பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடபட சிறீலங்காப் படையினர் தடை விதித்து வருகின்றனர்.அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் மட்டும் "தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி" போட்டியிடுகின்றது. யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் இதன் 12 வேட்பாளர்களுள், முதலாவது விருப்பிலகத்தில் போட்டியிடும் மருத்துவர் கந்தசாமி திருலோகமூர்த்தி, தமது தேர்தல் பரப்புரைக்கு சிறீலங்கா படையினர் அனுமதி மறுத்திருப்பதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் நாட்டிலுள்ள ஊடகம் ஒன்றிற்குச் செவ்வி வழங்கியுள்ள அவர், கடந்த வாரம் கிளிநொச்சியில் பரப்புரை மேற்கொள்வென துண்டுப் பிரசுரங்களை எடுத்துச் சென்றபோது, படையினரால் அதற்குத் தடை விதிக்கப்பட்டதுடன், வழங்கல் செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறினார்.
இத பற்றி சிறீலங்கா படைகளின் மேலதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டவுடன், பரந்தன் சந்திக்கு நேரடியாகச்சென்ற குறிப்பிட்ட படை அதிகாரி, அரச தரப்பென்றால் துண்டுப் பிரசுரம் வழங்கல் செல்ல அனுமதி உண்டு எனவும், இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் கூறியிருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து கிளிநொச்சி நகரில் மட்டும் துண்டுப் பிரசுரம் வழங்கல் செய்ய குறிப்பிட்ட படை அதிகாரி அனுமதி வழங்கிய போதிலும், மற்றொரு படைப் பிரிவு அதற்கு அனுமதி மறுத்து தம்மை திருப்பி அனுப்பியிருப்பதாக, வேட்பாளர் திருலோகமூர்த்தி கூறினார்.
அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் "தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின்" சார்பில் யாழ்ப்பாணத்தில் தேர்தலில் போட்டியிடும் மருத்துவர் கந்தசாமி திருலோகமூர்த்தி, கடந்த 30ஆண்டுகளாக கிளிநொச்சியில் மருத்துவப் பணியில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



0 Responses to கிளிநொச்சியில் தேர்தல் பரப்புரைக்கு சிறீலங்கா படையினர் தடை: வேட்பாளர் திருலோகமூர்த்தி