Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொலிஸ் அதிகாரங்கள் எப்போதும் மத்திய அரசிடமே இருக்கவேண்டும். மாகாணங்களுக்கு வழங்கப்படக்கூடாது. இதில் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. அண்மையில் மும்பையில் நடந்த தாக்குதலைக் கவனியுங்கள். எத்தனையோ தடைகளையும் கடந்து இராணுவ கொமாண்டோக்கள் பல மணிநேரப் போராட்டத்தின் பின் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

"ரைம்ஸ் ஒவ் இந்தியா'வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அளித்த பேட்டியில் இப்படிக் கூறியுள்ளார். புலிகளுடனான போராட்டத்தில் பெற்ற வெற்றியின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டி "ரைம்ஸ் ஒவ் இந்தியா'வுக்கு ஜனாதிபதி இந்தப் பேட்டியை வழங்கி இருந்தார். பேட்டியில் ஜனாதிபதி தெரிவித்துள்ளவை வருமாறு:-

கே: புலிகள் தோல்வியடைந்து ஓராண்டு கடந்துவிட்டது. புலிகள் இயக்கத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ப: தனி ஈழம் அமைவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுடன் பல தடவைகள் பேச்சுகள் நடத்த முயற்சித்தோம். ஆனால், அவர்கள் மறுத்தனர். முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர, வேறு வழி எனக்கு இருக்கவில்லை.
புலிகளின் கதை இன்னும் முடியவில்லை

கே: சரி. இப்போது இது முடிந்த கதையா?

ப: நான் அப்படிச் சொல்லவில்லை. புலிகளின் ஆதரவாளர்களும், உறங்கு நிலையிலுள்ள அனுதாபிகளும் பல நாடுகளிலும் மிகவும் திறமையாகச் செயற்படுகின்றனர். ஆகவே, கதை இன்னும் முடியவில்லை.

கே: இறுதி யுத்தத்தில் 20 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் என்று சொல்லப்படுகிறதே?

ப: இது சரியல்ல. இலங்கை இராணுவம் மிகவும் கட்டுப்பாடுகளோடு செயற்படுகிறது. பொதுமக்களை அது அழிக்கவில்லை. பிரபாகரனின் தாய், தந்தையர் உட்பட பல நெருங்கிய உறவினரும் எமது முகாமில்தான் இருந்தனர். அவர்கள் தாக்கப்படவில்லை என்றால் பொதுமக்கள் தாக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. அவர்களும் எமது மக்களே!

கே: யுத்தம் முடிந்து 180 நாட்களுக்குள் மூன்று லட்சம் உள்ளூர் அகதிகளை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுவோம் என்று உறுதி கூறினீர்களே?

ப: தற்போது முன்னெடுக்கப்படும் முயற்சிகள் எனக்குத் திருப்தி அளிக்கிறது. முகாம்களிலிருந்த மூன்று லட்சம் மக்கள் தொகை இப்போது 30 ஆயிரமாகக் குறைந்திருக்கிறது. இவ்வருட இறுதிக்குள் எல்லா இடங்களிலும் கண்ணிவெடிகளை அகற்றி மிகுதியானவர்களையும் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுவோம்.

கே: புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியாவிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த உதவி கிடைத்ததா?

ப: ஆம். கிடைத்தது. நாங்கள் அதைப் பாராட்டுகிறோம்.

கே: இராணுவ ஆதரவா அல்லது தார்மீக ஆதரவா?

ப: (சிரித்துக்கொண்டே) இரண்டும் எங்களுக்குத் தேவையானவை.

கே: சீன இராணுவ உதவிகள் தொடர்கின்றனவா?

ப: இராணுவ ஆயுதம் மற்றும் ஆயுதத் தளபாடக் கொள்வனவு என்பது இராணுவ விடயம். இந்தியாவிடமிருந்து எவ்வளவு பெறமுடியுமோ அவ்வளவையும் பெற்றோம். மிகுதியை சீனா, பாகிஸ்தான், ஐரோப்பிய ஒன்றியம், இஸ்ரேல் ஏன் அமெரிக்காவிடமிருந்தும் பெற்றோம்.

கே: நீங்கள் ஜூன் 8 இல் இந்தியா வருகிறீர்கள். இதனால் இரண்டு வருடங்களாக கிடப்பில் கிடக்கும் இலங்கை இந்திய பொருளாதார உடன்படிக்கை புத்துயிர் பெறுமா?

ப: பல விடயங்கள் பரிசீலிக்கப்படும். பொருளாதார முன்னேற்றம் முக்கிய இடம் பெறும்.

கே: இந்திய மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கிய அதிகாரம் பற்றி குறை கூறுகிறீர்களே? இது இலங்கையில் அமுல்படுத்த இருக்கும் மாகாண சபைக்கான 13 ஆவது திருத்தத்தை உதறித் தள்ள ஒரு முன்கூட்டிய கண்ணோட்டமா?

ப: இந்தியா ஒரு பெரிய நாடு. இந்தியாவை இலங்கையுடன் ஒப்பிடமுடியாது. மும்பையில் நடந்த தாக்குதலை நோக்கும்போது, பொலிஸ் அதிகாரங்கள் எப்போதும் மத்திய அரசுடன் இருக்கவேண்டியவை.

கே: உங்களது நெருங்கிய பல உறவினர்கள் உங்கள் நிர்வாகத்தில் இருக்கிறார்களே?

ப: நான் என்ன செய்வது. அண்மையில் நடந்த தேர்தலில் மக்கள் அவர்களுக்கு ஆணை கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் தேவையில்லை என்று தெரிந்தால் அவர்கள் ஓரம்கட்டப்படுவார்கள்.

கே: ஒருநாள் முழுவதும் கடும் வேலைக்குப் பின் எப்படி ஆறுகிறீர்கள்?

ப: இந்திப் படம் பார்த்து மகிழ்கிறேன். அண்மையில் சாருக்கானின் படமான "எனது பெயர் கான்' என்ற படத்தைப் பார்த்தேன். இது மேற்குலகில் முஸ்லிம்கள் படும் இன்னல்களை விவரிக்கின்றது. எம்மை மனித உரிமைகளை மீறுகிறோம் என்று குறை கூறுபவர்களும் இக்குற்றத்தையே தமது சொந்த நாடுகளில் செய்கிறார்கள் என படத்தைப் பார்த்த பின் நினைவில் கொள்கிறேன்.

0 Responses to தமிழர் தாயகத்துக்கு காவல்துறைஅதிகாரம் வழங்கப்படமாட்டாது: மகிந்த தெரிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com