நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய ஆளும் கட்சியின் தலைவர் தமிழ்தேசியக் கூட்டமைப்பினரிடம் தம்முடன் சேர்ந்து செயற்பட வருமாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவருகிறது.தேர்தலில் வெற்றியீட்டிய பின் ஆளும் கட்சியினர் நேற்று ஞாயிற்று கிழமை கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் ஆளும்கட்சி அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்:
இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்துடன் பேசத் தயாராகவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ள நிலையில் அக்கட்சியினருடன் பேசுவதற்கு ஆளுந்தரப்பு தயாராகவிருக்கிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மைத்திரிபால சிறிசேன நாம் ஏற்கனவே கூறியதுபோல் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட வருமாறு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம். இதன்மூலம் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்று கூறினார்.
இதேவேளை, பொதுத் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், வட மாகாணசபைத் தேர்தல் எப்போது நடைபெறுமென கேள்வியெழுப்பப்பட்ட போது பதிலளித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த, கண்ணிவெடி அகற்றல் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியடைய இன்னும் சில காலம் எடுக்கும். அதற்குப் பின்னரே வட மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டிவரும் என்று தெரிவித்தார்.
முடிவில் அவர் தமக்கு வாக்களித்த மக்கள், தேர்தலை நடாத்திமுடிக்க உதவிய ஆணையாளர், காவல்துறை மா அதிபர், முப்படையினர், அரச அதிகாரிகள் அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்தார்.



0 Responses to த.தே.கூ க்கு அரசாங்கம் அழைப்பு