Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுதந்திர தமிழீழ அரசை வலியுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்திர்கான வாக்கெடுப்பு ஈழத்தமிழ் மக்கள் வாழும் பல நாடுகளில் நடைபெற்ற போது எப்போது எமக்கு இந்த வாய்ப்பு கிட்டும் என எதிர்பார்த்து காத்திருந்த டென்மார்க் வாழ் ஈழத்தமிழ் மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமது புலம்பெயர் வாழ்வில் ஒரு வரலாற்றை படைத்ததாகவே நாம் கருதுகின்றோம்.

ஈழத்தமிழ் மக்களின் இறைமையை சிங்களம் பலவந்தமாக பறித்ததினால் நாம் எல்லோரும் நாடற்றவர்களாக, இன அடையாளமற்றவர்களாக சிங்களத்தின் சிறிலங்கன் எனும் மாற்றான் இனப்பெயரிலேயே புலம் பெயர் நாடுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளோம். இதனாலேயே நாம் டென்மார்க்கில் வாக்கெடுப்பை நாடாத்திய போது எமது உறவுகளின் எண்ணிக்கையை உத்தியோகபூர்வமாக பெறமுடியாத நிலை ஏற்ப்பட்டிருந்தது.

இலங்கைத்தீவை சேர்ந்த அனைவரையும் சிறிலங்கன் என டென்மார்க் அரசும் பதிவு செய்திருந்தது. அதன் அடிப்படையில் டென்மார்க்கில் 10.600 சிறிலங்கன்கள் வாழ்கின்றார்கள். அவர்களில் 7147 மக்கள் 18 வயதை நிரம்பியவர்கள் என அரச புள்ளிவிபரம் எடுத்துக்காட்டியது. இந்த எண்ணிக்கையானது தமிழ், சிங்கள மொழியை தாய் மொழியாக கொண்ட அனைவரையும் அடக்கியுள்ளது.

நாம் எமது சுதந்திர தமிழீழ தனியரசிற்கான வாக்கெடுப்பிற்கு மேற்கூறிய புள்ளிவிபரத்தையே அடிப்படையாக கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட போதும் நாம் தயங்காது வாக்கெடுப்பை நடாத்தினோம்;. டென்மார்க் தமிழர் பேரவையானது மக்களால் மக்களுக்காக கட்டியமைக்கப்பட்ட அமைப்பென்ற ரீதியில் மக்களின் கருத்தை பெற்றுக்கொள்ள தயங்காது வாக்கெடுப்பை நடாத்தியது.

சுதந்திர தமிழீழ அரசை மீள் நிறுவுவதென்பது தமிழீழ மக்கள் அனைவரின் அபிலாசை என்பதை இப்பொமுது டென்மார்க் வாழ் ஈழத்தமிழ் மக்களாகிய நாம் குடிநாயக முறையில் எடுத்துரைத்துள்ளோம்.

இந்த வாக்கெடுப்பில் பல பொய் பிரச்சாரங்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தான் எமது மக்கள் கலந்து கொண்டார்கள் என்பது எமக்கு நன்கு தெரியும். சிறிலங்கா அரச ஊதுகுழல்களோ எடுபிடிகளோ எமது மக்களின் அரசியல் அபிலாசையை நசுக்கமுடியாது என்பது மீண்டும் ஒரு முறை நிருபணமாகியுள்ளது.

இந்த வாக்கெடுப்பை நடாத்திய TNS Gallup என்ற சுயாதீன அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது தற்காலிக அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதனை தொடர்ந்து சகல வாக்கெடுப்பு மையங்களிலும் சேகரிக்கப்பட்ட தகவல்களை ஆய்வு செய்து TNS Gallup நிறுவனம் நேற்று தனது டென்மார்க் மொழியிலான 5 பக்கங்களை கொண்ட இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆங்கில மொழியலான அறிக்கை வரும் நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்கப்படுகின்றது.

TNS Gallup இன் இறுதி அறிக்கை தனது தற்காலிக அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்கெடுப்பு முடிவை வலியுறுத்தியுள்ளது. அதாவது இந்த வாக்கெடுப்பில் 4147 மக்கள் கலந்துகொண்டதாகவும் அதில் 98.2 வீதமானவர்கள் சுதந்திரதமிழீழ அரசை வலியுறித்தியும் 0,5 வீதமானவர்கள் எதிராகவும் 1,3 வீதமானவர்கள் கருத்து எதுவும் தெரிவிக்காமலும் வாக்களித்திருந்தனர்.

அறிக்கையின் இறுதியில் TNS Gallup தனது அறிக்கையின் தொகுப்பாக வாக்களிக்காத அனைவரும் சுதந்திர தமிழீழ தனியரசை வலியுறுத்துவதை எதிர்த்து வாக்களித்தாலும் இந்த வாக்கெடுப்பின் முடிவாக அதிகப்படியான மக்கள் சுதந்திர தமிழீழ தனியரசை வலியுறுத்துவதாகவே அமையும் என கூறியுள்ளனர். முழுமையான அறிக்கையை www.tamilvalg.dk எனும் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

டென்மார்க்கில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் ஒரு சிறிய பகுதியினரான தமிழீழ மக்கள் அனைத்துலகமீது தாங்கள் கொண்டுள்ள அதிருப்தியின் காரணமாக கலந்து கொள்ளாததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

டென்மார்க் தமிழர் பேரவையின் தேர்தல் குழு இந்த வாக்களிப்பு தொடர்பான மீள்பார்வை ஒன்றுகூடலை வரும் 13ம் நாள் நடாத்தவுள்ளனர். 32 வாக்களிப்பு மையங்களிலும் பணியாற்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் ஒன்று கூடி வாக்களிப்பு தொடர்பாக ஆராயவுள்ளனர்.

எமது இந்த வாக்கெடுப்பு தொடர்பான செய்திகள் மற்றும் விளம்பரங்களை மக்களுக்கு எடுத்துச்செல்ல பாலமாக செயல்பட்ட இணையத்தளங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி உறவுகளுக்கும் தேர்தல் செலவிற்காக எமக்கு நிதி உதவியளித்த அனைவருக்கும் எமது நன்றிகள். நிதி உதவியளித்தோர் விபரம் மற்றும் கணக்கறிக்கை விரைவில் எமது தேர்தல் குழுவின் www.tamilvalg.dk என்ற இணையத்தளத்தில் பதிவேற்றப்படும்.

ஏற்கனவே டென்மார்க் அரசு இந்த வாக்கெடுப்பு தமக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர். ஆனால் எமது மக்களின் நிலையான பாதுகாப்பு என்பது இறைமையுள்ள சுதந்திர தமிழீழ அரசை மீள் நிறுவுவதிலேயே தங்கியுள்ளது என்பதால் எமது அரசியல் அபிலாசையை எடுத்துரைத்து கொண்டே இருக்கவேண்டியுள்ளது. எமது அரசியல் பாதை எம்மக்களின் நிகழ்சி நிரலில் தான் நகரவேண்டும். இன்று இலங்கை அரசால் எமது மண்ணில் திணிக்கப்பட்ட தேர்தலில் கூட எமது அரசியல் வாதிகள் எமது மக்களின் அபிலாசையை மதிக்காமல் வேறு சக்திகளின் நிகழ்சி நிரலில் நகர நாம் அனுமதிக்கக்கூடாது.

மக்களின் அரசியல் அபிலாசையினை மதிக்கும் அரசியல் வாதிகளுக்கு புலம் பெயர் மக்களாகிய நாம் உறுதுணையாக செயல்படுவதுடன் அவர்களை எமதுறவுகளுக்கு வெளிக்காட்டவும் வேண்டும். தமிழீழ அரசை வலியுறுத்தும் வட்டுக்கேட்டை தீர்மானத்தின் அடிப்படையில் அரசியல் பணியாற்ற முனையும் அனைத்து அரசியல் சக்திகளையும் நாம் அதரிப்போம். டென்மார்க் தமிழர் பேரவை இந்த தேர்தலில் பங்குகொள்ளும் தமிழ் அரசியல் வாதிகளின் செயல்பாடுகளை அவதானித்துவருவதுடன் டென்மார்க் வாழ் தமிழீழமக்களையும் அவ்வாறே அவதானித்து உங்கள் ஆக்கபூர்வமாக கருத்துக்களையும் ஆதரவையும் அவர்களுக்கு வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கை அரசு தனது சகல பலத்துடனும் தேர்தலில் இறங்கியுள்ளது. ஆகவே தமிழீழத் தனியரசை வலியுறுத்தி தேர்தலில் போட்டியிடும் எமது உறவுகளுக்கு நாம் பொருளாதார உதவிகளை செய்ய வேண்டிய தார்மீக கடைமையும் எமக்குள்ளது. தமிழீழ மக்கள் 2004ம் ஆண்டு வழங்கிய ஆணையை மதித்து செயலாற்றுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பை நாம் வலியுறுத்த வேண்டும்.

தொடர்ந்து வரும் வாரங்களில் டென்மார்க் தமிழர் பேரவையின் மானிட விவகாரகுழுவினர் போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவத்தின் வேண்டுகோளுக்கமைய 1958ம் ஆண்டு முதல் இன்று வரை நடைபெற்ற போர் குற்றங்கள், மனிதவுரிமை மீறல்களால் தமது உறவுகளை இளந்து தவிக்குக்கும் டென்மார்க் வாழ் ஈழத்தமிழ் மக்களின் விபரங்களை சேகரிக்கவுள்ளனர். சேகரிக்கப்படும் ஆவணங்களின் இரகசியம் காப்பாற்றப்பட்டு போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவத்தினால் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களிடம் சாட்சிகளாக ஆவணப்படுத்தப்படும்.

டென்மார்க் தமிழர் பேரவை மற்றய புலம்பெயர் நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள பேரவைகள், மக்கள் அவைகளுடன் இணைந்து தொடர்ந்து தமிழீழ தனியரசை வலியுறுத்தி செயலாற்றும். புலம் பெயர் தமிழ் மக்களின் சனநாயக செயல்பாடுகளால் திணறியுள்ள இலங்கை அரசு இந்த அமைப்புக்களின் செயல்பாடுகளை முடக்க முனைந்து வருவதை நாம் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. அதே போல் சில மேற்குலக நாடுகளும் தமது நிகழ்சி நிரலை தமிழ்மக்களுக்குள் திணிக்க தடையாக எழுந்துள்ள இந்த சனநாயக அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்க முயலலாம் ஆனால் நாம் எமது மக்களின் பலத்துடன் சனநாயக வழியில் தொடர்ந்து எமது தாயக விடுதலைக்காக குரல்கொடுத்து வருவதை யாராலும் முடக்கமுடியாது.

எமது நிலம் எமக்கு வேண்டும் என ஒன்றாய்க் கூடிக் குரல்கொடுப்போம்!

எமது இலட்சியத்தில் நியாயமுள்ளது!, எமது உடலில் உண்மையின் பலமிருக்கிறது! நாம் வீழமாட்டோம். எத்தனை முறை விழுகிறோம் என்பது முக்கியமல்ல. அத்தனை முறையும் எழுந்திருக்கிறோம் என்பது தான் முக்கியம!; ஆம் நாம் விழ விழ எழுவோம.!

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்

டென்மார்க் தமிழர் பேரவை

டென்மார்க்

0 Responses to வரலாறு படைத்த டென்மார்க் வாழ் ஈழத்தமிழ் மக்கள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com