எவ்வாறாயினும் 8ஆம் திகதி தேர்தல் முடிபடைந்துவிடும். அதன் பின்னர் வென்றவர்கள், தோற்றவர்கள் என்ற பிரிவினர்களோடு, சுனாமி வேகத்தில் அடித்த தேர்தல் அலை அமைதி கொள்ளும். தேர்தல் அலையின் அமைதியோடு எங்கள் பிரச்சினையும் அமைதியாகிப் போகும் அபாயம் இருப்பதை உணரமுடிகின்றது. இங்குதான் தமிழ்த் தலைமைகள் விழிப்பாகவும்,புத்திசாதுரியமாகவும் செயலாற்ற வேண்டிய தேவை உண்டு.தேர்தலில் அலைந்து திரிந்த அலுப்பைப் போக்க நினைத்தால் எல்லாமே பாழாகிவிடும்.
எனவே தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக எந்தளவு தூரம் இராப்பகலாகப் பாடுபட்டீர்களோ அதைவிட பலமடங்கு வேகத் தில்-உற்சாகத்தில் உங்கள் உழைப்பு இருக்கும் போதுதான் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும்.
அன்புக்குரிய வேட்பாளப் பெருமக்களே! நீங்கள் 324பேர். எல்லோருமே இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி பேசுகின்றீர்கள். இதில் உண்மையாக-விசுவாசமாக-இனப்பற்றோடு பேசுபவர்கள் யார் என்ற உண்மை உங்களுக்கு மட்டுமே தெரியும். அதுபற்றி அப்பாவித் தமிழ் மக்கள் அறியார்கள். அவர்கள் அறியவும் விரும்பவில்லை. ஏன் என்றா கேட்கிறீர்கள்.
ஈழத் தமிழர்கள் நெப்போலியன் போல் ஐந்து தடவைகள் தோற்று ஆறாவது தடவையில் வெல்லலாம் என்ற நம்பிக்கையில் இருப்பவர் கள் அல்ல.காலாகாலமாகத் தோல்வி. அகிம்சையில்-ஆயுதத்தில்-சமாதானப் பேச்சுவார்த்தையில்-உலக நாடுகள் உதவும் என்ற நம்பிக்கையில்-எங்கள் பிரதிநிதிகளாகப் நாடாளுமன்றம் சென்றவர்கள் எங்களுக்காகப் பேசுவார்கள் என்ற நினைப்பில்
ஆண்டவா! ஒன்றா, இரண்டா… எல்லாம் வெற்றும் வெறுது மாகிப் போன பின்பு 324 பேரென்ன மூவாயிரம் பேராக இருந்தாலும்… எங்கள் மனங்கள் துன்பத்தில் தோய்ந்து இழந்துபோன உறவுகளின் ஆத்ம சாந்திக்காக மெளனமாய்ப் பிரார்த்திப்பதில் மட்டுமே…
என்னருமை வேட்பாளப் பெருமக்களே! உங்கள் இதயங்களைத் தொடுங்கள்.உங்கள் தாய் மீது சத்தியம் செய்யுங்கள். அன்னை தமிழுக்கு-நொந்துபோய் பரிதவிக்கும் உங்கள் உடன் பிறப்புகளுக்கு மனதாலும் தீங்கிழைக்க மாட்டோம் என்று உறுதி உரை செய்யுங்கள். தேர்தலில் வென்று ஆறாவது திருத்தச் சட்ட மூலத்தில் சத்தியம் செய்யமுன் இதனைச் செய்யுங்கள். இது மிகவும் அவசியம்.



0 Responses to எனது அருமை வேட்பாளப் பெருமக்களே! அன்னை தமிழ்மீது சத்தியம் செய்யுங்கள்