தமிழகத்தில் கடந்த ஓரிரு நாட்களுக்குள் ஒன்பது இலங்கைத் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அறியவந்துள்ளது.சிறிலங்காப் படையினரின் புலனாய்வு பிரிவின் கீழ் தமிழகத்தில் தமிழ் இளைஞர்களை கடத்தும் நடவடிக்கையில் இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோவும் ஈடுபட்டுள்ளதாக தமிழகத்தில் இருந்து கிடைக்கம் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் வெளிப்பாடாக அண்மையில் தமிழகத்திற்கு சென்றிருந்த விடுதலைப் புலிகளின் விளையாட்டுத்துறையின் பொறுப்பாளராக இருந்த பாப்பா மற்றும் திரவிடன் ஆகியோர் ஈழத்தமிழ் இளைஞர்களின் விபரங்களை திரட்டி இளைஞர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் இதன் தொடர்ச்சியாகவே தற்போது ஒன்பது வரையான தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
வன்னி முள்ளிவாய்கால் முடிவின் ஓராண்டான எதிர்வரும் மே மாதத்திற்கு பின்னான காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி கொள்ளலாம் என அறிந்துள்ள புலனாய்வு அமைப்புக்கள் அதற்கு முன்பாக தமிழகத்தில் இருந்து செயற்படுவதாகக் கருதும் போராளிகளை அடையாளம் கண்டு அவர்களை கடத்துவதன் ஊடாக விடுதலைப் புலிகளின் ஒருங்கிணைக்கும் செயற்பாட்டினை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியவந்துள்ளது.
இதேவேளை, தமிழகத்தில் மேலும் பல தமிழ் இளைஞர்கள் றோவினால் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. சிறிலங்காவின் படைப்புலனாய்வாளர்களினால் அனுப்பப்பட்ட பாப்பாவும் திராவிடனும் தமிழகம் சென்னையின் வளசரபாக்கம், மடிப்பாக்காம், நீலாங்கரை மற்றும் திருச்சி, மதுரை போன்ற இடங்களில் உள்ள ஈழத்தமிழர்களின் விபரங்களை கிய+ப்பிரிவு காவல்துறையினர் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து அண்மைய ஓரிரு நாட்களில் வளசரபாக்கம் பகுதியில் ஒன்பது தமிழ் இளைஞர்கள் கியூபிரிவு காவல்துறையினரால் மர்மமான முறையில் கடத்தப்பட்டு செங்கல்பட்டு சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சம் கோரி தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளை கைதுசெய்து, கடத்திச்சென்று விசாரிக்கும் நடவடிக்கையில் இந்தியாவின் றோ புலனாய்வு அமைப்பு முதன்மையுடன் செயற்படுகின்றது. இந்நிலையில் தமிழகத்தின் சென்னையில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளின் விபரங்கள் கியூப்பிரிவு காவல்துறையினரால் வீடு வீடாக சோதிக்கப்படுகின்றது. அத்துடன் ஆள் அடையாத்திற்கும் உட்படுத்தப்படுவதால் தமிழகத்தில் உள்ள தமிழ் இளைஞர்கள் அச்சத்துடன் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Responses to தமிழகத்தில் புலனாய்வுய்துறையினரால் இலங்கைத் தமிழர் இளைஞர்கள் கடத்தல்