
கடல் கடந்து வாணிபம் செய்வதற்கும்,தனது வெற்றிக்கொடியை நாட்டுவதரற்கும் கப்பலில் உலகம் முழுவதும் பயணம் செய்த நம் தமிழினம் இன்று வாழ வழியில்லாமல் கப்பலில் நாடு நாடாகத் திரியும் அவலம் நம் கண் முன்னே நிகழ்கின்றது. தங்கள் தாய்த்திருநாட்டில் சிங்கள இனவாதத்தால் மானத்துடன் உயிர் வாழ வழியின்றி எங்காவது சென்று உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் தப்பித்து சென்ற நம் ஈழத்தமிழர்கள் பெண்கள், குழந்தைகள் உட்பட 75 பேர் மலேசிய கடல் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அந்நாட்டு கடற்படை அதிகாரிகளினால் பினாங்கு கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கும்படி மலேசிய அரசாங்கத்தை அவர்கள் கேட்டுக்கொண்டனர். இந்த கோரிக்கையினை முதலில் எற்றுக்கொண்ட மலேசிய அரசாங்கம், பிறகு ஏற்க மறுத்ததால் கப்பலை விட்டு இறங்காமல் தொடர்ந்து இரண்டு நாட்களாக பழுதடைந்த கப்பலிலேயே இருந்தனர்.
இந்நிலையில் தங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் நாடுகளுக்கு அனுப்பி வைக்குமாறு கோரி மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 75 பேர் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். இதில் 5 பேர் சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருக்கின்றனர். உண்ணாவிரதத்தை கைவிடும்படி முகாம் அதிகாரிகள் வலியுறுத்தியும் அவர்களின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்வதாக அங்கிருந்து செய்திகள் தெரிவிக்கின்றன.
அங்குள்ள தமிழர்கள் விரும்புவதெல்லாம் தங்கள் இனத்தை அழித்த இலங்கையிடம் தங்களை ஒப்படைக்க கூடாது,தங்கள் கோரிக்கையை காது கொடுத்து கேட்பதற்கு அக்கறையுடன் செயல்படும் சர்வதேச தொண்டு நிறுவன அமைப்புக்களை தங்களைப்பார்க்க அனுமதிக்க வேண்டும், தாங்கள் மானத்துடன் உயிர் வாழ்வதற்கு ஒரு நாட்டிடம் தங்களை ஒப்புவிக்க வேண்டும். நாம் தமிழர் இயக்கமும் உலகத்தமிழர்களும் தங்களால் முயன்ற அளவில் பல்வேறு வழிகளில் போராடிய பின்னரும் எந்த தீர்வும் கிட்ட வில்லை.
அனைவரும் இதில் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதியும் தனது அக்கறையை இந்த விஷயத்தில் செலவிட வேண்டும். அவர் மத்திய அரசில் தனக்கு இருக்கும் செல்வாக்கை தமிழர்களின் உயிர் காக்கும் இந்த விஷயத்தில் பயன்படுத்த வேண்டும்.பல்லாயிரக்கனக்கான தமிழர்கள் பலியான பொழுது அவர்களைக்காப்பாற்ற எதனையும் செய்ய வில்லை என்ற நிலையில் குறைந்தபட்சம் உண்ணாவிரதம் இருக்கும் இந்த 75 தமிழர்களையாவது காப்பாற்றும் நடவடிக்கைகளை எடுக்க முன் வர வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.
0 Responses to மலேசியாவில் தத்தளிக்கும் தமிழர்களை காக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்