கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களில் ஏறத்தாள 70 தொடக்கம் 80 விகித மக்கள் வாக்களிப்பை புறக்கணித்துள்ளனர். ஈழத்தமிழ் மக்களின் இந்த புறக்கணிப்புக்கள் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்பில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
வடக்கு கிழக்கில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களை சேர்ந்த 1,800 பேர் போட்டியிட்டிருந்தனர். ஆனால் வடக்கில் 18 விகித மக்களே வாக்களித்துள்ளனர். யாழில் இருந்து இடம்பெயர்ந்து கொழும்பு மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களையும் சேர்த்தால் அது 23 விகிதமாகும்.
சிறீலங்காவில் 56 விகித மக்கள் வாக்களித்துள்ளனர். வழமையாக சிறீலங்காவின் பொதுத்தேர்தலில் 75 விகித மக்கள் வாக்களித்துவந்த நிலையில் இந்த தடவை ஏற்பட்ட வீழ்ச்சி என்பது தமிழ் மக்கள் மட்டுமல்லாது சிங்கள மக்களும் சிறீலங்காவின் ஜனநாயக நடைமுறைகளில் நம்பிக்கையிழந்து விட்டனர் என்பதை தான் காண்பிக்கின்றது.
மேலும் யாழ் குடாநாட்டில் 7,24,000 வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் அலுவலக அறிக்கைகள் தெரிவித்து வருகின்றன. எனினும் தற்போது அதிக மக்கள் போரினால் இடம்பெயர்ந்துள்ளதால் அதன் உண்மையான எண்ணிக்கை 6 இலட்சமாக இருக்கலாம் என யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இருந்தபோதும் மிகப்பெரும் ஊடக பரப்புரை பலத்துடன் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் யாழ்குடாநாட்டில் 65,119 வாக்குகளையே பெறமுடிந்துள்ளது. ஆனால் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் பிரித்தானியாவில் நடைபெற்ற வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான மீள் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் 64,256 புலம்பெயர் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தனர்.
எனவே, வடக்கில் மக்கள் தமது மௌனத்தின் ஊடாக கூற வந்த செய்தி என்ன? அவர்கள் தமக்கான அர்ப்பணிப்புள்ள புதிய அரசியல் தலைமை ஒன்றை தேடுகின்றனர் என்பதே அதன் அர்த்தமாகும். பலவித அழுத்தங்களுக்கு மத்தியில் வாழும் அந்த மக்கள் அதனை தான் தெளிவாக தெரிவித்துச் சென்றுள்ளனர்.
யாழில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 65,119 வாக்குகளையும், ஈபிடிபி துணைஇராணுவக்குழு மற்றும் அரச கூட்டணி 47,622 வாக்குகளையும், ஐ.தே.க 12,624 வாக்குகளையும், தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி 6,362 வாக்குகளையும் பெற்றுள்ளன.
வன்னியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 41,673 வாக்குகளையும், மட்டக்களப்பில் 66,235 வாக்குகளையும் பெற்றுள்ளது. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 634,000 இற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்ற கூட்டமைப்பு போர் நிறைவுபெற்ற பின்னர் இரண்டு இலட்சத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறீலங்காவின் ஜனநாயக செயற்பாடுகளிலும், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என கூறிக்கொண்டு பொதுத்தேர்தலில் களமிறங்கியவர்களையும் முற்றாக புறக்கணித்துள்ள இந்த அப்பாவித் தமிழ் மக்களின் அரசியல் தேடல் என்பது தான் என்ன?
முள்ளிவாய்க்கால் கடற்கரை மணலில் புதைந்துபோன தமது அக்கினிக் குழந்தைகள் ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளையும், அரசியல் அபிலாசைகளையும் மீண்டெடுக்க மீண்டும் திரும்பி வாருவார்கள் என்பதா?
அல்லது தற்காலிகமாக ஆயுதங்களை மௌனிப்பதாக கூறிச்சென்ற தமது தேசத்தின் புதல்வர்களின் கை அசைப்புக்காகவா?



விடுதலைபுலிகள் தான் உலகத்தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை தமிழ் மக்கள் பல முறை நிருபித்து விட்டார்கள்,இதை உலக நாடுகள் எப்போது ஏற்கிறதோ அன்று தான் தமிழர்களுக்கு விடிவு.இதற்காக தமிழர்கள் முழு மூச்சுடன் தொடர்ந்து செயற்படவேண்டும்.தமிழர்கள் விடுதலிப்புலிகளின் கையசைப்புக்காக காத்திருப்பதில் தவறில்லை.