உலகத்தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் ஏற்பாடு செய்திருந்த ஒன்றுகூடலில் கலந்துகொள்ளும்படி விடுக்கப்பட்டிருந்த வேண்டுகோளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தவிர்த்துக் கொண்டார்.இரண்டு தமிழ் தேசிய கட்சிகளையும் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்த உலகத் தமிழர் பேரவை தலைவர் எஸ். ஜே. இம்மாறுவேல் அவர்களால் இக்கலந்துரையாடல் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
அதேவேளை தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று கலந்துகொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது தரப்பின் நியாயங்களை விளக்கியதுடன் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விளக்கத்தையும் வழங்கினார் என உலகத் தமிழர் பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை (02/04/2010) அன்று இந்த சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது.
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளின் மக்கள் கட்டமைப்புக்களை ஒருங்கிணைத்து உலகத் தமிழர் பேரவை என்ற குடையமைப்பு இயங்கி வருவது தெரிந்ததே. இந்த அமைப்பின் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை இணையவழிக் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடாகியிருந்தது.
தாயகத்தில் நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இரு தமிழ்த் தேசிய அணிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியையும் அழைத்து அவர்களின் நிலைப்பாடுகள் தொடர்பாகக் கேட்டறிந்து, முரண்பாடுகளைக் களைந்து ஒற்றுமையாகச் செயற்படுமாறு அவர்களை ஊக்குவிப்பதே அக்கலந்துரையாடலின் நோக்கமாகும். அன்றைய நாளில்தான் Good Friday Appeal என்று இரு தலைவர்களுக்கும் அருட்தந்தை இம்மானுவேல் அடிகளார் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அருட்தந்தையின் அறிக்கையைத் தொடர்ந்து, ‘இருதரப்புடனும் இதுகுறித்துக் கலந்துரையாடினீர்களா? ஏதாவது அனுகூலமான பதில்கள் வந்தனவா?’ என தகவலறியும் பொருட்டு பேரவையினரைத் தொடர்புகொள்ள முற்பட்டபோது மேற்படித் தகவல்கள் கசிந்தன.
அன்றைய கலந்துரையாடலில் கலந்துகொள்ளும்படி இரா. சம்பந்தனுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இம்மானுவேல் அடிகளார் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி கஜேந்திரகுமார் அச்சந்திப்பில் கலந்துகொண்டதோடு அங்கே கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் விளக்கமளித்தார்.
அதேவேளை அழைப்பு விடுக்கப்பட்டிருந்த - வருவதாக ஒப்புக்கொணடிருந்த இரா. சம்பந்தன் அவர்கள் அக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளவில்லையென செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பந்தன் கலந்துகொள்ளாத நிலையில் அக்கலந்துரையாடல் முடிவுற்றது என அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இதேவேளை, ஏற்கனவே நிகழ்ந்த சில பிரச்சனைகள் குறித்து சம்பந்தரிடம் விளக்கம் கேட்கவென சிலர் தயாராகியிருந்ததாகவும், குறிப்பாக கடந்த அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கென உலகத்தமிழர் பேரவை அங்கத்தவர்களால் எழுதப்பட்டு சம்பந்தரிடம் சேர்க்கப்பட்ட கடிதம் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாசித்துக் காட்டப்படாதது, பேரவையில் உள்ளடங்கியிருக்கும் ஓரமைப்பு சம்பந்தர் அவர்களது நாட்டுக்கு வருகை தந்தபோது அவரைச் சந்திக்க விண்ணப்பித்து அது நிராகரிக்கப்பட்டது, மேலும் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்பன தொடர்பான சந்தேகங்கள் என்பவற்றை அவரிடம் கேட்டுத் தெளிவுறும் எண்ணத்தோடு அவர்கள் சம்பந்தரை எதிர்பார்த்திருந்ததாகவும், இவற்றைத் தவிர்க்கவே அவர் அக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளாமல் இறுதிநேரத்தில் தவிர்த்தார் எனவும் பேரமைப்பின் அங்கத்தவர்கள் சிலர் கருதுவதாகவும் தெரிய வருகிறது.



0 Responses to இறுதி முயற்சியும் பலனளிக்கவில்லை! உலகத் தமிழர் பேரவையின் ஒன்றுகூடலைத் தவிர்த்தார் சம்பந்தர்