப்பு மற்றும் புலிகளுடன் பேசி, சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வலியுறுத்தியது. இலங்கையைத் தவிர்த்து வேற்று நாடொன்றில் அந்தப் பேச்சு அமைவது என முடிவெடுக்கப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் கிட்டு இருந்ததால், அவர் தமிழீழத்தேசியத்தலைவருடன் நேரில் பேசி, முடிவெடுக்க, தமிழீழம் நோக்கிப் புறப்பட்டார்.

1993-ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம் நாளன்று, எம்.வி.அகதா என்ற கப்பலில், குவேக்கர் பீஸ்| அமைப்பின் செய்தியோடு சமாதானத் தூதுவனாக இந்தியாவின் கடல் எல்லைக்கு 440 கடல் மைலுக்கு அப்பால் வந்து கொண்டிருந்தார். அவருடன் லெப்டினன்ட் கர்னல் குட்டிஸ்ரீ உள்ளிட்ட 9 போராளிகளும் உடன் வந்தனர்.அவரது கப்பல் சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் வழிமறிக்கப்பட்டது..

கப்பலை இந்தியாவை நோக்கித் திருப்பும்படி கேட்கப்பட்ட போதும். கிட்டு அதற்கு உடன்பட மறுத்தார். தான் எதற்காகச் செல்கிறேன் என்பதை அவர் விளக்கிய போதிலும் கூட அதனை ஏற்றுக் கொள்ளாத இந்தியா நயவஞ்சகமாகக் கப்பலையும் அதில் பயணம் செய்த பத்துப் போராளிகளையும் கைது செய்ய முயன்றது.

ஹெலிகாப்டர் மூலம் அதிரடிப் படைகள் கப்பலில் இறங்கி, கிட்டுவையும் அவருடன் வந்த போராளிகளையும் கைது செய்ய முயன்றனர். இரு நாள்கள் நடந்த இந்தப் போராட்டத்தில், அதிரடிப் படைவீரர்கள், கப்பலில் இறங்க முயன்ற நேரத்தில் கிட்டுவும் அவரது போராளிகளும் சயனைட் அருந்தி வங்கக்கடலில் வீரகாவியமானார்கள்.

உயிரைவிட மானத்தைப் பெரிதாக நினைக்கும் போராளிகள் தமது கப்பலை வெடித்துச் சிதறச் செய்து தமது உயிர்களைத் தியாகம் செய்து கொண்டனர். இதற்கூடாக தமது உறுதியை வெளிப்படுத்தியது மட்டுமன்றி இந்தியாவின் இரட்டை வேடத்தையும் அம்பலப்படுத்தினார்கள்.

தனது வாழ்நாள் முழுவதும் ஈழத் தமிழ் மக்களுக்காகவே செலவிடப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவருக்கு அந்த வாய்ப்பும் கிட்டியது

வங்கக்கடலில் கிட்டுவும் 9 போராளிகளும் வீரகாவியமான செய்தி அறிந்து ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தமிழினம் மற்றும் உலகளாவிய மனித உரிமை ஆர்வலர்கள் அனைவருமே கலங்கினர். ஆனால், வஞ்சகத்தனம் மிகுந்த இந்திய அரசு, சதிவேலைகளுக்காக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றபோது, கப்பல் சுற்றிவளைக்கப்பட்டதாக கூறியது. இந்தியக் கடல் எல்லைக்குள்ளேயே உட்பிரவேசிக்காத இந்தக் கப்பல் ஏன், எதற்காக இப்படிச் சுற்றி வளைக்கப்பட்டது என்பதற்கு யாரும் எந்தவித விளக்கமும் இன்றுவரை கொடுக்கவில்லை.

இதுபற்றித் புதுடில்லியில் உள்ள ராணுவ அதிகாரி கூறிய செய்தி, சென்னை நாளிதழ்களில் பின்வருமாறு இருந்தது. கிட்டு பயணம் செய்த கப்பலில் நிறைய ஆயுதங்களும் வெடிமருந்துகளும் இருந்தன. கப்பலை மடக்கிக் கொண்டுவரும்பொழுது, விடுதலைப் புலிகள் கப்பலை மூழ்கடிக்கும் வண்ணம் வெடிவைத்துவிட்டனர். தீப்பிடித்த கப்பலில் இருந்து ஒன்பது விடுதலைப் புலிகள் கடலுள் குதித்தனர். அவர்களைக் கடற்படை வீரர்கள் காப்பாற்றி, நமது கப்பலுக்குக் கொண்டுவந்து காவலில் வைத்தனர். கைதான விடுதலைப் புலிகளில் கிட்டு இல்லை. இவ்வாறு அந்தச் செய்தி கூறியது.

கிட்டுவின் இழப்பு, தேசியத்தலைவர் அவர்களுக்கு தாங்கமுடியாத சோகத்தை ஏற்படுத்தியது.
அவர் கிட்டுவின் வீரச்சாவினைத் தொடர்ந்து, வெளியிட்ட அஞ்சலியில், “என் ஆன்மாவைப் பிழிந்த சோக நிகழ்வு. அதனைச் சொற்களால் வார்த்துவிட முடியாது. நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக, தளபதியாக, என் சுமைதாங்கும் லட்சியத் தோழனாக இருந்தவர். இது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாற்பட்டது. ஒரே லட்சியப் பற்றுணர்வில், ஒன்றித்த போராட்ட வாழ்வில், நாங்கள் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில், ஒருவரையொருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர்வில், வேரூன்றி வளர்ந்த மனித நேயம் இது

கிட்டு ஒரு தனிமனித சரித்திரம். ஓய்வில்லாது புயல் வீசும் எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு. வங்கக் கடலில் பூகம்பமாக அவர் ஆன்மா பிளந்தது. அதன் அதிர்வலையில் எமது தேசமே விழித்துக் கொண்டது. கிட்டுநீ சாகவில்லை. ஒரு புதிய மூச்சாகப் பிறந்திருக்கிறாய்என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு போராளியாக, நல்ல நண்பனாக, சகோதரனாக, மக்கள் நலனில் அக்கறை கொண்ட சமூக சேவகனாக, இராசதந்திரியாக, புகைப்படக் கலைஞனாக, இறுதி வரை உறுதி குலையாதவனாக கேணல் கிட்டு வாழ்ந்த வாழ்க்கை ஒவ்வொரு போராளிக்கும் முன் மாதிரியானது எனக் கூறினால் மிகையாகாது.

தமிழிச்சி...

நன்றி - ஈழவிம்பகம்(மூலம்)

0 Responses to ”கிட்டு… நீ சாகவில்லை. ஒரு புதிய மூச்சாகப் பிறந்திருக்கிறாய்”: தேசியத்தலைவர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com