தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவோம் எனத் தெரிவித்து வன்னி மக்கள் பேரவை நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு:21ஆம் நூற்றாண்டில் உலகில் மிகப் பெரும் அவலத்தைச் சந்தித்த ஒரு இனக்குழுமத்தின் ஆத்மார்த்த நேரடிச் சாட்சியமாய் இன்று வன்னி மக்கள் இருக்கிறார்கள். அளவிட முடியாத அர்ப்பணிப்புக்களையும் சொல்லிவிட முடியாத அவலங்களையும் சந்தித்த எமது மக்களின் கொதிக்கும் மன நிலையை கிளறிவிடுகின்ற அல்லது ஆற்றாத துயருக்குள் தள்ளிவிடுகின்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன.
தீராத கொள்கைப்பற்று, அசையாத நம்பிக்கை, எதனையும் எதிர்கொள்ளும் திமிர் கொண்ட நெஞ்சம் படைத்தவர்களே எமது மக்கள். எமது மக்கள் வெற்றியில் மட்டும் குதூகலிக்கவில்லை, தோல்வியிலும், அவலத்திலும் அவர்கள் பங்கெடுத்தார்கள். இல்லையேல் ஒரு இலட்சத்தி எண்பத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மே 18 வரையில் வன்னியில் நின்றிருக்க வேண்டிதேயில்லை.
அவர்கள் கொள்கையில் இருந்து வழுவியிருந்தால், உயிர் அச்சமென நினைத்திருந்தால் இந்த மக்கள் வெள்ளம் விடுதலைப்புலிகளை கைவிட்டு ஒட்டுமொத்தமாய் வெளியேறியிருக்கும். அவர்கள் அவ்வாறு வெளி வந்திருந்தால் யாராலும் தடுத்திருக்க முடியாது என்பது வெளிப்படை. இந்த நிலையில் எங்கள் மக்களை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு வன்னி மக்கள் பேரவை செய்தியொன்றைச் சொல்ல விளைகின்றது!
மன்னாரில் தொடங்கிய படை ஆக்கிரமிப்பு பூதம் படிப்படியாக எமது நிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்குள்ளும் அனல் நாக்குகளை நீட்டியபடி எமது நிலத்தை ஏப்பமிட்டபடி நகர்ந்தது. எமது மக்கள் முடிந்தவரையில் தமது உயிர்களையும், பொருட்களையும் காத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் உடைமைகளையும் சுமந்து நகரத்தலைப்பட்டனர. அவர்களது ஒவ்வொரு நகர்வின் போதும் மீளமுடியாத அவலங்கள் எதிர்த்தன. எமது மக்கள் முடிந்தவரை எதிர்த்தடைகள் ஒவ்வொன்றையும் கடந்தே நடந்தார்கள்.
விமானக்குண்டுத் தாக்குதல்கள், தொலை தூர எறிகணைத் தாக்குதல்களே எமது மக்களுக்கான அன்றைய பிரதான நெருக்கடிகளாக இருந்தன. வீதி ஓரங்களில் எங்கள் மக்கள் செத்து வீழ்ந்தார்கள். எஞ்சியவர்கள் தமது உறவுகளைச் சுற்றி அழுதுவிட்டு அயலில் இருந்த சுடலைகளில் புதைத்தார்கள். ஆரம்பத்தில் ஏதாவது ஒரு சுடலையில் எமது உறவுகளைப் புதைத்தோம் என்ற நின்மதி எமது மக்களிடம் இருந்தது.
ஆக்கிரமிப்புப் பூதம் விசுவமடுவை அண்மித்த போது மக்களின் நகர்வுகளின் மிகப்பெரிய அவலச் சகதிகள் எதிர்ப்பட்டன. மக்கள் அங்குலம் அங்குலமாகவே நகர்ந்தார்கள். அந்த நகர்வுகளி;ன் பின்னரே சிங்கள கொரூரப் படைகள் எமது மக்களை இலக்குவைத்து கொத்துக்குண்டுகள், பொஸ்பரஸ் எனப்படுகின்ற இரசாயனக் குண்டுகள், ஆட்டிலறி தொலை தூரப் பீரங்கி எறிகணைகள், தொலைதூர விமான எதிர்ப்புப் பீரங்கிகள், குறுந்தூர எறிகணைகள் அனைத்தும் எமது மக்களின் தலைகளில் கொட்டப்பட்டன.
இந்த தொடர் நடவடிக்கை உடையார்கட்டு, சுதந்திரபுரம், தேவிபுரம், இரணைப்பாலை, மாத்தளன், இடைக்காடு, அம்பலவன் பொற்கணை, வலைஞர்மடம், பனையடி, முள்ளிவாய்க்கால் மேற்கு, கிழக்கு வட்டுவாய்கால் என இடைவிடாது தொடர்ந்தது. எமது மக்கள் ஈவிரக்கமற்ற முறையில் பிணங்களாக வீழ்ந்தார்கள். அவர்களுக்கான இறுதிக்கடன்களைக் கூடச் செய்ய முடியவில்லை ஏன் எத்தனையோ பேர் இறந்தும் இன்றுவரை எத்தனையோ ஆயிரம் உறவுகள் தமது உறவுகள் உயிருடன் இருப்பதாகவே எண்ணியே வாழ்கின்றார்கள்.
இத்தனை அவலங்களுக்குள்ளும் உணவு என்கின்ற பெரிய அரக்கன் எமது மக்களை மிகக் கொடிதாய் தாக்கியது. கஞ்சிக்காகவும், பிள்ளைகளுக்கான பால்மாக்களுக்காகவும் காத்திருந்தவர்கள் எறிகணைகளாலும் விமானத்தாக்குதல்களாலும் கொன்று குவிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது ஒவ்வொரு உறவினை இழந்தது. எத்தனையோ பேர் அனாதைகளானார்கள். ஆயிரக்கணக்கானோர் விதவைகள் ஆனார்கள். இன்னமும் பல்லாயிரம் கொடுமைகளைச் சந்தித்த எமது மக்களில் எஞ்சியோர் முகாம்களில் அடைக்கப்பட்டார்கள்.
இந்த நிலையில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் எமது மக்களில் குறிப்பிட்ட தொகையானோர் ஊர்களுக்குக் கொண்டுவரப்பட்டு ஏதிலிகளாக இறக்கிவிடப்பட்டுள்ளார்கள். ஏனையோர் முட்கம்பி முகாம்களிலும், பல்லாயிரக்கணக்கானோர் தடுப்பு முகாம்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இத்தனை ஆயிரம் பிரச்சினைகளும் எதிர்கொள்ளப்பட்ட நிலையில் ஒரு தேர்தலுக்கான கருத்துநிலை வெளிப்பாடுகளும், அதற்கான பரப்புரைகளும் சூடுபிடித்துள்ளன. எமது மக்களைச் சொல்லியே அரசியல் செய்யவும் பலர் முற்படுகின்றார்கள்.
எமது மக்களின் அவலத்தின் பின்னாலும் எமக்கு இருந்த நம்பிக்கை புலம்பெயர் சமூகம் எம்மை தூக்கி நிமிர்த்தும் என்பதுதான். காரணம் எமது போராட்ட காலத்தில் எமது விடுதலைப் போராட்ட கட்டமைப்புக்களை நம்பிய 60ஆயிரம் இளைஞர்களும் யுவதிகளும் பணியாளர்களாகப் பணியாற்றி அதன் மூலம் வருகின்ற கொடுப்பனவுகளை வைத்தே பிழைப்பு நடத்தினார்கள். இதனைவிடவும் எந்தவித வேறுவிதமான உதவிகளும் இன்றிய ஆயிரக்கணக்கான போராளி குடும்பங்களும் அவர்களின் பிள்ளைகளும், மாவீரர்குடும்பங்களும் தமிழீழ கட்டுமாணங்களை நம்பியே வாழ்ந்தார்கள்.
இவர்களில் கணிசமானோரது குடும்பங்களின் வருவாய்கள் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலே தடைப்பட்டுப் போயின. அவ்வாறான குடும்பங்கள் எவ்வளவு நெருக்கடிகளை இடப்பெயர்வு காலங்களில் சந்திருந்தார்கள் என்பது எமக்குத்தான் தெரியும்.
இடப்பெயர்வு வாழ்க்கைக்கு பின்னர் முகாம்களில் வாழ்க்கையைத் தொடர்ந்த மக்கள் எண்ணுக்கணக்கற்ற நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள். அவர்களுக்கு மாற்று வழி இருக்கவில்லை. காரணம் அவர்கள் முழுக்க முழுக்க தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சார்ந்தே செயற்பட்டமையால் அவர்களால் எதனையும் பெருமளவில் சேமிக்கமுடிந்திருக்கவில்லை. எனவே அங்கு வழங்கப்பட்ட வழங்கப்பட்டு வருகின்ற நிவாரணப் பொருட்களை மட்டும் வைத்துக் கொண்டு வாழ முடியுமா? அவர்களுக்கு ஏனைய தேவைகள் இருக்காதா?,
புலம்பெயர் அமைப்புக்கள் சிலவும், சில ஊடகங்களும், செய்தி இணையங்களும் தாயகத்தில் வாழ்க்கின்ற மக்களுக்கு வழிகாட்டுவதாய் எண்ணி தூரநோக்கற்றுச் செயற்பட முற்படுவது வேதனை அளிக்கிறது!!
வன்னி நெருக்கடியை எதிர்கொண்ட காலத்தில் புலம்பெயர் தளத்தில் செயற்பட்ட ஊடகங்களுக்காவும், அமைப்புக்களுக்காகவும் வன்னியில் நின்று உழைத்த செயற்பாட்டாளர்களையும், செயற்பட்டுக்கொண்டிருந்தவர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பங்களையும் இன்றுவரை திரும்பிப் பார்க்காத ஊடகங்களே மக்களை வளிப்படுத்த அறிக்கைகளையும், செய்திகளையும் வெளியிடுகின்றன.
போராளிக் குடும்பங்கள் எந்தவித உதவியும் அல்லது வருமானமும் இன்றிய நிலையில் அடுத்தவேளைக் கஞ்சிக்காக அவர்கள் ஏங்கவேண்டிய நிலையில் வாடும் போது அவர்கள் குறித்து எந்தக் கரிசனையும் கொள்ளாதவர்கள் அறிக்கை வெளியிடுகின்றார்கள்.
அன்புச்சோலை மூதாளர் பேணலகம், காந்தரூபன் அறிவுச் சோலை, செஞ்சோலை, குருகுலம் சிறுவர் இல்லம், பாரதி இல்லம், இனியவாழ்வில்லம், புனிதபூமி சிறுவர் இல்லம் இவற்றுடன் இணைந்த வெற்றிமனை, சந்தோசம் உட்பட்ட பராமரிப்பு நிலையங்களைச் சேர்ந்த முதியவர்கள், குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள், மனநிலை பாதிக்கப்பட்டோர் எல்லோர் பற்றியும் யாராவது ஏதாவது நினைத்தார்களா?
புலம் பெயர் தளத்தில் இருந்து தாயக மக்களை நெறிப்படுத்த அறிக்கைவிடுகின்ற பெண்கள் அமைப்புக்கள் எமது மண்ணில் விதவைகளாக்கப்பட்ட பெண்களைப் பற்றி எதையாவது சிந்தித்தார்களா? ஆரோக்கியமாக எதையாவது செய்தார்களா? அல்லது அவர்களின் நலனுக்காக உழைத்தார்களா?
வளரவேண்டிய பருவத்தில் கோதுமை மா றொட்டியையும், வெள்ளை அரசி கஞ்சியையும் உண்ணும் குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு உங்களால் என்ன வகை செய்யப்பட்டது?
நாங்கள் புதிதாக ஒன்றையும் கேட்கவில்லை எங்கள் போராட்டத்திற்கு என்று சொல்லி புலம் பெயர் தேசத்தில் வாழும் எங்கள் மக்களிடம் இருந்து சேர்க்கப்பட்டவற்றையே கேட்கின்றோம். அந்த மக்கள் தங்கள் வியர்வையும் இரத்தத்தையும் சிந்தித்தானே உங்களுக்குப் பணம் தந்தார்கள். இந்த வேளையில் எங்கள் மக்களுக்கு உதவாதது எந்த வேளையிலும் உதவாது.
மீண்டும் மீண்டும் யாரையும் குற்றம் சுமத்திக் கொண்டு வெளிநாடுகளில் குளிரூட்டி வாகனங்களில் பயணிக்கும் எத்தனைபேர் எம்மைப் பார்க்க முகாம்களுக்கு வந்தீர்கள்? புலம் பெயர் நாடுகளில் இருந்து வருவதற்கு எவரும் முகாம்களில் தடை விதிக்கவில்லை.
எத்தனை நூறு சிங்களவர்கள் முகாம்களுக்கு வந்து எமது மக்களுக்கு துணிகளும், உணவுகளும் கொடுத்தார்கள் என்பது உங்களில் எத்தனைபேருக்குத் தெரியும்? அதனைக்கூட பல்லிளித்து பெற்றுக்கொண்டோம், எமது மக்கள் உணவுக்காக முண்டியடித்த போது சிங்களவர்கள் கெட்டவார்த்தைகளில் திட்டியபடியே தந்தபோது அவற்றைப் பெற்றுக்கொண்டு உண்டோம், இந்தக் கேவலம் எமக்கு நேர்ந்ததை நீங்கள் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கின்றீர்களா?
நாங்கள் வன்னியில் மூச்சுவிடக் கடினப்பட்டுக் கொண்டிருந்த போது 'வணங்காமண்' என்கின்ற ஒரு கப்பலை தயார் செய்து மிகப் பூதாகாரமாய் காட்டி தூபம் போட்டு வெளிப்படுத்திய பல நெஞ்சங்களின் அர்ப்பணிப்பை, எமக்கான ஏக்கத்தை எண்ணி வன்னியில் மக்கள் துயரிலும் மகிழ்ந்தார்கள் என்பது உண்மை.
ஆனால் அதன் கதை என்ன இப்போ? அது எங்கே? அது பற்றிய உங்கள் அடுத்த கட்டம் என்ன? எல்லாம் முடிந்தது என்றெண்ணி பொருட்களை சிங்களவர்களிடம் கையளித்ததுதானா நீங்கள் செய்தது?அதற்காக பொருட்கள் சேர்க்கப்பட்டபோது எமது மக்கள் முண்டியடித்து பொருட்களை வழங்கினார்களாம். அந்த மக்களிடமாவது அவற்றைத் திருப்பிக் கொடுத்திருக்கலாமே?
இத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதிலாக நீங்கள் சிறீலங்காவில் உதவி செய்ய புலம்பெயர் மக்களால் முடியாது, அதற்கு அனுமதி மறுக்கப்படும் என்று சொல்லலாம்.
ஆனால் நாங்கள் கேட்கின்றோம், பகிரங்கமாக நீங்கள் செய்யவேண்டாம், உங்களால் தமிழ் மக்களின் காவலர்களாகச் சொல்லப்படுகின்றவர்கள், வன்னி மக்களைச் சந்திக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் சந்திக்கின்ற போது என்ன செய்கிறார்கள் தெரியுமா? பசை வாளியையும், சுவரொட்டிகளையும் கொடுத்து ஒட்டச் சொல்லி மாணவர்களிடமும் தமிழ் தேசிய வாதிகளிடமும் கேட்கின்றார்கள். சுவரொட்டிகளை ஒட்டுவதற்காகவா வன்னியில் வாழ்ந்தோம் என அவர்கள் துயரப்படுவதாக அறிந்தோம். மாணவர்களையோ நன்கு இனங்காணப்பட்ட தேசியத்திற்காக உழைப்பவர்களையோ சந்தித்து இரகசியமாக முடிந்தளவு உதவிகளை அவர்கள் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏன் செய்யக்கூடாது? ஏன் செய்ய முடியாது?
புலம் பெயர் தளத்தில் விளம்பரங்களை மேற்கொண்டு தேர்தலுக்காக சில அமைப்புக்கள் பணம் சேர்த்து அனுப்பியதும் எங்களுக்குத் தெரியும், அவ்வாறானவர்களினால் எமது மக்களுக்கான உதவிகளை குறிப்பிட்ட தேசிய வாதிகளின் மூலம் ஏன் முன்னெடுக்க முடியாது? முடிந்தவரையில் செய்திருந்தால் கெஞ்சிக் கேட்காமலேயே மக்கள் உண்மையானவர்களை இனங்கண்டிருப்பார்கள்.
வன்னி மக்களைச் சொல்லிவிட்டு நீண்ட நேரம் கண்ணீர் விட்டு வாக்குக் கேட்கும் அம்மையார் தனது தேர்தல் விளம்பரங்களில் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளிவீசுகின்றார். வென்றபின்னர் தான் செய்யவேண்டும் என்பதற்கு என்ன கட்டாயம் இருக்கிறது?
2004ஆம் ஆண்டு வென்ற இவர் மக்கள் இடம்பெயர்ந்து, முகாம்களில் அடைக்கப்பட்டு இன்றுவரை அலைகிறார்கள். இதுவரை செய்யாததை இனிச் செய்வது என்ன நிலாக்காட்டி உணவூட்டுதல் போன்றதா?
இதனைவிடவும் தனித்தனியான பயணங்களை மேற்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்கள் என்ன செய்கிறார்கள், தமிழ் மக்களின் பெரும் பலத்தைச் சிதைக்க நேரடியாகவே கூட்டுச் சேர்ந்துள்ளார்கள் கருணா என்கின்ற துரோகியை திசை திருப்பிய அலிஹாகீர் மௌலானாவுடன் ஒருவர், பிள்ளையானுடன் இன்னொருவர், தமிழர்களிடம் மிகக் கொரூரமான வக்கிரத்தை மேற்கொண்டுவருகின்ற றிசாட்டுடன் இருவர் என நால்வர் நேரடியாக களத்தில் இருக்க.
தேசியம் என்கின்ற உன்னத பொருளைக் கையிலெடுத்து மறைமுக உடைப்பிற்கும் இன்னொரு அணி தயாராகிவிட்டிருக்கின்றது. இது மறைமுகமாக மகிந்தவின் சிந்தனையை நிறைவேற்றும் வகையிலான முனைப்பாகும். இதற்கு தெரிந்தோ தெரியாமலோ சிலர் துணைபோவது வேதனைக்குரியது,
தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்கப் போகின்றோம் என்று கூறிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்ற அணி பிரதானமாக தமது கருப்பொருளாக கூட்டமைப்பினைச் சேர்ந்த மூவரைத் தோற்கடிப்பதே தமது நோக்கம் எனக் கூறிக்கொள்கின்றது.
அவ்வாறாயின் அவர்களை முறியடிக்க முக்கியமான மூவர் மட்டும் களத்தில் இறங்கியிருக்கலாம். எதற்காக இத்தனைபேரும்? திருகோணமலையில் கஜேந்திரகுமார் சம்பந்தரை விடவும் ஆளுமை நிறைந்தவராகவும், தேசியத்தின் மீதான பற்றுதல் அதிகமானவராகவும் இருந்திருந்தால் தானே திருகோணமலையில் தேர்தலில் நின்றிருக்கலாம், ஏன் மகிந்தவின் சிறப்பு அங்கீகாரம் பெற்ற கௌரி முகுந்தனைத் தவிர தேசியத்திற்காக உழைக்கக்கூடிய இதயசுத்தியுடன் கூடிய வேறுயாராவது இவர்களுக்கு கிடைக்கவில்லையா?
அதே போல் யாழ்ப்பாணத்தில் கஜேந்திரனும், பத்மினியும் நேரடியாக மாவை சேனாதிராசா மற்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் ஆகியோரது வாக்குகளை தமக்குப் போடும்படியும் ஏனையவர்களை வெற்றிபெற வைக்குமாறும் கேட்டிருக்கலாம். இதனைவிடவும் இவர்களின் எந்த ஒரு அறிக்கையிலும் ஏனைய மாவட்டங்களின் தமிழ் பிரதிநிதித்துவம் தொடர்பில் அழுத்தமான கருத்துக்கள் எதுவும் எங்கும் இல்லை.
வன்னியில் போட்டியிடுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மகிந்தவின் நேரடியான அனைத்து அங்கீகாரங்களும் பெற்ற றிசாட், கிசோர், கனகரட்ணம் ஆகியோரின் அழுத்தங்கள் மிரட்டில்களைத் தாண்டியே பயணிக்கவேண்டியுள்ளது. தமக்கு வாக்களித்தால்தான் மீள் குடியேற்றம் என எச்சரிக்கப்பட்ட நிலையில் முகாம் மக்கள் உள்ளனர்.
மட்டக்களப்பு அம்பாறையினைப் பொறுத்தவரையில் கருணா, பிள்ளையான், இனிபாரதி ஆகிய அடிதடிக்குழுக்களை எதிர்கொண்டு வெற்றிபெறவேண்டிய நிர்ப்பந்தம். சரி இரண்டு தேர்தல் தொகுதிகளை விடுத்தாலும் ஏனைய தொகுதிகளில் போட்டியிடுகின்ற எமது தமிழ்பிரதிநித்துவத்தினைக் காப்பாற்ற புலம்பெயர் சமூகத்தின் சிலரும், சில ஊடகங்களும் ஏன் முன்வரவில்லை.
எங்கள் தாயகத்தை வரையறுத்தாயிற்றா? அந்த உரிமையினை இவர்களுக்கு யார் கொடுத்தது? கருத்துவருவாக்கங்களையும், கருத்துப் பரிமாறல்களையும் யாரும் மேற்கொள்ளலாமே தவிர அவற்றினை யாரும் யாருக்கும் திணிக்கும் உரிமை கிடையாது. காரணம் எமது மக்கள் நன்கு சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள், அவர்களுக்கு சுயமான முடிவினை எடுக்கும் பக்குவம் இருக்கிறது என்றே கருதுகின்றோம்.
இந்த இடத்தில், எமது மண்ணில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலத்தில் கல்வி பயின்று தமிழ் தேசிய ஆதரவாளர்களால் வெற்றிபெற வைக்கப்பட்ட கஜேந்திரன் எமது மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு எமது ஒருமைப்பாட்டிற்காக உழைக்காமல், எம்மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு செத்து வீழ்ந்து கொண்டிருந்த போது பாராளுமன்றத்தில் ஒரு வார்த்தை கூட பேசாத லண்டனில் வளர்ந்த கஜேந்திரகுமாருடன் கைகோர்த்து எமது தேசியத்திற்கு எதிராகப் பயணிப்பது தான் எமது மண்ணுக்கே அவமானமானது.
இறுதியில் 06-04-2010 இலங்கையில் இருந்து வெளியாகியுள்ள தமிழ் பத்திரிகைகளில் பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான பணங்களைக் கொடுத்து தேர்தல் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
அவை அனைத்துக்குமான நிதிப்பங்களிப்பினை புலம்பெயர் அமைப்புக்களான,
சுவீடன் தமிழ் பெண்கள் அமைப்பு,
மகளிர் அமைப்பு - ஜேர்மனி,
நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு,
டென்மார்க் தமிழர் பேரவை,
தமிழ் ஒன்றியம் - இத்தாலி,
தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு - பிரான்ஸ்,
ஐக்கிய தமிழர் செயற்பாட்டுக்குழு - பிரித்தானியா,
சுவிஸ் தமிழர் பேரவை,
தமிழ் இளையோர் அமைப்பு - பெல்ஜியம் ஆகியனவாகும்.
இன்று (06-04-2010) விளம்பரங்களுக்காக செலவழிக்கப்பட்ட பணத்தில் மட்டும் வன்னியில் பசியால் துடிக்கும் எமது குழந்தைகளுக்காக எத்தனை பால்மா பொதிகளை வாங்கிருக்கமுடியும்?
இன்றைய நிலையில் எமது மக்களின் பலம் நிருபிக்கப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம், மாறாக உண்மையில் புலத்தில் இருந்து எமக்காக செயற்படும் உயர்ந்தவர்களை நாங்கள் குற்றம் சுமத்தப் போவதும் இல்லை. காரணம் அவர்கள் மிகத் தெளிவாக இருப்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் எமக்காக கண்ணீர் விடும் சம்பவங்களையும், எமக்காக தம்மை அர்ப்பணித்துச் செயற்படுகின்ற சம்பவங்களையும் நாங்கள் மனங் கொள்கின்றோம். உண்மையான தேசியப் பற்றாளர்களை நாங்கள் நன்கறிவோம்.
உதாரணமாக வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம் முன்னெடுக்கின்ற அளப்பரிய பணியான உறவுகளைத் தேடுதல் போன்ற பணிகளை நாங்கள் நன்றி உணர்வுடன் வரவேற்கின்றோம். இதனைவிடவும் எமது மக்களுக்காக முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்கள், தீர்வு முனைப்புக்கள் அனைத்திற்கும் நாங்கள் நன்றியுடையவர்கள் ஆக இருப்போம்.
ஆனாலும் புலத்தில் இருக்கும் முரண்பாடுகளை விட்டு முதலில் வெளிவந்து அனைவரும் ஓரணியில் நிற்கவேண்டும். அதன் பின்னரே எமது மக்களுக்கு வழிகாட்டும் தகுதிநிலை உள்ளதை மக்களும் புரிந்துகொள்வார்கள். மண்ணில் இருக்கும் மக்களின் பிரதிநிதிகளும் புரிந்துகொண்டு உங்களுடன் இணைந்து பயணிப்பார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.
அன்பான எமது மக்களே!
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரித்துள்ள தீர்வுக்கான கொள்கையானது எமக்கான இறுதித் தீர்வாக இருக்கும் என்று நாங்கள் கருதவில்லை. அது ஒரு படிக்கல்லாகவே நாங்கள் பார்க்கின்றோம். உலக ஒழுங்கினைப் புரிந்துகொண்டு ஒரு தந்திரோபாய காய் நகர்த்தலின் ஊடாக எமக்கான இறுதி இலட்சியத்தை நோக்கிப்பயணிக்க அவர்கள் முன்வருவார்கள் என்ற நம்பிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் பலப்படுத்துவோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நகர்வுக்கான காலமும் அதிகாரமும் இதுவரை கிடைக்கவில்லை. தற்போது புதிதாக தேர்தலில் குதித்துள்ள பல வேட்பாளர்களும் எமக்கு நம்பிக்கை தருபவர்களாக உள்ளனர். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கான ஒரு சந்தர்ப்பத்தினை நாங்கள் வழங்குவோம். கால ஓட்டத்தில் ஏனையோர் சொல்வதைப் போல அது வழி தவறினால் மக்கள் சக்தியாகிய எம்மால் அதனை நேர்வளியில் இட்டுச் செல்ல முடியும் என வன்னி மக்கள் பேரவையினராகிய நாம் நம்புகின்றோம்.
எனவே! ஏனைய உதிரிக்கட்சிகளின் பசப்புவார்த்தைகளையும், வாக்குறுதிகளையும் நம்பி ஏமாறாமல், எமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய எம்முடன் நின்று செயற்படக் கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்தவன் ஊடாக எமது உரிமைக்குரல்களை மீண்டுமொருமுறை உலகிற்கு உரக்கச் சொல்வோம்.
நன்றி.
தமிழ் தேசியம் மீதான அசையாத நம்பிக்கையுடன்..
வன்னிமக்கள் பேரவை.
vannipeopleassociation@gmail.com



0 Responses to எது சரி என்பதை எம் மக்களே தீர்மானிப்பர் - வன்னிமக்கள் பேரவை!