நெ…நா: என்ன முருகேசு கொஞ்ச நாள உம்முடைய பேச்சு மூச்சைக் கானேல்ல என்ன ஏதும் வெட்டி முறிக்கிற வேலை நடக்குதோ.ம…மு: நான் படுகிற பாட்டுக்கை இந்தக் கிண்டல் தானே வேண்டாம் என்கிறது. உன்னை பற்றி எனக்கு தெரியாது என்று நினைக்கிறியே வலு பக்குவமாய் முருகேசு என்கிறாய். நான் அங்காலை போனதும் மடார் முருகேசு எண்டு சொல்லிச் சிரிப்பாய்.
நெ…நா: ஏன்டாப்பா கோவிக்கிறாய் நான் மாத்திரமே சொல்லுறன் உங்க ஊரே அப்படித்தானே சொல்லினம். அது தான் உன்ரை மூத்த மோன் தன்னை மடார் முருகேசுவின் மகன் என்று சொல்லித் திரியிறான் அது தெரியாதெ உனக்கு
ம…மு: சரி சரி உதை விடடாப்பா ஆறின கஞ்சி பழங் கஞ்சி தான் உன்னைத் தானடாப்பா கேட்கிறன் அவன் என்னவாம் இடி அமீன்.
நெ…நா: அவன் இடி அமீன் செத்துக் கருவாடாகி எத்தனை வரியமாகுது. இப்பவேன் அவன்ரை கதை உனக்கு.
ம…மு: அட நீ கேள்விப் படவில்லைப் போல கிடக்கு. கொத்தபாயா ராஜபக்ச தான் இப்பத்தைய இடி அமீன்.
நே…நா: ஓமடாப்பா இப்பதான் ஞாபகம் வருகுது சரத் பொன்சேக்கா அப்படித் தான் சொன்னவன் இந்த இடி அமீனின் விளையாட்டு முந்திய ஆளை வெல்லும் போலை கிடக்கு.
ம…மு: சரியாய் சொன்னாய் பார் கொத்தபாயா சுடு என்றால் சுட ஆமி இருக்கு. வெட்டிப் புதை எண்டால் மண்வெட்டி இருக்கு.
நெ…நா: உவன்ர தமையனுக்கும் ஆபத்து எண்டு கதைக்கினம் அல்லே. தகப்பனைச் சுவருக்குள்ளை வைச்சுக் கட்டிய காசியப்பன் பரம்பரை தானே ராஜபக்ச குடும்பம்.
ம…மு: கொத்தபாயாவின்ரை பயறு அவியேலை என்றும் கதைக்கினமடாப்பா.
நே…நா: பயறு அவியேலையோ அவன்ர அடிப்படியிக்கை எட்டிப் பாத்த நீயே
ம…மு: உப்படி வீண் கேள்வி கேட்டுத் தான் உனக்கு நெத்தியடி நாகலிங்கம் எண்டு பேர் வந்ததுபோல
நெ…நா: எனக்கு கோல் குடுக்காதை கண்டியோ மடார் முருகேசு
ம…மு: ஏன் சண்டை பிடிப்பான் காத்தாலை குடிச்ச கஞ்சி பசியைக் கிண்டுது ஒரு பக்கம் என்ற சவடால் காரனை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லி இடி அமீன் ஒழுங்கு செய்தவனாம் ஜநாவின்ரை கோரியன்காறன் ஏதோ விசாரணைக் குழு வைக்கிறானாம் அதை நிப்பாட்டச் சொல்லி உண்ணாவிரதம் பிடிக்கிறான்கள்.
நெ…நா: உண்ணாவிரதமோ? அடிக்கிற தடியைப் புடுங்கித் திங்கிற மாடு மாதிரி நாங்கள் சோத்துக்கு அலையிறம். கோதாரியிலை போவார் விரதமே பிடிக்கினம்.
ம…மு: ஆத்திரப் படாதை தேவைக்கு விரதம் பிடிக்கத் தான் வேணும் ஆத்து முதலைக்கு குளத்து நெத்தலி சவால் விட்ட மாதிரி கோறியனுக்குச் சிங்களவன் சவால் விட்டனெண்டால் பாரன்
நெ…நா: கோறியன் யமனைப் பச்சடி போட்ட ஆள் கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் தானே இது நான் கேள்வி பட்ட விசயம்.தான் உன்ரை வாயாலை கேப்பம் எண்டுதான் தெரியாத மாதிரி நடிச்சனான் .
ம…மு: உனக்கு நடிக்கவும் தெரியுமே நாகலிங்கம். இப்ப ஒரு புது அண்ணாவியார் வந்திருக்கிறார் கேள்விப் பட்டனியே. ம்ம்ம் வம்பன் சூரி வாறன்
வ...சூரி: என்னடா கதைக்கிறியள். எங்க அந்த அண்ணாவி அப்பிடி ஒருத்தரும் இல்லை ஆமி உடுப்பில்லை ஜந்சு ஆறு சீனர் தான் உதாலை போறான்கள்.
ம…மு: உனக்கேன் வம்பன் சூரி எண்டு பேர் வைச்சவன்கள் தெரியுமே வம்பு தும்பு காவுறது உன்ரை வேலை. சீனன் ஏன் இஞ்சை வாறான்.
வ…சூரி: என்ரை பெண்டிலின்ரை தலையிலை அடிச்சுச் சத்தியம் பண்ணத் தயார் நான் சீனன்களைக் கண்டனான்.
ம…மு: பேயா உன்ர பெண்டில் செத்து நாலு வரியமாகுது கதையா விடுகிறாய்
நெ…நா: பொறு மடார் வும்பன் சொல்றதிலையும் விசயம் இருக்கு. வன்னியிலை கண்ணிவெடி அகற்றச் சீன இராணுவம் வந்திருக்கு எண்டு கேள்விபட்ட ஞாபகம்
ம…மு: அப்படியெண்டால் வன்னி மண்ணிலை கண்ணிவெடி விளையுதே? ஒரு வேளை வைச்சு வைச்சு எடுக்கிறான்களோ? ஏத்தனை பேர் வந்திட்டான்கள் கண்ணிவெடி கிண்ட
வ…சூரி: இது பெரிய இடத்து விசயம் உனக்கும் எனக்கும் விளங்காது கொஞ்சம் கடுமையாய் யோசிக்கத் தான் வேணும்
ம…மு: உவர் யோசிக்கும் வரை நாங்கள் நிக்க முடியாது வா போவம்
நெ…நா: எங்கை போகப் போறாய் கொஞ்சம் அரசியல் பேசுவம் பொழுதும் போகும். ஏதோ கதைச்ச மாதிரியும் இருக்கும்.
வ…சூரி: உனக்கு என்னடாப்பா கலோ என்றால் கிலோ கனக்கில் கையில இறங்கும். உன்னைப் போல நாங்களும் அரசியலோட நிண்டமெண்டால் எங்கட பாடு சரி
ம…மு: சரியா சொன்னாயடா நாங்கள் தோட்டத்தில கால் வைத்தால் தான் கையில வரும் சரியோ நாகலிங்கம். அப்ப பிறகு சந்திப்பமடாப்பா
நெ…நா: ஒமடாப்பா நீங்கள் சொல்லுறதும் சரிதான் அப்ப பிறகு சந்திப்பம்.
**********************************
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to நெத்தியடி நாகலிங்கம், வம்பன் சூரி, மடார் முருகேசு ஆகியோர் உரையாடல் சந்திக்கும் இடம் கிளிநொச்சி சந்தை