தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் தேசம், சிங்களவர்களின் தேசம் என்ற அடிப்படையில் போட்டியிட்டு வருவதாக, கனடிய தமிழர் பேரவையின் (கனடிய தமிழ்க் காங்கிரசின்) பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை கூறியதாக வெளியான செய்திக்கு, கனடிய தமிழர் பேரவை மறுப்பு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் பேராசிரியர் சிறீரஞ்சன் அவர்கள், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய அடிகளார் கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவேல் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது) கனடியத் தமிழர் பேரவை எந்தக் கட்சிக்கும் ஆதரவான நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை எனவும், தமது பெயரில் வெளியான செய்திகள் தவறானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளில் இருந்து பிறளாத கட்சிக்கு மக்கள் சுயமாக வக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ள கனடியத் தமிழர் பேரவை, தேர்தல் களத்திலுள்ள அரசியல் கட்சிகள் தமது அடிப்படைக் கோட்பாடுகள் பற்றி மக்களிற்கு மயக்கமற்ற தெளிவான விளக்கத்தினைக் கொடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவின் உதவியுடன் சமஸ்டி முறையிலான தீர்வுக்கு முயற்சி செய்வோம் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின்னர், தமிழர்களின் தேசம், சிங்களவர்களின் தேசம் என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதாக, கனடிய தமிழர் பேரவையின் (கனடிய தமிழ்க் காங்கிரசின்) பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை கூறியதாக எமது செய்தித்தளம் உட்பட சில ஊடகங்களில் குறித்த செய்தி வெளியாகியிருந்தமை நினைவூட்டத்தக்கது.




0 Responses to கனேடிய தமிழர் பேரவையின் பேச்சாளரின் கருத்துக்கு கனேடிய தமிழர் பேரவை மறுப்பு!