பெல்ஜியத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொன்சேகாவின் பிரதான செயலாளரும், அரச தலைவர் தேர்தல் பிரச்சார முகாமையாளருமான சேனக கரிப்பிரியா டி சில்வாவை நாடுகடத்துமாறு பெல்ஜியம் சிறீலங்கா அரசை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
இந்தவாரம் பொன்சேகாவுக்கு மிகவும் நெருக்கடியான வாரமாக அமைந்துள்ளது. சிறீலங்காவின் குற்றப்புலனாய்வுத் துறையினர் புதிய தலைவலி ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். பொன்சேகாவின் பிரதான செயலாளரும், அரச தலைவர் தேர்தல் பிரச்சார முகாமையாளருமான சேனக கரிப்பிரியா ஆர்னோல்ட் டி சில்வா ஒரு குற்றவாளி என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.
சேனகா ஜெனரல் பொன்சேகாவுடன் மும்பாய்க்கு சென்றிருந்தபோதும், பின்னர் அரச தலைவர் தேர்தல் வேட்புமனுவை பொன்சேகா தாக்கல் செய்யும் போது அவரை பொதுமக்கள் அறிந்துகொண்டனர். ஆனால் இந்த வாரம் கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு பெல்ஜியம் நாட்டு காவல்துறையினர் சில ஆவணங்களை அனுப்பியுள்ளனர்.
சேனகா சில்வாவை உடனடியாக நாடுகடத்துமாறு அதில் கோரப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு பெல்ஜியம் நாட்டில் உள்ள வங்கி ஒன்றின் கணக்குகளை தவறாக பயன்படுத்திய சேனகா அதில் இருந்த பணத்தை வேறு ஒருவரின் பெயரில் உள்ள கணக்கிற்கு மாற்றியதாகவும் அதன் பின்னர் அவர் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் சமூமளிக்காமல் நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் அவருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதுவரை காலமும் அவரின் இருப்பிடம் தெரியாது இருந்த பெல்ஜியம் காவல்துறையினர், கடந்த அரச தலைவர் தேர்தலில் அவர் வெளியே வந்தவுடன் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர். எனினும் பெல்ஜியத்திற்கும், சிறீலங்காவுக்கும் இடையில் நாடுகடத்தும் ஒப்பந்தங்கள் இல்லை என்பதால் குற்றப்புலனாய்வுத் துறையினர் இது தொடர்பில் அக்கறை எடுக்கவில்லை.
ஆனால் இது தொடர்பில் நீதியாளர் அலுவலகம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே, கொள்ளையில் ஈடுபட்டதற்காக சேனக 1980 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் 3 வருடங்களும், 6 மாதமும் சிறைத்தண்டனையை அனுபவித்ததாகவும், இராணுவத்தில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றப்புலானாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.



0 Responses to பொன்சேகாவின் செயலாளர் சேனக கரிப்பிரியா டி சில்வாவை நாடுகடத்துமாறு பெல்ஜியம் கோரிக்கை