பிரித்தானியாவில் நடைபெறும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில், வடமேற்கு [NW] இலண்டன் பகுதியில் போட்டியிடும் ஜெயவாணி அச்சுதன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.அன்பு நண்பர்களே, தமிழ் உறவுகளே,
மே 2 -நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்
பிரித்தானியாவில் நடைபெறும் இத்தேர்தலில், வடமேற்கு [NW] இலண்டன் பகுதியில் நான் போட்டியிடுகின்றேன். தாயகத்தில் நிகழ்ந்த வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தில் ,ஆயிரமாயிரம் பெண்கள் இணைந்து களப்பணியாற்றினார்கள்.
அவர்கள் புரிந்த பெரும் சாதனைகள் எதுவென்று, உங்களுக்கு நன்றாகப்புரியும். இந்த மாதத்தில்தான் ,அமைதி காக்க வந்த இந்திய ஆக்கிரமிப்புப் படைக்கு எதிராக, காந்தியின் அகிம்சைப் போராட்ட வடிவத்தை கையிலெடுத்து, தனது உயிர்ப்பூவை எம் தாயக மண்ணில் உதிர்த்தார் அன்னை பூபதி அம்மா.
சுயநலம் கொண்ட பிராந்திய வல்லூறுகள் ஒன்றிணைந்து , எமது மக்களின் போராட்டவடிவமொன்றினை முள்ளிவாய்க்காலில் சிதைத்தார்கள். ஜனநாயகப் பாரம்பரியமிக்க மேற்குநாடுகளில் இருந்து ,நாம் மறுபடியும் நிமிர்ந்தெழுகின்றோம்.
புலம் பெயர்ந்து வாழும், அனைத்து ஈழத்தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து உருவாகும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்கிற பொதுத் தளத்தில் அணிதிரள்வோம்.
அந்தவகையில், தேசியத்தலைவரின் சிந்தனைக்கேற்ப, இளைய தலைமுறையைச் சார்ந்த நான் இத்தேர்தலில் களமிறங்குகின்றேன்.
எமது மாவீரர்களினதும், மக்களினதும் இலட்சிய தீபத்தினை , அணையாது பாதுகாத்து ஏந்திச் செல்வேனென உறுதியளிக்கிறேன்.
எமது இனத்தின் அடியழிக்க நினைப்போரை, இராஜதந்திரப்போரில் வெல்வோம்.
உங்கள் அன்பு உறவு
ஜெயவாணி அச்சுதன்



0 Responses to நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்கிற பொதுத் தளத்தில் அணிதிரள்வோம்: ஜெயவாணி அச்சுதன்