இவை தவிர்க்கப் பட வேண்டும்.தோற்றவர்களை விமர்சிப்பது நியாயமானதாக இருப்பது அவசியம். அதற்கு ஒரு எல்லையும் உண்டு. இப்போது தோற்றவர்கள் முன்பு வென்றபோது அந்த வெற்றியைக் கொண்டாடி விட்டு, தோற்ற போது நியாயம் அளப்பதென்பது நாகரிகமல்ல.இன்று தோற்றவர்கள் நாளை வெல்லலாம்.
இன்று வென்றவர்கள் நாளை தோற்கலாம். இவை மக்களின் முடிபுகளைப் பொறுத்தது. இவை பற்றி விமர்சிப்பதாக இருந்தால் தவறுகள் எங்கு நடந்தாலும், எப்போது நடந்தாலும், எவரால் நடந்தாலும் அவை சுட்டிக்காட்டப்பட்டிருக்க வேண்டும். அதைச் செய்ய முடியாவிட்டால், அமைதியாக இருப்பதே நல்லது.அதேசமயம் இலங்கைத் தமிழர் விவகாரம் என்பது தனிநபர் சொத்தோ அல்லது கட்சிகளின் ஆதனமோ அல்லது தேர்தலில் வென்ற வேட்பாளர்களின் முதுசமோ அல்ல.
அது இலங்கைத் தமிழர்கள் அனைவரினதும் ஒட்டுமொத்தமான விவகாரம்.இங்கு கருத்துக்கள் சொல்வதற்குத் தமிழ் மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. இதில் தோற்றவர்கள், வென்றவர்கள் என்ற பாகுபாட்டிற்கு இம்மியும் இடமில்லை. ஆகையினால், கருத்துச் சுதந்திரத்தைத் தடுக்கும் சர்வாதிகாரச் சிந்தனையை அடியோடு தோண்டி எடுக்க வேண்டும்.
இவை பொதுவில் முன்வைக்கப்படும் கருத்துக்கள். இதன் மறுமுனை தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றியதாகும்.தேர்தலில் ஒற்றுமைப்பட முடியாமல் போன தமிழ்த் தலைமைகள் தேர்தல் முடிபுக்குப் பின்பாவது ஒற்றுமைப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் விருப்பம். தமிழ் அரசியல் தலைமைகள் ஒற்றுமைப்பட மறுக்கும் ஒவ்வொரு கணமும் எம்மினத்தின் எதிர்காலம் மிக மோசமானதாக இருக்கும்.
அரசியல் தலைமைகள், அவற்றின் கொள்கைகள், கருத்துக்கள் வேறுபட்டவையாக இருக்கலாம். அதுபற்றி எவரும் கருத்துரைக்க வேண்டியதில்லை. ஆனால் இனப்பிரச்சினைத் தீர்வு என்று விடயத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் ஒற்றுமைப்பட்டே ஆக வேண்டும்.
இந்த ஒற்றுமைக்கு யார் குந்தகம் செய்தாலும், அது தமிழ் மக்களால் புறக்கணிக்கப்படும். எனவே பகைமைகளை வளர்ப்பதிலும் தனிப் பட்ட குரோதங்களை வியாக்கியானம் செய்வதிலும் நேரத்தைச் செலவிடும் தமிழ் ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
குறிப்பாக தமிழ் ஊடகங்கள் ஒன்று சேர்ந்து தமிழ் அரசியல் தலைமைகளை ஒற்றுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவது காலத்தின் கட்டாயம். இல்லையேல் தமிழ் மக்கள் எப்போதும் பாவப்பட்டவர்களாகி விடுவர்.



0 Responses to தமிழ் அரசியல் தலைமைகள் ஒற்றுமை பற்றிச் சிந்திக்க வேண்டும்: வலம்புரி