Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

"தமிழ் மக்களின் பிரதிநிதி என்ன பேசவேண்டும் என்பதை மக்கள் தான் கூறவேண்டுமே தவிர, ஜனாதிபதி கூறமுடியாது".என்று தெரிவித்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்றத் தேர்தலில் தெளிவான முடிவை தமிழ் மக்கள் எடுக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

யாழ்நகரில் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது கருத்து தெரிவித்த சம்பந்தன்;"பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த்தரப்பை பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்போவதாகவும் புலிகள் கேட்டதை அவர்கள் கேட்கக்கூடாது என்று ஜனாதிபதி கூறியிருப்பது அவரின் பேச்சுச்

சுதந்திரம் என்றும் ஆனால், அதுவே இறுதியான தீர்மானமாகிவிடாது" என்றும் கூறினார்.இது தொடர்பாக சம்பந்தன் மேலும் தெரிவித்ததாவது;"ஜனாதிபதியின் கூற்று அவரது பேச்சுச்சுதந்திரம். அதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றோ அல்லது அவருடைய கருத்துத்தான் இறுதி முடிவென்றோ இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக சர்வதேச சமூகம் அவதானித்துக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்கள் மூலம் மக்கள் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ள வேண்டும்.

எம்மைப் பேச்சுக்கு அழைப்பதாகக் கூறியிருப்பதை நாம் வரவேற்கின்றோம். எமது மக்களுக்காக முழுமனதோடு பேச்சுகளில் பங்கு பற்றவும் செய்வோம். ஆனால், நாம் என்ன பேசவேண்டும் என்பதை மக்கள் தான் கூறவேண்டும்.ஜனாதிபதி கூறமுடியாது.

மேலும் வடக்கு, கிழக்கை உச்ச நீதிமன்றம் பிரித்துள்ளதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.நாம் ஒரு தேசிய இனம்.வடக்கு, கிழக்கு நாம் பூர்வீகமாக வாழ்ந்த இடங்கள். அற்ப, சொற்ப சலுகைகளுக்காக நாம் விலை போக முடியாது. பண்டாசெல்வா ஒப்பந்தத்தின் மூலமும் டட்லிசெல்வா ஒப்பந்தத்தின் மூலமும் வடக்கு, கிழக்கு எம் தாயகம் என்பதை முன்பு அரசு ஏற்றிருக்கிறது.அந்த நிலைப்பாட்டில் விட்டுக் கொடுப்பிற்கோ தளர்வு நிலைக்கோ இடமில்லை.

எங்களுடைய மண்ணில் இன்று நடப்பதென்ன? உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் எம் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுக் கிடக்கின்றது. ஏன் கட்டுநாயக்காவிலும் கொலண்ணாவவிலும் பாதுகாப்பு வலயங்கள் இல்லையா? மக்கள் வாழவில்லையா? இன்று 9,32 பாதைகளில் பாரிய படைமுகாம்கள் அமைக்கப்படுகின்றன.குறிப்பாக கௌதாரிமுனையில் நடப்பதென்ன? வலி. வடக்கிலும் சம்பூரிலும் நடப்பதென்ன? புலிகளோ ஆயுதமோ இல்லாதபோது பாதுகாப்பு வலயங்கள் மட்டும் எதற்காக? இந்த அடிப்படையைக் கூடச் சிந்திக்கத் தெரியாதவர்களல்ல எம்மக்கள். தன்மானமுள்ள எந்தத் தமிழனும் ஆளும் கட்சிக்கோ அது சார்பான கட்சிக்கோ வாக்களிக்கமாட்டான். அந்த வரலாற்றுத் தவறைச் செய்யவேண்டாம்.

எங்களுடைய இளைஞர்,யுவதிகள் ஏன் சிறையில் அடைக்கப்படவேண்டும். 1971,1988,1989 ஆண்டுகளில் ஜே.வி.பி. கிளர்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு ஏன் எம் இளைஞர்,யுவதிகளுக்கு வழங்க முடியாது? இவை பற்றி மக்கள் நன்றாகச் சிந்தியுங்கள்.நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் எமக்கொரு ஆணையை வழங்குகின்றபோது அந்த ஜனநாயக அங்கீகாரத்தை அரசு உதாசீனப்படுத்த முடியாது.

வடக்கில் குறிப்பாக கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை தாம் மீளக்குடியமர்த்திவிட்டதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் நடப்பதென்ன? முகாம்களில் உள்ள மக்களை வெளியேற்றிவிட்டு அவர்களுக்கான அடிப்படை வசதிகள் எதனையும் செய்து கொடுக்காமல் மீள்குடியேற்றிவிட்டதாகப் பிரசாரம் செய்து வருகின்றது. உண்மையில் இந்த அரசாங்கத்திடம் மீள்குடியேற்றம் மற்றும் மக்களின் தேவைகள் தொடர்பில் எந்தத் திட்டமும் இல்லை. நிச்சயமாக வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் மீள்குடியேற்றம் போன்றவற்றைச் செய்வதற்கான பொறுப்பு கூட்டமைப்பிடம் தான் வழங்கப்படவேண்டும். நாங்களே மக்களின் உணர்வுகளை நன்றாக உணர்ந்தவர்கள். கிளிநொச்சியில் மட்டும் சுமார் 42 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை மீளக்கட்டி மக்களை சுதந்திரமாக வாழ விட்டால் மட்டும்தான் அது மீள்குடியேற்றமாகும்.

போரினால் பாதிக்கப்பட்டு செயற்படமுடியாமல் உள்ள மக்களுக்கு புனர்வாழ்வு இல்லை,தொழிலில்லை,வீடுகளில்லை.இது தான் அரசின் மீள்குடியேற்றம். தாங்கள் தான் செய்யமாட்டோம் என்றால் எம் மக்களுக்கு உதவ அரச சார்பற்ற நிறுவனங்களைக் கூட அனுமதிக்காமல் இருப்பது குறித்து மக்கள் நன்றாகச் சிந்திக்கவேண்டும்".

0 Responses to தமிழ்த்தரப்பு பேசும் விடயத்தை மக்களே தீர்மானிகிக் வேண்டும்ஜனாதிபதி கூறமுடியாது: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com