Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர் தாயகத்தில் கடந்த வருடம் சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மனிதப்பேரவலத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்து உலகெங்கும் நடத்தப்பட்ட சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிரான நாள் சிட்னியிலும் அனுட்டிக்கப்பட்டது. கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வு கொட்டும் மழையிலும் கடும் குளிருக்கும் மத்தியில் உணர்வுபூர்மாக நடைபெற்றது.

சிட்னி மார்ட்டின் சதுக்கத்தில் மாலை 6 மணி முதல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுடன் கலந்துகொண்டனர்.

அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா அரச பயங்கரவாதிகளால் படுகொலைசெய்யப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களின் நினைவாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சிட்னி கிளை முன்னாள் பொறுப்பாளரும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான நியூ சவுத் வேல்ஸ் மாநில வேட்பாளருமான குலசேலகரம் சஞ்யன் ஏற்றிவைத்தார். ஆஸ்திரேலிய தேசிய கொடியினை தமிழ் இளையோர் அமைப்பின் சிட்னி பொறுப்பாளர் கார்த்தீபன் அருளானந்தம் ஏற்றிவைத்தார்.

ஆரம்ப நிகழ்வுகளை தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன. ஆஸ்திரேலிய இடதுசாரிகளின் கீறீன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லீ றியனன், சோசலிச கட்சியை சேர்ந்த பிப் ஹென்மன், அகதிகள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த ஸ்டீவ் ப்ளாங்கஸ் ஆகியோர் உரையாற்றினர். அவர்களை தொடர்ந்து சம கால அரசியல் நிலைவரம் குறித்தும் முள்ளிவாய்க்கால் படுகொலை என்பது தமிழர்களது போராட்டத்தில் எவ்வாறான வடுவை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்தும் தமிழர்களின் வாழ்வில் ஆழப்பதிந்துள்ள இந்த இழப்புக்களிலிருந்து அடுத்த கட்ட போராட்டம் எவ்வாறு அமையவேண்டும், அதனை சர்வதேசத்தின் அங்கீகாரநிலைக்கு எவ்வாறு நகர்த்தி செல்லவேண்டும் என்பவை பற்றியும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் முன்னாள் பேச்சாளர்களில் ஒருவரான மயில்வாகனம் தனபால் உரையாற்றினார்.

அவரை தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான விளக்கம் மற்றும் இழப்புக்களிலிருந்து எழுந்து நகர ஆரம்பித்துள்ள தமிழினம் தமது அடுத்த கட்ட போராட்டத்தை சர்வதேசத்திற்கு புரிகின்றன மொழியான ஜனநாயகம் எனப்படுவதின் ஊடாக எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பவை குறித்து நாடு கடந்த தமிழீழ அரசுக்கான நியூ சவுத் வேல்ஸ் மாநில பேச்சாளர் யோகன் எடுத்துக்கூறினார்.

நிகழ்வின் இறுதியாக உறுதியுரை இடம்பெற்றது. உறுதி உரையை தமிழ் ஒருங்கிணைப்புக்குழுவின் சிட்னி கிளை பொறுப்பாளர் ஜனகன் வாசிக்க நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தங்களது நெஞ்சில் கைவைத்து அதனை மீளுரைத்துக்கொண்டனர்.

சிட்னியில் நடைபெற்ற இந்த நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்தது என்றே கூறவேண்டும். எதிர்பார்த்தது போல் அல்லாமல் தீடீரென ஆரம்பித்த மழையினால் சிட்னி நகரமே வெள்ளத்தால் நிறைந்தது. சடுதியாக வீச ஆரம்பித்த கடும் காற்றும் குளிரும் வெளியரங்க நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு எந்த விதத்திலும் ஒத்துழைக்கவில்லை.

ஆனாலும் சிட்னியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்த மக்கள் தமது தாயக உறவுகளை நினைவுகூரும் கடமையை செவ்வனெ செய்துகொண்டனர். குழந்தைகள் முதல் வயது வந்தவர்கள் வரை குடைகளுடன் மழைக்கவசங்களுடன் மார்ட்டின்டி சதுக்கத்தில் திரண்டு நின்று, கடுமையான குளிருக்கு மத்தியிலும், நிகழ்வு நடைபெற்ற அந்த இரண்டு மணி நேரமும் உணர்வுடன் கலந்துகொண்டு தமது எழுச்சியை எடுத்துரைத்தனர்.

0 Responses to சிட்னியில் உணர்வுடன் அனுட்டிக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு எதிரான நாள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com