தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம், தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்குப் பலம் சேர்க்காது என்றும் தேசிய ஒற்றுமைக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியது என்றும் அரசு தெரிவித்துள்ளது.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் அடங்கிய விடயங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அடங்கி யுள்ளன என்றும் அரசு கூறியது.
கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய பிரதான கட்சிகள் பொன்சேகாவுடன் இணைந்து செயற்பட்டன.
பொன்சேகாவை ஆதரிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்தது. இதை நாம் அப்போது மக்களுக்குத் தெளிவுபடுத்தினோம். ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும் அவ்வாறு ஒப்பந்தம் எதுவுமில்லை என்று அப்போது கூறின. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதுவும் பேசாது மௌனமாக இருந்தது.
இப்போது நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட்டுள்ளது. நான் ஜனாதிபதித் தேர்தலின்போது சுமத்திய குற்றச்சாட்டை இத்தேர்தல் விஞ்ஞாபனம் நியாயப்படுத்தியுள்ளது.
வடக்கு, கிழக்கு மீள் இணைப்பு உள்ளிட்ட பல விடயங்கள் அந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளன. இந்த விடயங்களே பொன்சேகாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலும் உள்ளன.ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஜே.வி.பியோ வாய் திறக்கவில்லை. தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் இச்சந்தர்ப்பத்தில் இத்தேர்தல் விஞ்ஞாபனம் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப ஒருபோதும் பலம் சேர்க்காது. தேசிய ஒற்றுமைக்கு இந்த விஞ்ஞாபனம் ஆபத்தாகவே அமையும். என்றார்.



0 Responses to த.தே.கூ தேசிய ஒற்றுமைக்கு ஆபத்தாம்!