Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தமிழினத்திற்கு இலங்கை அரசு பேரழிவை ஏற்படுத்திய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று தமிழீழ மக்களின் விடுதலைக்கான புதிய அத்தியாத்தை ஏற்படுத்திய நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவராக விஸ்வநாதன் உருத்திரகுமாரன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வேற்றினத்தை பிரபல்ய பேரறிஞர்கள், சட்ட ஆய்வாளர்கள் போன்ற கற்றறிந்த அறிஞர்களைக் கொண்ட குழாமை ஆலோசனைக் குழுவாக வைத்து அமைக்கப்பட்ட இத் தமிழீழ அரசு இலங்கை அரசை பலத்த பீதிக்கு உள்ளாக்கிய நிலையிலேயே ஈழத்தமிழினத்தின் புதிய தலைமையை மக்களின் பிரதிநிதிகள் திரு. உருத்திரகுமார் விஸ்வநாதனிடம் கையளித்துள்ளனர்.

ஜனநாயக முறைப்படி புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் தேர்தல் மூலம 115 பிரதிநிதிகளைச் தேர்வு செய்வதற்கான யாப்பை வரைந்து அதனை நடைமுறைப்படுத்தி தேர்தல்களில் வெற்றியீட்டியோரை முதலாவது நினைவு நாளிலேயே தமிழீழ அரசின் முதலாவது அரச அமர்வை நடத்தியதின் மூலம் ஈழத்தமிழினம் விடுதலையடையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியவர் திரு. உருத்திரகுமாரன் விஸ்வநாதன் ஆவார்.

இனப்படுகொலையின் கோரத்தால் நாணிக்குறுகி, கூனிப் போயிருந்த ஈழத்தமிழினத்தின் வாழ்வில் விளக்கையேற்றி வைத்துள்ள இந்த வரலாற்றுச் செயற்பாடு ஈழப்போர் ஐந்து - அரசியற் போராக அமையப் போவதை புடம்போட்டுக் காட்டி நிற்கிறது.

ஈழத்தமிழினம் இனித் தலையெடுக்க முடியாது என இறுமாந்திருந்த இலங்கை அரசின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி நாடுகடந்த அரசை உருவாக்குவதில் முழு மூச்சாக உழைத்த திரு. விஸ்வநாதன் உருத்திரகுமாரனை மேற்குலகில் வதியும் தமிழீழ மக்களின் பிரதிநிதிகள் தமது இரண்டாம் நாள் பாராளுமன்ற ஒன்று கூடலில் ஏகோபித்த முறையில் தெரிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவின் பிடடெல்பியாவில் 87 பிரதிநிதிகள் நேரடியாகக் கலந்த கொள்ள ஏனைய பிரதிநிதிகள் சுவிஸின் ஜெனிவா, இங்கிலாந்தின் லண்டன் மாநகரங்களில் இருந்து நேரடித் தொலைக்காட்சித் தொடர்பினூடாகக் கலந்து கொண்ட இரண்டாம் நாள் நிகழ்வில் இடம்பெற்ற தமிழீழத்தின் தலைமைக்கான தெரிவில்,

திரு. உருத்திரகுமாரன் விஸ்வநாதனிற்கு எதிராக லண்டனில் இருந்து திரு.எஸ்.ஜெயானந்தமூர்த்தி தலைமைக்காகப் போட்டியிட முன் வந்திருந்தாலும் திரு. உருத்திரகுமாரன் அமெரிக்க மற்றும் ஜெனிவாப் பிரதிநிதிகள் ஆகியோரின் ஏகோபித்த ஆதரவையும் லண்டனில் இருந்து கலந்து கொண்ட ஒரு பகுதி உறுப்பினர்களையும் தேர்தலிற்கு முன்பே பெற்றுக் கொண்டதால் திரு. ஜெயானந்தமூர்த்தி போட்டியிடுவதைத் தவிர்த்து திரு. விஸ்வநாதன் உருத்திரகுமாரனைத் தேசியத்திற்கான தலைவராக்கினார்.

அமெரிக்க துணை இராஜாங்கச் செயலர் புலம்பெயர்ந்த தமிழர்களுடன் இலங்கை அரசு பேச்சுக்களை நடத்த வேண்டும் என்ற பகிரங்க வேண்டுகோளை விடுத்த போது அதற்கான தலைமை தமிழர்களிடைய இல்லையே என்ற ஆதங்கத்தில் இருந்த மக்களிற்கு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுத்த இத்தலைமை அதற்கான கனதியைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை ஆணித்தரமாக ஏற்பட்டுள்ளது.

போரின் மூலம் பெற்ற வெற்றிகளினால் சமதரப்பாக பேச்சுக்களில் விடுதலைப்புலிகள் கலந்து கொண்ட காலம் போய், எந்த ஒரு பலமுமற்ற நிலையிலிருந்த ஈழத்தமிழினத்தின் வரலாற்றில்,
தற்போது பேச்சுப்பலமற்று இருக்கும் தமிழர் தரப்பின் இரண்டு காத்திரமான பேசுசக்திகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களத்திலும் நாடுகடந்த அரசு புலத்திலும் செயற்பட்டு ஈழத்தமிழர்களிற்கு விடிவை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை முள்ளிவாய்க்காலின் முதலாண்டு நினைவு தினத்திலேயே ஏற்பட்டுள்ளது தமிழீழ வரலாற்றின் ஒரு மைல்கல்லாகும்.

இதேவேளை தேசியத் தலைவர் அவர்களால் தமிழ்த் தேசியம் சார்ந்த செய்திகளை வெளியுலகிற்கு எடுத்துச் செல்வதற்காகவெனப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தமிழுலகின் ஆங்கிலம்சார் ஊடகம் திரு. உருத்திரகுமாரன் விஸ்வநாதன் சம்பந்தப்பட்ட செய்திகளையும், நாடுகடந்த அரசு தொடர்பான செய்திகளையும் இருட்டடிப்பு செய்வதைத் நிறுத்தி தேசியத்திற்கு ஆதரவான ஊடகமாக மாறவேண்டுமென புலம்பெயர்ந்த தமிழர்கள் உரிமையோடு வேண்டிக் கொள்கின்றனர்.

0 Responses to நாடு கடந்த அரசின் தலைவராக உருத்திரகுமாரன் ஏகமனதாகத் தெரிவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com