வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரை நிகழ்வில் பங்கு கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் பெருமளவான சுயேட்சைக்குழுக்களும், கட்சிகளும் இந்தத் தேர்தலில் கடந்த காலங்களை விடவும் மிகக் கூடுதாகப் போட்டியிடுகின்றன.
சர்வதேசத்தில் இருந்து பார்க்கின்ற போது இந்த நடவடிக்கையானது வடக்கு கிழக்கில் உண்மையான ஜனநாயகம் நிலவுவதாகவே தெரியும். உண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை தோற்கடிக்கவேண்டும் என்ற நோக்கிலேயே சுயேட்சைக்குழுக்களின் வருகை என்பது அதிகரிக்க வைக்கப்பட்டது.
ஏற்கனவே போரின் மூலம் வெற்றி பெற்றுவிட்டதாக கூறிவருகின்ற மகிந்த அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்துவிட்டதன் பின்னர் இனிவரும் காலங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து எவரும் பேசக்கூடாது என்பதனை இலக்காகக் கொண்டே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
எனவே தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிபடுத்தக்கூடிய பலம்மிக்க தமிழ் சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே உள்ளது. எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினை சிதைப்பதற்காகவே பெருமளவான சுயேட்சைக்குழுக்களும், கட்சிகளும் மகிந்த அரசினால் தேர்தல் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.
தற்போது எமது பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு யார் உள்ளார்கள்? தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனச் சொல்கின்ற அனைவரும் அரசு சொல்கின்ற அனைத்தையும் கேட்டுச் செயற்படுபவர்களாகவே இருக்கின்றார்கள்.
வன்னியில் அபிவிருத்தி செய்யப்படுவதாகக் கூறப்படுகின்றதே தவிர, வன்னியில் என்ன அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. மன்னாரில் வவுனியாவில் இராணுவ முகாம்களைத் தவிர வேறென்ன அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. என்று கேள்வி எழுப்பிய சுரேஷ் பிறேமச்சந்திரன்,
அபிவிருத்தி என்கின்ற போது மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டிருக்கின்றது. மக்களிற்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு ஏதாவது வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதா?
யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு ஆசனங்களையாவது தமது சார்பில் பெற்றுவிட வேண்டும் என்றும் அவ்வாறு பெற்றால் அதனை வைத்துக் கொண்டு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என அவர்களைக் காட்டி அரசியல் செய்யலாம் என அரசாங்கம் நினைக்கின்றது. இதற்கு தமிழ் மக்கள் இடம் கொடுக்கமாட்டார்கள்.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எமது மக்கள் மிகத் தெளிவாக ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது தற்போதைய ஜனாதிபதி மகிந்தராஜபக்சவை ஒட்டுமொத்த தமிழ் சமூகமுமே நிராகரிக்கின்றது என்பதே அந்தச் செய்தியாகும்.
ஆனால் மகிந்த தற்போதும் கூறிவருகின்றார் தான் தான் இலங்கையின் ஜனாதிபதி என்று. ஆனால் வடக்கு கிழக்கில் ஒரு மாவட்டத்தில் கூட வெற்றி பெறாத ஒருவரால் எவ்வாறு இலங்கையின் ஜனாதிபதியென தன்னைக் கூறிக்கொள்ள முடியும்.
ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களித்து ஜனநாயகத்தின் மூலம் பதிளித்த எமது மக்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைமை யார் என்பதை வெளிப்படுத்துவார்கள்.
வடக்கு கிழக்கும் இணைக்கமுடியாது. தமிழ் மக்களுக்கு அதிகாரம் தேவை இல்லை. அதிகாரத்தை வைத்துக் கொள்ள தமிழ் மக்களுக்கு முதிர்ச்சி போதாது என்பதுதான் அவரது கருத்து. வடக்கு கிழக்கு என்பது தமிழ் பேசும் மக்களினுடைய வரலாற்று இருப்பிடம் என்று இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் முதலாவது சரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இணைக்கவேண்டும் என்று நாங்கள் கேட்கின்றோம்.
அதனை இணைக்க முடியாது என்று சொல்வதற்கு இவர்கள் யார்? எமது பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எமது கடந்த காலப் போரில் 3இலட்சம் வரையிலான உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. இழந்த உயிர்கள் ஒவ்வொன்றும் விடுதலைக்காகவே இழந்திருக்கின்றன. ஆனால் அந்த தியாகங்களைப் பற்றிப் பேசுவதற்கு எவரும் தயாரில்லை.
இன்று எமது மக்களின் பிரச்சினைகள் சர்வதேச ரீதியாக முக்கியமானவையாகப் பேசப்படுகின்றன. உலகின் முக்கிய நாடுகள் அனைத்திலும் எமது பிரச்சினைகள் பற்றிப் பேசப்படுகின்றன. இவ்வாறான நகர்வுகளுக்கு புலம்பெயர்ந்து வாழ்கின்றன எமது உறவுகள் முக்கியமாக துணைநின்றிருக்கின்றார்கள்.
இன்று சர்வதேசத்தின் மத்தியில் எமது பிரச்சினைகள் முக்கியமாகப் பேசப்பட்டுவருகின்ற இன்றைய நிலையில் நாங்கள் மிகப்பெரிய சக்தியாக வெற்றிபெறவேண்டும்.
தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினை தடை செய்யப் போவதாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யும் நடவடிக்கையானது தனிநாட்டினைப் பெற்றுத் தருவதற்காவே அமையும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.



0 Responses to கூட்டமைப்பினைத் தடை செய்யும் நடவடிக்கை தனி நாட்டைப் பெற்றுத்தரவே வழிவகுக்கும்: சுரேஷ் பிறேமச்சந்திரன்