Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவுக்கு இராஜபக்சே வருவதை எதிர்த்து இலங்கைத் தூதரகத்துக்கு முன் பல கட்சிகளும், அமைப்புகளும் தனித்தனியே கருப்புக்கொடி போராட்டம் நடத்துவதாய் அறிவித்திருக்கிறார்கள்.

ஏந்துங்கள் கருப்புக் கொடி..

காட்டுங்கள் இராஜபக்சேவுக்கு வெறுப்புக் கொடி..

இது தமிழரது நெஞ்சத்து நெருப்புக் கொடி..

கருப்புக் கொடி காட்டுவோரின் இன உணர்வுக்கு முதலில் என் பாராட்டுகள் கோடி..

அதே நேரத்தில் இராஜபக்சே இந்தியாவுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிலர் இரத்தக் கறை படிந்த இராஜபக்சேவின் வருகைக்கு இரத்தினக் கம்பளம் விரிக்கும் மத்திய அரசை ஏன் கடுமையாக எதிர்க்கவில்லை..

இராஜபக்சேவின் வருகைக்கு ஆட்சேபனை தெரிவிக்காத தமிழக அரசை ஏன் கடுகளவுகூட எதிர்க்கவில்லை..

ஏன் ஒரு வார்த்தைகூட உதிர்க்கவில்லை..

இராஜபக்சேவின் வருகையை எதிர்க்க வேண்டும். அதே நேரத்தில் அவரது வருகையை எதிர்க்காத தமிழக அரசை விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதுதான் இராஜதந்திரம். அது இருந்தால்தான் அவரர்களது செய்தியை அச்சில் ஏற்றும் சில பத்திரிகைகளின் எந்திரம்.

எனக்குப் புரியாமல் போய் விட்டது இந்த மூடுமந்திரம். அதனால்தான் மத்திய அரசையும், மாநில அரசையும் சுட்டிக் காட்டியிருக்கும் இந்த டி.இராஜேந்தரின் அறிக்கையை தமிழ் உணர்வுள்ள ஒருசில நாளேடுகளும், இணைய தளங்களும் மட்டும்தான் செய்தியாய்ப் போட்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு எப்போதுமே நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஆளுங்கட்சியான தமிழக அரசைக் காப்பாற்ற வேண்டிய கடமை உணர்வுள்ள சில பத்திரிகைகள் என் அறிக்கையைத் தூக்கி ஓரம் போட்டிருக்கிறார்கள். பரவாயில்லை. அவர்களின் உணர்வுக்கு நன்றி.

எய்தவர் இருக்க அம்பின்மேல் எனக்குக் கோபமில்லை.. பத்திரிகைகளின் மேல் எனக்கு இல்லை வருத்தம். இவையெல்லாம் ஆளுங்கட்சியின் திருத்தம்.. மாநில அரசு புரியும் மாயம்.. ஒருநாள் வெளுக்காமலா போகும் இவர்களது சாயம்.. இராஜபக்சேவின் வருகை அறிவிக்கப்பட்டு இத்தனை நாள் ஆனது.

அப்போதெல்லாம் கடிதம் எழுதாத முதல்வர் நேற்று அவசர அவசரமாக பிரதம மந்திரிக்கு கடிதம் எழுதியதன் மர்மம் என்ன? நேற்று காலையே வெளியிடப்பட்ட என் அறிக்கையைப் படித்தவர்களுக்கு அதன் விபரம் புரியும்.. இத்தனை நாள் கலைஞர் அவர்களுக்கு கடிதம் எழுத காகிதம் இல்லையா? கால அவகாசமில்லையா? கருத்தில்லையா? இல்லை கதை-திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் இவற்றைப் பற்றியெல்லாம் சிந்திக்க வாய்ப்பில்லையா?

கலைஞரின் கண்ணசைவுக்குக் காத்திருக்கும் பத்திரிகைகளே!

காலம் எப்பொழுதுமே கலைஞர் பக்கம் மட்டுமே இருந்து விடாது.

காலம் மாறும். காட்சி மாறும். ஏன்? ஆட்சியும் மாறும். இது நிச்சயம்.. அதுதான் சத்தியம்.. அதை நிலைநாட்டுவதே என் இலட்சியம்..

அதனால் சில பத்திரிகைகளே!

ஆளுங்கட்சியைக் குளுமைப்படுத்த என் அறிக்கையைச் செய்யுங்கள் அலட்சியம்.. ஆனால், கலைஞர் எப்படிப்பட்டவர் என்பதை அடையாளம் காட்டுவதே என் நோக்கம்.. அதற்காக என் முடிவிலே செய்யவிருக்கிறேன் சில அதிரடி மாற்றம்..

புதிய பாதையிலே செய்வேன் பயணம்.

அதுவரை உறங்காது என் நயனம்..

எவ்வளவு வேண்டுமானாலும் செய்து பாருங்கள் இருட்டடிப்பு.. அதையும் மீறிக் கிழித்துக் கொண்டு வெளியே வரும் என் இதய நெருப்பு.. நான் கற்றுக் கொண்டது ஒன்றுதான்.

இன்றைய உலகில் ஐடியாக்கள் இருந்தால் மட்டும் வெல்ல முடியாது. மீடியாக்கள் இருந்தால்தான் வெல்ல முடியும். கருத்துகளைச் சொல்ல முடியும்.. சுயமாகச் சொல்வதற்கு வகுக்கிறேன் புது வழி.. அதுவரைதான் உங்களால் தமிழனுக்குப் பறிக்க முடியும் இப்படிக் குழி.. சிவந்து விட்டது என் விழி.. சீக்கிரமே போடுகிறேன் பிள்ளையார் சுழி..

என்னைத் தட்டிக் கொடுக்கவும் கிடைக்காமலா போய்விடும் ஒரு சக்தி..

கடைபிடிப்பேன் ஒரு புதிய யுக்தி..

பொறுத்திருந்து பாருங்கள்...

0 Responses to இலட்சிய தி.மு.க. தலைவர் டி.இராஜேந்தர் அறிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com