Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மனிதாபிமான அடிப்படையில் பிரபாகரனின் தாயாரை சென்னையில் சிகிச்சை பெற மத்திய அரசுக்கு, தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து பா... நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் தனது கணவர் காலமான செய்தியைக் கூட தெரிந்துகொள்ள முடியாத நிலையில் நோய்வாய்ப்பட்டிருக்கும் பார்வதி அம்மையார், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்தார் என்றும், அவரை சென்னை விமான நிலையத்தில் இறங்கவிடாமல், தடுத்து விமானத்திலேயே பல மணி நேரம் உட்காரவைத்து, பின்னர் அதே விமானத்தில் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பி வைத்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

சென்னை நகரில் மிக நவீன மருத்துவ சிகிச்சை கிடைப்பதால்தான் 80 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் அந்த அம்மையார், இங்கே சிகிச்சை பெற வந்திருக்கிறார். இந்தியாவுக்கு வருவதற்கான அனுமதியினை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் அவருக்கு வழங்கியிருக்கிறது. இந்திய தூதரகம் அனுமதி வழங்கியிருக்கிறது என்றால், இந்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது என்றுதான் பொருள். அப்படியிருந்தும், சென்னை நகரில் அவரை இறங்கவிடாமல் தடுத்து நிறுத்தி, மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைப்பதற்கு காரணமானவர்கள் யார்?.

நிச்சயமாக தமிழக அரசும், தமிழக காவல்துறையும் இதனை செய்திருக்கமாட்டார்கள். அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இல்லை. மேலும், முன்பு ஒருமுறை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆலோசகர் பாலசிங்கம் மற்றும் சந்திரகாசன் ஆகியோரை சென்னையில் இருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டபோது, அதை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கி தடுத்து நிறுத்தியவர் கருணாநிதி. எனவே, அவரது அரசு இதனை செய்திருக்காது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குடியேற்றத்துறை அதிகாரிகள்தான் இச்செயலை செய்திருக்கக்கூடும். இத்தகைய நடவடிக்கைகளுக்கு அதிகாரம் படைத்தவர்கள் அவர்கள்தான். அவர்களது அனுமதியின்றி வெளிநாட்டவர் எவரும் இந்தியாவுக்குள் நுழைய முடியாது. சென்னை விமான நிலையத்தில் உள்ள குடியேற்றத்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக இந்த நடவடிக்கையை எடுத்திருக்க மாட்டார்கள். மத்திய அரசின் அனுமதி இல்லாமல், அவர்கள் கட்டளையிடாமல் இங்குள்ள குடியேற்றத்துறை அதிகாரிகள் செயல்பட்டிருக்க முடியாது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்றது என்பதில் சந்தேகமில்லை. உலகில் எந்தவொரு நாட்டிலும் இது போன்ற மனிதநேயமற்ற செயல் நடந்ததாக வரலாறு இல்லை. எவ்வளவு பெரிய குற்றம் செய்திருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் சிகிச்சை பெற அனுமதிப்பது தான் உலக நாடுகள் கடைபிடித்து வரும் நடைமுறை. நமது பகை நாடுகளை சேர்ந்தவர்களும், நமக்கு எதிரான நாடுகளை சேர்ந்தவர்களும் இங்கே வந்து, சிகிச்சை பெற்று செல்வதற்கு அனுமதி வழங்கி வரும் நிலையில், இங்குள்ள ஆறரை கோடி தமிழர்களை நம்பி சிகிச்சை பெற வந்த பார்வதி அம்மையாரை திருப்பி அனுப்பியதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

எனவே, சென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ள பார்வதி அம்மையார், மீண்டும் சென்னைக்கு வந்து தேவையான மருத்துவச் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு இந்த அனுமதியை வழங்கும்படி மத்திய அரசுக்கு, தமிழக பரிந்துரை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

0 Responses to பிரபாகரன் தாயார் சென்னையில் சிகிச்சை பெற தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும்: ராமதாஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com