அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு மனிதாபிமான திட்டத்தின் கீழ் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவில் அனைத்து மாநிலங்களிலும் குடியேற்றி புதிய வாழ்வை ஆரம்பிக்க வழி வகுக்க வேண்டும் என அவுஸ்திரேலிய தமிழ் கலாசார கழகத்தின் பொதுச் செயலாளரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு அமைப்பின் பிரதிநிதியும் அகதிகள் நலன் பேணும் அமைப்பின் தலைவருமான நா.இ.விக்கிரமசிங்கம், ஐ.நா. மற்றும் ஆசி வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவ்வேண்டுகோளில் மேலும்,
"இலங்கையில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக தமது உடைமைகள், வாழ்விடயங்கள், உடன்பிறப்புக்கள், நெருங்கிய உறவினர்களை இழந்து சொந்த மண்ணில் அகதிகளாக்கப்பட்டு தமது உயிரைக் காக்க வாழ்வா சாவா என்ற சவாலில் படகுகள் மூலம் ஆழ்கடலில் எத்தனையோ துன்பங்களுக்கு மத்தியில் இங்கு வந்து சேர்ந்தும் மீண்டும் துன்பக் கடலில் தவிக்கிறார்கள்.
இலங்கையில் இடைத்தங்கல் முகாம் என்ற பெயரில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டு இன்று வரை இவர்களின் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்படவில்லை. சுமார் 1 லட்சம் சிறுவர் சிறுமியர் போசாக்கின்மையாலும் போர்க் கொடுமையால் உள்ளத்தால் பாதிக்கப்பட்டும் இருப்பதை வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர், யுவதிகள் கடந்த 10 வருடங்களாக சிறைக் கூடங்களில் வாடி மடிகின்றார்கள். விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் சுமார் 12,000 இளைஞர், யுவதிகள் விசேட தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் உட்பட வயோதிபர்கள்கூட சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இடைத் தங்கல் முகாம்களிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பலர் புனர்வாழ்வு இன்றித் தவிக்கும் நிலையில் உள்ளனர். தமிழ் இளைஞர்கள் காணாமல் போதல், கடத்தப்படுதல் போன்ற மனித உரிமை மீறல்கள் அனைத்திலும் தப்பிப் படகுகள் மூலம் கிறிஸ்மஸ் தீவுகள் வரை வந்துள்ளனர்.
இலங்கைத் தமிழ் அகதிகளை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக அகதிகள் அந்தஸ்து வழங்கி அவுஸ்திரேலியாவில் மறுவாழ்வு அமைக்க ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்மஸ் தீவிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பில் மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்"எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Responses to கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையருக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு வேண்டுகோள்