Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சு நாட்டின் 93ம் பிரதேசத்தில் அமைந்துள்ள சேவரோன் பிரதேச தமிழ்சங்கததின் 15வது ஆண்டு நிறைவு விழா தமிழ்ச்சோலை மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள், சங்க உறுப்பினர்களினால் சிறப்பாக நடாத்தப்பட்டது.

நிகழ்வின் ஆரம்பமாக தாயகத்தின் விடுதலைக்கு வித்தாகிப்போனவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியின் முன்னால் மாவீரர் குடும்ப உறுப்பினரும், முள்ளிவாய்க்கால் போர் அழிவில் இறுதிவரை நின்று வைத்திய பணிபுரிந்தவர் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்து அமைதிவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலினை சேவரோன் மாநகர முதல்வரின் சிறப்பு ஆலோசகரும், தமிழ்மக்களின் அன்புக்கும் மரியாதைக்குரியவரான திரு. பத்திறிசியோ, தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம், தமிழ்ச்சோலை தலைமை செயலகம் சார்பாக திரு. சத்தியதாசன், தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையின் பொறுப்பாளர் திருமதி. நகுலேசுவரி அரியரட்ணம் அவர்களும் ஏற்றி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து பாடசாலைக் கீதம், வரவேற்புரை, வரவேற்பு நடனம் என 38 நிகழ்வுகள் மாணவர்களால் மேடையேற்றப்பட்டன. தமிழையும், மொழியின் அவசியத்தையும், தாய்மண் பற்றையும், சுதந்திரத்தையும், வெளிப்படுத்தும் பேச்சுக்களும், நாடகங்களும், நடனங்கள், பாடல்கள், ஒன்றுக்கொண்று ஆரோக்கியமான போட்டியுடன் தமது கலைவெளிப்பாடுகளை காட்டியிருந்தனர்.

குறிப்பாக பாடசாலையில் ஆங்கில மொழி கற்பிக்கும் கரி என்று அழைக்கப்படும் பிரெஞ்சு இளைஞர் தமிழ்மொழி கற்று வருவதோடு, தமிழில் உரையாற்றியும் நிகழ்வில் காவடி ஆட்டத்தில் தானும் ஆடி மக்களின் பலத்த கரகோசத்தை பெற்றுக்கொண்டார். தமிழ் சங்கம் தனியே பாடசாலைக்கு மட்டும் என்பதோடு இல்லாமல் மக்களின் நலனில் அக்கறை கொண்டது என்பதையும் சில நிகழ்வுகளில் காணக்கூடியதாக இருந்தது.

100 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விகற்கும் இப்பாடசாலையில் அனைத்து மாணவர்களையும் உள்வாங்கவேண்டும் என்ற பாடசாலை ஆசிரியர்கள், நிர்வாகத்தினரின் உயரி நோக்கினால் நிகழ்சி ஏற்பாட்டாளர்கள் சற்று சிரமத்தை எதிர்கொண்ட போதும் இவர்களின் அர்ப்பணிப்பினால் காலத்திற்கேற்ற நிகழ்வுகளை வழங்கி அனைத்து மக்களின் பாராட்டுதல்களை பெற்றனர்.

ஆனாலும் கல்விகற்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தாமாகவே முன்வந்து பாடசாலைக்கும் அதன் நிர்வாகத்தினருக்கு உதவுவார்களாக இருப்பின் இன்னும் இன்னும் சிறப்பாக செய்திருக்க முடியும் என்ற கருத்தும் சிலரிடம் இருந்து அறியக்கூடியதாகவிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. செல்வரதன் ( அலெக்ஸ்) தனது பிரதான உரையில் இப்பாடசாலையில் 15 வருடங்களுக்கு முன்பிருந்து இன்றுவரை பாடசாலை வளர்ச்சிக்கு உதவிவருகின்ற அனைவரையும் புகழாரம் சூட்டியதுடன் அவர்களுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர்கள் மூலம் மதிபளிப்பும் செய்திருந்தார்.

கடந்த ஆண்டு தாயகத்தின் துயரச்சூழ்நிலையில் நின்றதால் ஆண்டுவிழா நடாத்த முடியாமல் போனதையும் குறிப்பிட்டிருந்தார். தமிழ்மொழி வளர்சிக்காக முன்னெடுக்கப்படும் தமிழ்மொழிப்பரீட்சை, நடனத்தேர்வு, பாடல், நடன, பேச்சு, விளையாட்டு போட்டிகளில் பங்கு கொண்டவர்களுக்கும், வெற்றியீட்டியவர்களுக்கும், நினைவுப்பொருட்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

பாடசாலையின் வளர்ச்சி நிதிக்காக நல்வாய்பு சீட்டிழுப்பும் நடைபெற்று பரிசுகளும் அதனை வழங்கியவர்கள் மூலம் அதிஸ்ரசாலிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்வுகள் யாவும் இரவு 10.00 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது மக்களும், பெற்றோர்களும், மாணவர்களும் பெரும் மனநிறைவுடன் சென்றிருந்தனர்.

0 Responses to பிரான்சில் - சேவரோன் பிரதேச தமிழ்ச்சங்கத்தின் பதினைந்தாவது ஆண்டு விழா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com