Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாக தமிழ் நெற் இணையத்தளம் மாத்திரம் பிரசாரம் செய்கிறதே தவிர, வேறு எவருமே சிறிலங்கா போர்க்குற்றம் புரிந்ததாக கூறவில்லை. சிறிலங்கா படையினர் மிகுந்த ஒழுக்கத்துடனும் தொழில்பக்தியுடனும் மேற்கொண்ட மனிதாபிமான மீட்பு நடவடிக்கை மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்கா தூதுவர் பாலித்த கோகன்ன தெரிவித்துள்ளார்.

டப்ளினில் நடந்துமுடிந்துள்ள இரண்டு நாள் மாநாட்டின் முடிவில் சிறிலங்காவை போர்க்குற்றமிழைத்த நாடாக அறிவித்துள்ள நிலையில் பாலித்த கோகன்ன வழங்கிய விசேட செவ்வி ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில் -

சிறிலங்கா படையினர் போர்க்குற்றம் புரிந்ததாக யார் கூறியது? ஏன் அந்த சொல்லை கூறுகிறீர்கள்? சிறிலங்காவில் அப்படி ஒன்றுமே நடக்கவில்லை. தமிழ் நெற் இணையத்தளம்தான் இவ்வாறான பிரசாரத்தை மேற்கொண்டுவருகிறது. சிறிலங்கா படையினர் மிகவும் நேர்த்தியாக மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் நினைத்திருந்தால் வேறு இடங்களில் இடம்பெறுவது போல குண்டுத்தாக்குதல்களையும் ஏவுகணைத்தாக்குதல்களையும் மேற்கொண்டிருக்கலாம். ஆனால், அவர்கள் தங்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்தி மக்களை காப்பாற்றியிருக்கிறார்கள். ஆகவே, போர்க்குற்றம் என்பது தொடர்பாக இங்கு பேசவே தேவையில்லை.

இது ஒருபுறமிருக்க, சர்வதேச குற்ற நீதிமன்றத்தின் சட்டங்கள் சிறிலங்கா அரசுக்கோ சிறிலங்காவை சேர்ந்த எந்த தனிநபருக்குமோ செல்லுபடியாகாது. அதற்குரிய சட்ட அதிகாரம் சர்வதேச நீதிமன்றுக்கு இல்லை. ஆகவே, போர்க்குற்றம் தொடர்பாக சிறிலங்காவில் யாரையும் தண்டிக்கும் அதிகாரம் சர்வதேச நீதிமன்றுக்கு கிடையாது.

இதேவேளை, சர்வதேச சமூகம் என்ற சொல்லை பயன்படுத்தும்போது அது தனியே மேற்கு நாடுகளை குறிக்காது. சீனா, ரஷ்யா, இந்தியா, தென்னாபிரிக்கா, நைஜீரியா என எத்தனையோ நாடுகள் சிறிலங்காவுக்கு நெருக்கமான நண்பர்கள் உள்ளனர். அவைதான் சர்வதேச சமூகம். சிறிலங்கா தொடர்பில் கரிசனை கொள்கிறோம் என்ற போர்வையில் சத்தம் எழுப்பிக்கொண்டிருக்கும் நாடுகளை மட்டும் சர்வதேச சமூகம் என்ற சொல்லினுள் அடக்கிவிடவேண்டாம்.

ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த 12 நாடுகளை 29 நாடுகளின் பெரும்பான்மையுடன் தோற்கடித்துள்ளோம். எமக்கு ஆதரவளித்த நாடுகளை பாருங்கள். அவைதான் சர்வதேச சமூகம். சிறிலங்கா தொடர்பில் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுவரும் இரண்டொரு நாடுகள் அல்ல.

- என்று கூறியுள்ளார்.

0 Responses to சிறிலங்கா போர்க்குற்றம் புரிந்ததாக தமிழ் நெற்றை தவிர வேறு எவரும் கூறியதில்லையாம்: பாலித்த கோகன்ன கூறுகிறார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com