கனடியத் தமிழர்களின் ஒருமித்த குரலாக ஓர் அமைப்பு இயங்க வேண்டும் என்ற உன்னத உயரிய நோக்குடன் கனடியத் தமிழர் பேரவையை (Canadian Tamil Congress) சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது.இதனது உருவாக்கத்திலும், கடந்தகால - நிகழ்கால செயற்பாடுகளிலும், பல்துறைசார் மக்களினது பங்களிப்பு நிரம்பவே உண்டு. கனடியத் தமிழ் மக்களைச் சீரிய பாதையில் இட்டுச் செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு நிறைந்த கனடியத் தமிழர் பேரவை, அதற்கான பாதையிலிருந்து வழிநழுவிச் செல்கின்றதோ என்னும் அச்சமும் கவலையும் மக்களிடையே இன்று ஏற்படத் தொடங்கியுள்ளது.
இத்தகைய நிலைக்கு மகுடம் வைப்பது போன்று, மேற்படி பேரவை சார்பில் கடந்த சில நாட்களில் வெளியான இரண்டு அறிக்கைகள் அமைந்துள்ளன. இலங்கையில் தற்போது நடைபெறும் தேர்தல் தொடர்பாக, பேரவையின் பேச்சானரெனக் கூறப்படும் டேவிட் பூபாலப்பிள்ளை என்பவர் தெரிவித்த கருத்துக்கு, அதே பேரவையின் தலைவரான பேராசிரியர் சிறிரஞ்சன் விடுத்த மறுப்பையே இங்கு நாம் சுட்டிக்காட்டுகின்றோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் தேசம் சிங்களவர்களின் தேசம் என்ற அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்டு வருவதாக டேவிட் பூபாலப்பிள்ளை கூறியதாக முதலில் வெளியான செய்திகள் தெரிவித்தன. இச்செய்தி அநேகமாக சகல ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது. இப்படியான ஒரு கருத்தை வெளியிடுவது கனடியத் தமிழர் பேரவைக்கு அவசியமற்றது என்ற கருத்தே பலரிடமும் காணப்பட்டது.
அதனைப் புரிந்துகொண்ட வகையில், பேரவைத் தலைவர் சிறிரஞ்சனின் மறுப்பறிக்கை வெளியானது நிலைமையைத் தணியவைத்துள்ளது. "டேவிட் பூபாலப்பிள்ளையின் அறிக்கைக்கும் கனடியத் தமிழர் பேரவைக்கும் சம்பந்தமில்லை. தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவான நிலைப்பாட்டைத் நாம் எடுக்கவில்லை" எனவும் தலைவர் சிறிரஞ்சன் ஆணித்தரமாகக் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.
ஓர் அமைப்பானது பேச்சாளர் எனப்படுபவர், அந்த அமைப்பின் குரலாக இருக்கவேண்டும். அமைப்பின் குரல் என்பது, அதனது நிர்வாகத்தின் நிலைப்பாடாக இருக்க வேண்டும். நிர்வாகத்தின் நிலைப்பாடானது அதனது நிர்வாகக் குழுவின் முடிவின் பாற்பட்டதாக இருக்கவேண்டும். ஆனால், கனடியத் தமிழர் பேரவைப் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளையின் கருத்தானது, அவரது இ~;டப்படியான ஒன்றாகவும் ஒரு தலைப்பட்சமானதாகவும் அமைந்திருந்ததை இப்போது கனடிய மக்களால் உணர முடிகின்றது.
வட்டுக்கோட்டைத் தீர்மான தேர்தலின் போதும் இப்படியான கருத்தையே பேரவை தெரிவித்து, பலரது எதிர்ப்பையும் சம்பாதிக்க நேர்ந்தது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இனிமேலாவது, தங்களின் பேச்சாளர் தம்போக்கில் அறிக்கைகளை விடாமல் பார்த்துக்கொள்வது கனடியத் தமிழர் பேரவையின் தலையாய கடமை. தவறினால், பேரவை எந்தப் பாதையில் போகிறது என்று அதனை உருவாக்கிய மக்களே கேட்க நேரிடும்.
ஆசிரிய தலைப்பு: உலகத்தமிழர் கனடா



0 Responses to கனடியத் தமிழர் பேரவை எங்கே போகின்றது?