வரவு எட்டணா ! செலவு பத்தணா ! அதிகம் ரெண்டணா ! கடைசி துந்தணா !கே. பாலசந்தரின் பாமா விஜயத்தை மறுபடி யாழ்ப்பாணத்தில் ரிலீஸ் செய்தால் 100 நாளைத் தாண்டி ஓடும்.
பழைய காலத்தில் பாலச்சந்தர் பாமா விஜயம் என்றொரு திரைப்படம் எடுத்திருந்தார். பாமா என்றொரு திரைப்பட நடிகை அந்த ஊருக்கு வருகிறார். அவரைப் பார்க்கவும், அவரிடம் ஏதோ இருக்கிறதென்று நினைத்தும் சுற்றவர இருக்கும் ஆண்களும், பெண்களும் பாமாவைக் காண்பதற்கு துடிக்கிறார்கள். பாமாவால் விடிவு வரப்போகிறதென அவர்கள் செய்யும் கோமாளிக் கூத்துக்களும், கடைசியில் எதுவுமே இல்லை என்ற உண்மையை அனைவரும் தெரியும்போது பாமா விஜயமும் புஸ்வாணமாகி திரைப்படமும் முடிந்துவிடுகிறது. இதுதான் பழைய பாலசந்தரின் பாமா விஜயம். இப்பொழுது சிறீலங்காவிற்கு நிருபாமா விஜயம் செய்வதால் பழைய பாமா விஜயத்தை அதனுடன் ரீமிக்ஸ் செய்து அப்பால் போக வேண்டியுள்ளது.
மேலும் .இந்தத் திரைப்படத்தில்தான் புகழ் பெற்ற தத்துவப்பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. இது இலங்கையில் இன்றுள்ள சகல பிரச்சனைகளுக்கும் பொதுவான பாடலாக உள்ளது.வரவு எட்டணா !
செலவு பத்தணா !
அதிகம் ரெண்டணா !
கடைசி துந்தணா !
இதுதான் இன்றைய இலங்கைத் தமிழரின் நிலை. இந்தத் துந்தணா நிலையை மகிந்த ராஜபக்ஷ தீர்ப்பதாக வாக்குறுதி அளித்துள்ளதாக பழைய வன்னி பா.உ. கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.
எனினும் நிருபாமா விஜயத்தின் சில பக்கங்களை நாம் பார்க்க வேண்டும். முதலாவது இலங்கைத் தமிழர் போராட வேண்டும் என்று அமெரிக்க மனித உரிமைகள் கழக பிரதிநிதி இங்கிலாந்தில் வைத்து தெரிவித்துள்ளார். கோர்டன் பிரவுண், டேவிட் மிலிபான்ட் போன்றவர்கள் சிறீலங்கா அரசுக்கு ஏறத்தாழ எதிரான கருத்தை முன் வைத்துள்ளனர். உலகத் தமிழர் அமைப்பின் அழைப்பில் அவர்கள் போய் இந்தக் கருத்தை முன் வைத்துள்ளார்கள்.
இலங்கை தமிழருக்கு எந்தத் தீர்வு வழங்குவதானாலும் அங்கே புலிகளின் தலைவர் பிரபாகரன் இடம் பெறக் கூடாது என்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருந்தது. இப்போது இலங்கை அரசியல் ஆடுகளத்தில் அவர் இல்லை. இப்போது பந்து இந்தியாவின் காலடியில் வந்திருக்கிறது. இந்தியா ஏதாவது செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் ஒரு சில எதிர்கால ஆபத்துக்கள் உண்டு.
01. மேலை நாடுகள் ஈழத் தமிழருக்காக குரல் கொடுக்க ஆரம்பிக்கும். ஈழத் தமிழர் மேலை நாடுகளின் ஆதரவு பெற்ற சக்தியாக மாறக்கூடிய நிலை வரும். அது இலங்கையில் சிங்கள இராணுவத்தின் ஆயுத முனைக்குள்ளால் ஈழத் தமிழன் வளர்வதைவிட ஆபத்தானதாக மாறிவிடும். அதைத் தடுக்க வேண்டுமானால் ஏதாவது ஒரு கருவாட்டுத் துண்டாவது தீர்வாகப் போடப்பட வேண்டும்.
02. முன்னர் சிறீலங்கா அரசை ஆதரிப்பது தமிழினத் துரோகம் என்று கருதப்பட்டது. இப்போது போகும் போக்கைப் பார்த்தால் டக்ளஸ் தேவானந்தாவே நெஞ்சுக்குத்தி வைத்தியசாலையில் படுக்குமளவிற்கு மகிந்தவின் கொல்லைக்குள் வீரத் தமிழ் அரசியல்வாதிகள் போய்விட்டார்கள். இந்த வேகம் ஆபத்தானது, இந்தியா வேண்டாம் நாங்களே எங்கள் பிரச்சனையை பார்ப்போமென கூட்டமைப்பும், மகிந்தவும் சேர்ந்து அறிக்கை விட்டாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஆபத்தான கொலைகளை கூசாது செய்த சரத் பொன்சேகாவை ஆதரித்த கூட்டமைப்புக்கு மகிந்தவை ஆதரிக்க ஒரு நேரமெடுக்காது. செக்கென்ன சிவலிங்கமென்ன என்பதுதான் அவர்களின் உண்மையான அரசியல். எனவே இந்தியாவை ஈழத்து இனப்பிரச்சனை அடியோடு கைவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. இதை தவிர்த்து இந்தியாவும் இருக்கிறது என்பதைக் காட்ட நிருபாமா அங்கு செல்ல வேண்டிய பருவம் இதுவாகும்.
03. தமிழ் தேசியத்தை கைவிட வேண்டிய நெருக்குதலுக்குள் வடக்குக் கிழக்கில் மக்களுடைய யதார்த்த நிலை இருக்கிறது. வன்னியில் இருந்து வடக்கே போன மக்களை எட்டிப் பார்க்கவும் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் தயங்குகிறார்கள். தாம் தீண்டத்தகாத மக்கள் போல பார்க்கப்படுவதாக பல வன்னி மக்கள் நமக்கு தொலைபேசி வழியாக தெரிவித்துள்ளார்கள். வன்னி மக்களின் நிலை இப்படியென்றால் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்பாடு எப்படிப் பார்க்கப்படும் என்பதை எழுதியா தெரிய வேண்டும்.
04. வன்னியில் இருந்து போன மக்கள் தமது வீடுகளுக்கே போக முடியாத நிலை உள்ளது. அங்கே வேறு யாரோ குடியிருத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் குடி யெழும்ப மறுக்கிறார்கள். டக்ளஸ் தேவானந்தாவே நம்மை குடியேற்றியவர், அவர் சொன்னால் நாம் குடியெழும்புவோம் என்கிறார்கள்.
05. கிழக்கு மகாணம் பறிபோவதாக சிலர் ஆகாயம் பார்த்து புலம்புகிறார்கள். பிரபாகரனின் வீட்டுக்கு பக்கத்தில் சிங்களவர்கள் குடியேறிவிட்டார்கள். யாழ்ப்பாணத்தில் சிங்கள தேநீர்க்கடைகள் வந்துவிட்டன. யாழ். நகரில் நடந்தால் ஏதோ குருநாகலை, பொல்காவலவில் நடந்தது போல சிங்களக் குரல்கள் கேட்கின்றன. 16 வயதில் திருமணம் செய்ய சட்டத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சகல சமுதாய சீர்கேடுகளும் அரங்கேறியுள்ளன.
இவைகள் எல்லாம் இந்தியா எண்ணிய எண்ணங்களைத் தாண்டி விட்ட அவலங்களாகும். வடக்கில் இருந்து சிங்கள மீனவரும், இராமேஸ்வரம் தமிழ் மீனவரும் மோதும் காலம் விரைவில் வரப்போகிறது.
எல்லா இராஜதந்திர கணக்குகளும் பிழைத்துவிட்ட நிலையில் இந்திய வெளியுறவுச் செயலர் அங்கே போயுள்ளார். இனி இந்தியாவுக்கு ஈழத் தமிழர் பிரச்சனையல்ல, தமிழரும் சிங்களவரும் சேர்வதால் வரக்கூடிய புதிய பிரச்சனையே புதிய பிரச்சனையாக மாறும்.
உலகம் கையை விட்டது !
இந்தியா கையை விட்டது !
சீனா, பாகிஸ்தான் கையை விட்டது !
ஐ.நா கையை விட்டது !
ஐரோப்பிய ஒன்றியம் கையை விட்டது !
இவ்வளவு பேரும் கைவிட்ட காரணத்தால் சிங்களவருடன் கைகோர்க்கிறோம் என்று கனகரத்தினம், தங்கேஸ்வரி, சிவநாதன் கிஷோர் போன்ற தமிழ் எம்.பிக்கள் கூற ஆரம்பித்துவிட்டார்கள்.
இப்படி ஆளையாள் ஓட ஆரம்பித்தால் ஒரு நாள் எல்லோரும் வித்தியாசம் தெரியாமல் ஒரே குளத்திற்குள் பாய்ந்திருக்கும் காட்சியை இந்தியா தரிசிக்கும் அவலம் வரலாம்.
இப்போது கூட்டிக்கழியுங்கள்…
நிருபாமா ஏன் போயுள்ளார் என்பது தெரியவரும்..
வரவு எட்டணா ! செலவு பத்தணா ! அதிகம் ரெண்டணா ! கடைசி துந்தணா !
கே. பாலசந்தரின் பாமா விஜயத்தை மறுபடி யாழ்ப்பாணத்தில் ரிலீஸ் செய்தால் 100 நாளைத் தாண்டி ஓடும்.
அலைகள் மாஸ்ரர் பேஜ் 06.03.2010



0 Responses to கே. பாலசந்தரின் பாமா விஜயமும் தற்போதய நிருபாமா விஜயமும்