பிரித்தானிய தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கையின் முழு வடிவத்தை இங்கு நாம் தருகின்றோம்.ஒருங்கிணைப்புக் குழு,
தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை,
பிரித்தானியா
15.04.2010
புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களே,
வன்னி மண்ணில் எங்கள் உறவுகளின் குருதி வழிந்தோடி ஓராண்டு நெருங்கும் நிலையில், எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு நிரந்தரமாக சாவுமணி அடிப்பதற்கு சிங்கள தேசமும், அதற்கு முண்டுகொடுத்து நிற்கும் இந்திய ஏகாதிபத்தியமும் கங்கணம் கட்டி நிற்கின்றன.
தமிழீழ தேசியத் தலைமையின் இருப்பை மறுதலித்து, எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு முடிவுரை எழுத முற்பட்ட இந்திய-சிறீலங்கா அரசுகளின் கைக்கூலிகள், தமது முயற்சி கைகூடாத நிலையில் தாயகத்திலும், புகலிட தேசத்தில் வாழும் எம்தமிழீழ உறவுகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் தற்பொழுது முழுவீச்சுடன் இறங்கியுள்ளன.
இதில் முக்கியமாக எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடித்தளமாக விளங்கும் தமிழீழ தாயகக் கோட்பாட்டை சிதைப்பதை இலக்காகக் கொண்டு தமது கைக்கூலிகளை இந்திய-சிறீலங்கா அரசுகள் ஈடுபடுத்தி வருகின்றன. இதன் ஓர் அங்கமாக புகலிட தேசத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதாகக் கூறிக்கொண்டு, எமது தமிழீழ தாயகத்தை தமிழ், முஸ்லிம் மாநிலங்களாகத் துண்டாடுவதற்கு இவ்வாறான கைக்கூலிகள் முற்படுவது அண்மைய நாட்களில் அம்பலமாகியுள்ளது.
தமிழ்த் தேசியத்தின் பெயரில் இந்திய-சிறீலங்கா அரசுகள் முன்னெடுக்கும் இவ்வாறான நாசகார நடவடிக்கைகளுக்கு, எம்மவர்களில் சிலர் துணைபோவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
ஒருபுறம் தமிழீழ தேசியத் தலைமையின் இருப்பை மறுதலித்தவாறு, மறுபுறம் தமிழீழ மக்களுக்கு விமோசனம் அளிப்பதாகக்கூறிக் கொண்டு தமிழீழத் தாயகக் கோட்பாட்டை சிதறடிக்க முற்படும் இவ்வாறான சக்திகளை உடனடியாக இனம்கண்டு இவர்களை தமிழீழ தேசிய அரசியலில் இருந்து அந்நியப்படுத்துமாறு புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களுக்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.
எமது அன்பார்ந்த உறவுகளே!
தேசிய விடுதலை என்பது விலைபேசிப் பெறுவதல்ல: அன்றி மாடமாளிகைகளின் பளிங்கு அறைகளில் வட்டமேசை மாநாடு நடாத்துவதும் அல்ல. உயிரை வேலியாக்கி, குருதியை நீராக்கி எமது மக்களும், மானமாவீரர்களும் முன்னெடுத்த தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு, இன்று நியூயோர்க்கிலும், ஜெனீவாவிலும் கண்ணாடிக் கட்டிடம் அமைத்து தலைமைதாங்குவதற்கு புத்திஜீவிகளின் பெயரில் சிலர் முற்படுகின்றனர்.
மேற்குலகின் சுகோபகங்களை சுகித்து, தமது வாழ்வை வளப்படுத்திக் கொண்டதைத் தவிர எதையுமே சாதிக்காத இவர்கள், நெருப்பாற்றுப் பயணம் மேற்கொள்ளும் எம் தமிழீழத் தாயக உறவுகளை வழிநடத்த முற்படுவது நகைப்புக்கிடமானதே. அதிலும், போர் ஓய்வுக் காலத்தில் தமிழீழ தாயகத்திற்குத் திரும்பிச் செல்வதற்கு மறுத்து ஒஸ்லோவிலும், ஜெனீவாவிலும், இலண்டனிலும், பாரிசிலும், நியூயோர்க்கிலும் ஒளிந்துகொண்ட இவர்கள், இன்று இந்திய-சிறீலங்கா அரசுகளின் அடிவருடிகளாக மாறி, தமிழீழத் தாயகக் கோட்பாட்டை சிதறடிக்க முற்படுகின்றனர்.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் என்பது தமிழீழ தாயகத்தில் இருந்து வழிநடத்தப்பட வேண்டியது: அது தமிழீழ தேசியத் தலைமையின் வழிகாட்டலுக்கு உட்பட்டிருக்க வேண்டியது. ஜெனீவாவோ, நியூயோர்க்கோ அன்றி இலண்டனோ அதற்கான தளங்கள் அல்ல. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக செயற்பட வேண்டிய புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள், தமிழீழ தாயகத்தில் இருந்தவாறு போராட்டத்தை வழிநடத்த முடியுமே தவிர, புகலிட தேசத்தில் அஞ்சாதவாசம் புரிந்தவாறு அல்ல என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
இந்த வகையில், புகலிட தேசத்தில் எமது பணியென்பது, தாயகத்தில் முன்னெடுக்கப்படும் எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்று அதற்கு வலுச்சேர்ப்பதேயாகும்.
எம் தமிழீழ உறவுகளே!
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான இராஜதந்திர ஒத்துழைப்பையும், தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான அனைத்துலக அங்கீகாரத்தையும் வென்றெடுப்பது புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களாகிய எமது தேசியக் கடமையாகும்.
அதற்கு அப்பால், எமது தாயக உறவுகளுக்கு மனிதநேய உதவிகளை வழங்கி, அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதும் எமது கடப்பாடாகும். இவற்றை விட்டு விலகி, எமது தாயக பூமியின் நில எல்லைகளை நிர்ணயிப்பதோ, அன்றி எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்குவதோ, அல்லது மாடமாளிகைகளில் சொகுசு வாழ்வை மேம்படுத்தும் கட்டமைப்புக்களை நிறுவுவதோ எமது பணியன்று.
இது எமது மக்களுக்கும், மானமாவீரர்களுக்கும் இழைக்கும் துரோகமாக அமையுமே அன்றி வேறேதுமல்ல. இந்த வகையில் தமிழீழத் தாயகக் கோட்பாட்டை மத அடிப்படையில் சிதறடித்து, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும் குந்தகம் விளைவிக்க முற்படும் நாடுகடந்த அரசமைப்புக் குழுவினரைப் புறக்கணிக்குமாறு உங்களுக்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.
மாறாக, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை இலட்சியங்களில் இருந்து இம்மியளவும் விலகாது புகலிட தேசங்கள் தோறும் ஏற்கனவே இயங்கி வரும் தமிழ்த் தேசிய அமைப்புக்கள் ஊடாகவும், தமிழீழ மக்கள் பேரவைகள் போன்ற சனநாயக வழியிலான மக்கள் அமைப்புக்கள் வாயிலாகவும் தமிழீழ தேசியப் பணிகளை முன்னெடுக்குமாறு உங்களிடம் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
அத்துடன் ஏனைய புகலிட தேசங்களில் தமிழீழ மக்கள் பேரவைகள் நிறுவப்படுவது போன்று பிரித்தானியாவிலும் இவ்வாறான தமிழீழ மக்கள் பேரவையை நிறுவுவதற்கு இளைய தலைமுறையினராகிய எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோருகின்றோம்.
துரோகிகளைப் புறந்தள்ளுவோம்! தேச விடுதலையை விரைவுபடுத்துவோம்!
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’



0 Responses to தமிழீழத்தாயகக் கோட்பாட்டை சிதறடிக்க முற்படும் சக்திகளை இனம்கண்டு அந்நியப்படுத்துங்கள்