Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரச தலைவர் தேர்தலின் பிரதான வேட்பாளர்கள் இருவரும் இராணுவத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் என்பதால் தேர்தலில் பாரியளவில் வன்முறைச்சம்பவங்கள் ஏற்படலாம். எனவே தமிழ் மக்களின் மீது வன்முறைகள் திணிக்கப்படாதிருக்க இந்தியா உதவ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனனைச் சந்தித்துப் பேசினர்.இச்சந்திப்புக் குறித்து பி.பி.சிக்கு கருத் துத் தெரிவித்த போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் நடைபெறும் அரச தலைவருக்கான தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் சார்பான விடயங்கள் குறித்தும் அது தொடர்பான ஒரு ஆலோசனையைப் பெறுவதற்கும் நாம் இந்தியா வந்துள்ளோம். வெளிவிவகார அமைச்சின் செயலருடன் பேசியபோது நாம் எடுத்துள்ள நிலைகுறித்து கலந்துரையாடினோம்.

ஏற்கனவே தமிழ் மக்கள் எடுத்த முடிபின் அடிப்படையிலேயே எமது முடிபு எடுக்கப்பட்டது என்பதைச் சுட்டிக் காட்டினோம். இந்தத் தேர்தல் வன்முறை இல்லாது சரியான முறையில் நடைபெறவேண்டும் என்பது தொடர்பாக நாம் கலந்துரையாடியுள்ளோம்.

இந்திய அதிகாரிகளைச் சந்திப்பதற்கான ஏற்பாட்டை நாமே கோரியிருந்தோம். அதனடிப்படையில் சந்திப்புக்கள் நடைபெறுகின் றன. சரத் பொன்சேகாவை நாங்கள் ஆதரிப்பதாக எடுத்த நிலைப்பாடு குறித்தோ, அரச தலைவர் தேர்தல் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிபு கள் சரியானவையா என்பது குறித்தோ விவாதிக்கவில்லை. ஆனால் மக்களின் அபிப்பிராயப்படி செயற்படுமாறு இந்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

தேர்தலில் வன்முறைகள் எமது மக்களை நோக்கி வரக்கூடாது என்பது குறித்தும் அரச தலைவர் தேர்தலில் யார் வென்றாலும் எமது தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கையாளுவதில் இந்தியா முன்னுரிமை காட்ட வேண் டும் என்பதன் அடிப்படையிலும் இச் சந்திப்பின் நோக்கம் அமைந்தது.

இரண்டு பிரதான கட்சிகளின் தலைவர்களும் இராணுவத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் அவ்வகையில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அமைந்தாலும் தொடர்ச்சியான வன்முறைகள் இடம் பெறலாம் என்ற சந்தேகம் எமக்கு இருக்கிறது. அது தமிழர் தரப்பின் மீது கட்டவிழ்த்து விடப்படாதிருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்தியாவின் ஆலோசனையும் உதவியும் பெறும் நோக்கில் இச்சந்திப்பு அமைந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

0 Responses to யார் வெற்றி பெற்றாலும் தமிழர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படலாம்: இந்தியாவின் உதவியை கேட்கிறது கூட்டமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com