எம் தாயகத்தின் நிலை யாவரும் அறிந்ததே. தமிழீழக் கனவையும் போராட்டத்தையும் சுமந்து செல்லும் பாரிய வரலாற்றுக் கடமை நம் கண் முன் காத்து நிற்கிறது. தாயகத்தில் எமது மக்கள் சொல்லொண்ணாத் துயரில் ஆழ்ந்து வரும் நிலையில், புலம் பெயர் தமிழர்களாகிய நமது கடமை இன்றையத் தேவை.
உலகத்தில் வாழ்ந்த யூத மக்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுக்கான தாயகத்தை மீட்டதைப் போல எமக்கான தாய் நிலத்தை எதிரிகளின் பிடியில் இருந்து மீட்டிட வேண்டாமா? எதிரிகளின் தொடர் பிடியில் வாழ்ந்து வரும் எமது மக்களும் சுதந்திர மனிதர்களாய் வாழ்ந்திடத்தான் வேண்டாமா? எம் மண்ணின் விடுதலைக்காய் களமாடி மடிந்த மாவீரர்களின் தியாகத்திற்கு வலுச் சேர்க்க எமது கடமையினை செய்திடத்தான் வேண்டாமா? "எம் அன்பிற்குரிய மக்களே! எமக்காய் நாம் போராடாவிட்டால் வேறு யார் போராடுவது?" என்று எம் முன் கேள்வியைத் தொடுத்துவிட்டு, சென்ற வருடம் இதே காலக்கட்டத்தில் மாவீரரானாரே ரூபன், அவரது கேள்விக்குள் இருக்கும் விடையை காண எமக்காய் காத்திருக்கிறது வரலாற்றுக் கடமை.
"பொங்குதமிழர்க்கோர் இன்னல் விளைந்தால் சங்காரம் நிசமென சங்கே முழங்கு" என்ற வரியினை நெஞ்சில் நிறுத்தி, புலம் பெயர் சூழலில் வாழ்ந்துவரும் வேளையில் எமக்காய் போராடும் களம் அரசியல்வழி என்பதனையும், எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்த நகர்வு, எமது சிந்தனையையும் இலக்கையும் இவ்வுலகிற்கு எடுத்தியம்புவதாக இருக்கவேண்டும் என்பதனையும் நாம் மறந்துவிடக்கூடாது.
வாருங்கள் உறவுகளே! எம் மண்ணிற்காய் நாம் செய்ய வேண்டியது, வட்டுகோட்டைப் பிரகடனத்தை மீளுறுதிப்படுத்தி எம் சுதந்திர வாழ்விற்கு உரமிடுவோம்.
நோர்வே ஈழத்தமிழர் அவை



0 Responses to டென்மார்க் மக்களே! வரலாற்றை மீட்டெடுக்க அணித்திரளுங்கள் - நோர்வே ஈழத்தமிழர் அவை