தமிழ் மக்களை முற்றாக வெளியேற்றி கிழக்கை தனது முழுமையாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர மகிந்த அரசு முயன்று வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.யாழ் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கிழக்கு மாகாணத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் அதனை நாம் அனுதிக்கப்போவதில்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டுள்ளது. எனவே நாம் வடக்கில் அதிக ஆசனங்களை பெறவேண்டும்.
அரசு பணத்தை கொடுத்து யாழ் மாவட்டத்தில் பல சுயேட்சைக்குழுக்களை போட்டியிட வைத்துள்ளது. அதன் மூலம் தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்கு அது முயன்று வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நேற்று நடைபெற்ற இந்த பிரச்சார கூட்டதிற்கு வேட்பாளர்கள் சி.வி.கே சிவஞானம், முடியப்பு றெமிடியாஸ் ஆகியோர் தவிர்ந்த எல்லா தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தபோதும் 500 தொடக்கம் 600 வரையிலான மக்களே அதில் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கட்சிசார்பாக இணைந்து பிரச்சாரங்களை மேற்கொள்வதை தவிர்த்து தனியாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் போட்டியிடும் ஒவ்வொரு உறுப்பினர்களும் தாம் வெற்றிபெற்றால் போதும் என்ற மனநிலைக்கு வந்துள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.



0 Responses to கிழக்கு மாகாணத்தை முழுமையாக கைப்பற்ற அரசு திட்டம்: சம்பந்தன்