Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலக அரங்கிலே மாண்புமிகு தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக மற்றைய அரசுகளுடன் சரிசமமாக நின்று எமது உரிமைகளை வென்றெடுக்கவேண்டிய வேளை, எம் மக்களின் தேவைகளை கவனிக்கவேண்டிய நேரம் நம்மில் சிலரின் அறியாமையாலும், சந்தர்ப்பவாதிகளின் சதிகாரத்தனத்தாலும் தனித்துவமான....

....ஓர் அரசியல் சக்தியான நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகள் தாமதமாவது கண்டு வேதனையடைகிறேன், வெட்கப்படுகிறேன், வருந்துகிறேன்.

நாம் எடுக்கவேண்டிய பணிகளைத் தாமதிக்க வைக்க, எம்மிடையே குழப்பத்தை ஏற்படுத்த கே.பி. இதைச் சொன்னார் என்று ஒருவர் கூற, அதற்கு இன்னொருவர் விளக்கம் கூற, அதைக்கண்டு சந்தர்ப்பவாதிகளும், சதிகாரக் கும்பல்களும் வியாக்கியானம் சொல்ல இதனால் பாதிக்கப்படுபவர்கள் யாரப்பா? கொட்டும் மழையிலும் முள்ளுவேலிக்குள் முடங்கி வாழும் எம் அன்பு உறவுகள்தானே.

கே.பி. கூறாததையே அவர் கூறினார் எனக்கூறி கும்மாளம் அடிப்பவர்களே! கே. பி. யாரப்பா? அவர் ஓர் சிங்கள அரசாங்கத்தின் சிறைக்கைதி. அவர் கூறும் எதற்குமே அர்ததம் இல்லாதபோது அவர் நாடுகடந்த தமிழீழ அரசைப்பற்றியும் அதன் தலைவரைப் பற்றியும் இப்படிக் கூறினார் என்று பொய்யான வதந்திகளைப் பரப்புவது ஓர் துரோகச்செயல் என்பதை மறந்துவிடாதீர்கள். சிங்களவர் விருப்பத்திற்கு உருவம் கொடுக்கும் உங்களை எம்மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.

ஈழத்தமிழரின் சாவுக்கு நாள் குறித்த யமனையே தான் போட்ட கணக்குகள் பிழைத்துவிட்டனவே என தடுமாறவைத்த இராசபக்சாவையே கலங்கவைத்த நாடுகடந்த தமிழீழ அரசையும் அதன் தகுதிவாய்ந்த தலைவரான உருத்திரகுமாரனையும் அர்த்தமற்ற, உண்மைக்குப் புறம்பான பிரச்சாரத்தால் முடங்கவைக்க முனைவதை எம்மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் என்பதை சிங்களவர்கள்போல் இவர்களும் புரியும் நாள் வெகுதொலைவில் இல்லை.

நாடுகடந்த தமிழீழ அரசை உடைப்போம், அழிப்போம் என்ற இராசபக்சா சகோதரரின் எண்ணத்தை அறிந்தும் செயற்படும் எம்மவர் சிலரின் மனநிலைகண்டு எந்தத் தமிழராலும் வெதும்பாமலோ அல்லது வேதனையடையாமலோ இருக்கமுடியாது. இது உண்மை.

இங்கு கொச்சை பாடவோ அல்லது குறைகூறவோ இடமில்லை என்பதை எம்மவரில் சிலர் இன்னும் உணராது கூச்சல் போடுவது விசித்திரமானதும், விரும்பத்தகாததுமாகும். இதைக் கூறுபவர்கள் யார்? எதற்காக இதைச் செய்கிறார்கள் என்பதை ஒவ்வொரு தமிழரும் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். பச்சைப் பாம்பா அல்லது பச்சைக்கொடியா என அறிவதற்கு அனுபவம் தேவை என்பார்கள். அதுபோல அரசியலை வாழ்க்கையாகக் கொண்ட உங்களுக்கு இவர்கள் யார்? இவர்கள் நோக்கம் என்ன? என்று விளங்காத விடயமா அல்லது புரியாத புதிரா?

தந்தை செல்வாவின் அறவழிப்போரின் திருப்பம், அதன் பின்பு தேசியத் தலைவரின் தலைமையிலான அந்த அபூர்வம்மிக்க ஆயுதப்போர், இறுதியாக நாம் நடாத்தும் நாடுகடந்த தமிழீழ அரசின் தனித்துவமான அரசியல் முன்னெடுப்பு இவைதானே இறைமையும், சுதந்திரமும் கொண்ட ஓர் தமிழீழத் தாயகத்தைப்பெற நாம் வகுத்த திட்டங்கள்.

எம் அன்பு உறவுகளே! மழையான உங்களை நிலமான நாங்கள் ஏந்துவோம் என்ற உங்கள் எதிர்பார்ப்பை எவராலும் ஒருபோதும் மாற்றமுடியாது. நாடுகடந்த தமிழீழ அரசும், அதன் தலைவர் விசுவநாதன் உருத்திரகுமாரனும் ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டார்கள். இது நிச்சயம். நாடுகடந்த தமிழீழ அரசின் ஆரம்பகாலம் தொடக்கம் அவரையும் அவரின் செயற்பாடுகளையும் நன்றாகத் தெரிந்தவன் நான்.

தமிழரையும், தமிழையும் காக்க தன் உயிரைத் தருவதை ஒரு வரமாக எண்ணிச் செயற்பட்ட எம் மாவீரரின் கனவு நனவாகவேண்டும். தந்தை செல்வாவின் ஆத்மா சாந்தியடையவேண்டும். தேசியத் தலைவரின் முயற்சி முழுமைபெறவேண்டும். இவைதானே தமிழரின் தாகம். இவையெல்லாம் நிறைவுபெற,

* கே. பி க்கும், தனக்கும், நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென் பல அறிக்கைகள் வழக்கறிஞர் விசுவநாதன் உருத்திரகுமாரனால் விடப்பட்டும், தமக்குச் சாத்தியமானவேளை அவரின் விசுவாசத்திற்கு பரீட்சை வைப்பதுபோல் பாசாங்கு செய்யும் சந்தர்ப்பவாதிகளும், சதிகாரக் கும்பலும் தமது முயற்சியை இந்த நிமிடமே கைவிடவேண்டும்.
* நாடுகடந்த தமிழீழ அரசிலும் அதன் தலைவர் உருத்திரகுமாரனிலும் முழு நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தொடக்கம் ஒவ்வொரு தமிழரும் காலதாமதமின்றி கண்ணியத்துடன் ஒத்துழைக்கவேண்டும்.
* எம் இனத்துக்கு உதவி செய்யவேண்டும், அவர்கள் வாழ்வை வளம்படுத்தவேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்டு இதுவரை ஒன்றுமே செய்யமுடியாமல் பதவிகள் வகிக்கும் தமிழீழ அரசின் பிரதிநிதிகள் இனியும் எமது முன்னேற்றத்துக்கு தடையாக இருக்காமல் உடனடியாக தமது பதவிகளில் இருந்து பெருந்தன்மையாக விலகி மற்றவர்களுக்கு இடம்தர வேண்டும்.
*
பிரதிநிதிகளாகத் தேர்வுசெயப்படாத திறமையும், இராசதந்திரமும், சாணக்கியமும் கொண்டவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசில் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். தேர்வுசெயப்பட்ட பிரதிநிதிகள் இவர்களுக்கு தகுந்த பதவிகளையும், அதிகாரத்தையும் கொடுக்கும் மனப்பக்குவத்துடன் செயற்பட வேண்டும்.

அறவழிப் போருக்குத் தேவை மக்களின் பங்களிப்பு, ஆயுதப் போருக்கு வேண்டியது போராளிகள் வீரமும் தீரமும். ஆனால் இன்று நடப்பதோ அரசியல் போர். இது திறமையும், இராசதந்திரமும், சாணக்கியமும் கொண்டவர்களால் நடத்தப்படவேண்டிய மூளைக்கும் மூளைக்குமான ஓர் போர். ஒவ்வொரு தேர்வு செயப்பட்ட பிரதிநிதிகளும், பொறுப்பான பதவிகளை வகிப்பவர்களும் இந்த வர்ணனைக்குள் அடங்குவதே சாலப்பொருந்தது.

கலாநிதி ராம் சிவலிங்கம், நாடுகடந்த தமிழீழ அரசு, கனடா
sivalingham@sympatico.ca


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to கம்பீரமிக்க நாடுகடந்த தமிழீழ அரசை களங்கப்படுத்துபவர்கள் யார்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com