ராஜபக்சேவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்:
சிங்கப்பூரில் வெளியாகும் ஸ்ரெய்ட் ரைம்ஸ் பத்திரிகைக்கு நீங்கள் அளித்த பேட்டி விபரம் இலங்கை ஊடகங்களில் வெளியானதை என்னால் பார்க்க முடிந்தது. அந்தப் பேட்டியில் எனது அன்புக் கணவரான ஜெனரல் சரத் பொன்சேகா அரசியல் அனுபவமில்லாத முட்டாள் எனத் தெரிவித்திருப்பதைக் கண்டு நானும் எனது குடும்பமும் கவலையும் வேதனையும் அடைந்தோம்.
இவ்வாறு கூறியிருப்பது பத்து மாதங்களுக்கு முன்னர் அவர் உலகின் மிகச்சிறந்த இராணுவத் தளபதி என்று புகழாரம் சூட்டியது நீங்கள் தானா என்று நான் வியப்படைகின்றேன்.
பயங்கரவாதத்திடமிருந்து எமது மண்ணை மீட்டெடுத்ததன் பின்னர் நீங்களும் உங்கள் அரசும் நிமிடத்துக்கொரு தடவை என்ன கூறினீர்கள். எமது படைகளுக்குத் தலைமைத்துவத்தைக் கொடுத்த இராணுவத் தளபதியின் புத்திசாதுர்யமான போர்த்திட்டம் குறித்து முழு நாடுமே பெருமைகொள்வதாக அல்லவா சொன்னீர்கள்.
அன்று போர் வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் வெற்றிக் கேக்கை வெட்டுவதற்காக உரிமையானவர் ஜெனரல் சரத்பொன்சேகாவே என்று பகிரங்கமாகக் கூறி அவரைக்கொண்டே கேக்கை வெட்டியதையும் மறந்துவீட்டீர்களா? இன்று யுத்த வெற்றியின் சூடு தணிவதற்குள் அவை அனைத்தும் மறக்கப்பட்டவையாகிப் போயுள்ளன.
எனது கணவர் நீங்கள் சொல்வது போன்று அரசியல் தெரியாதவர் என்றால் அவ்வாறான ஒருவருக்குப் பயந்து சட்டவிரோதமாக கைது செய்து தடுத்துவைத்துப் பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தியிருப்பது எதற்காக எனக் கேட்க விரும்புகின்றேன். இதனை என்னால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது.
ஒரு இராணுவ வீரரை சர்வதேச ஊடகத்தின் வழியாக முட்டாள் என அவமானப்படுத்துவது நாட்டின் ஜனாதிபதிக்கு உகந்த செயலா என்று எண்ணிப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனது கணவருடன் அவரது ஆதரவாளர்களையும் கைதுசெய்தது தங்களுக்கும் அரசுக்கும் எதிராக அரச விரோதச்சதி செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இன்று அந்த ஆதரவாளர்கள் சகலரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சதிக்குற்றச்சாட்டு பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனது கணவர் இருட்டறைக்குள் அடைக்கப்பட்ட நிலையில் மனவேதனையுடனிருக்கிறார். இந்தத் துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்தியவர் நீங்களேதான். இந்தப் பாவத்துக்கு உங்களால் ஒருபோதும் பரிகாரம் தேடமுடியாது.



0 Responses to என் கணவர் முட்டாளா? ராஜபக்சேவுக்கு அனோமா சூடான கடிதம்