Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாண்புமிகு கலைஞர், கருணாநிதி அவர்களுக்கு, அண்மையில் போருக்குப் பின்னரான நிலைமைகளை நேரில் சென்று ஆராயவென உங்களின் வேண்டுகோளின் படி இந்தியப் பிரதி நிதி ஒருவர் இலங்கை சென்று குறிப்பாக வன்னி மாவட்ட மக்களின் புணர்வாழ்வு, மீள் குடியேற்ற நடவடிக்கைகளை அவதானிக்க சென்றிருந்த வெளிவிவகாரச் செயலாளரின் விஐயம் குறித்தும்,.......

தமிழக முதலமைச்சர், 06 - 09 - 2010

மாண்புமிகு கலைஞர்,கருணாநிதி அவர்களுக்கு,

அண்மையில் போருக்குப் பின்னரான நிலைமைகளை நேரில் சென்று ஆராயவென உங்களின் வேண்டுகோளின் படி இந்தியப் பிரதி நிதி ஒருவர் இலங்கை சென்று குறிப்பாக வன்னி மாவட்ட மக்களின் புணர்வாழ்வு, மீள் குடியேற்ற நடவடிக்கைகளை அவதானிக்க சென்றிருந்த வெளிவிவகாரச் செயலாளரின் விஐயம் குறித்தும், அதன் நியாயத் தன்மை குறித்தும் உங்களோடு சில விடயங்களை பதிவு செய்ய விரும்புகின்றோம்.

தமிழர் பகுதிகளில் புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் திருப்திகரமாக இருக்கவில்லை என்ற உங்களது வெளிப்படையான கருத்தினை நாங்கள் வரவேற்கின்றோம்.

இதேவேளை இந்திய வெளிவிவகார செயலாளரின் விஐயம் கனடா தமிழர் இணையத்தை பொறுத்தவரையில் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதற்கான உண்மையான காரணங்களை நாம் உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.

* இந்தியச் செயலாளரின் விஐயம் முற்று முழுதாக இலங்கை அரசின் இராணுவ அதிகாரிகளின் நிகழ்ச்சி நிரல்களின் படியே இடம் பெற்றுள்ளது.
* தமிழ் மக்களுக்கு இந்தியாவால் வழங்குகின்ற உதவிகள் இலங்கை அரசின் ஊடாகவே வழங்கப்படும் என இந்தியச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
* இந்தியச் செயலாளரை வடபகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்றவர்களில் முக்கியமாக வட,கிழக்கு மாகாண ஆளுனரும், முன்னாள் இராணுவ அதிகாரியுமான தயா சாந்த கிரி என்பவர் தான் பலாலிப் பகுதியிலுள்ள வலிகாமப் பகுதியில் சுமார் ஒரு லட்சம் மக்களை மீள் குடியேற்றம் செய்ய விடாமல் தடுக்கின்ற முக்கியமான இராணுவ அதிகாரியாக இருந்தார். இப்படியான ஒரு அதிகாரியின் தலைமையில் தான் இந்தியப் பிரதிநிதியின் யாழ்ப்பாண விஐயம் அமையப் பெற்றது.
* இலங்கை அரசினால் தெரிந்தெடுக்கப்பட்ட தடுப்பு முகாம்களுக்கு மாத்திரமே செயலாளரின் விஐயம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. முக்கியமாக கதிர்காமர் தடுப்பு முகாமுக்கே இலங்கை படையினரால் கூட்டிச் செல்லப்படிருந்தார். மக்கள் வசதிகளற்று துன்பப்படுகின்ற முகாம்கள் சுதந்திரமாக பார்வையிடப்படவில்லை.
* முக்கியமாக இந்தியப்பிரதி நிதிகளுடன் தமிழ் மக்களிக் பாராளுமன்ற பிரதி நிதிகள் தான் அழைத்துச் செல்லப்பட்டிருக்கவேண்டும், ஏனெனில் அவர்கள் தான் அந்த மக்களின் பிரதிநிதிகள். அதைவிட்டு இராணுவ அதிகாரிகள் மட்டத்தினருடன் அங்கு செல்வதில் பயன் ஏதும் உண்டா?
* இலங்கை அரச படையினரால்; தடுத்து வைக்கப்படிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பல இடங்களில் சித்திரவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இப்படியான வதை முகாம்களுக்கு ஏன் விஐயம் செய்யவில்லை.
* இந்தியப் பிரதிநிதியூடான மக்கள் சந்திப்புக்களின் போது அதீத இராணுவப் பிரசன்னம் காரணமாக தமிழ் மக்கள் தமது சுதந்திரமான கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடிய சூழ் நிலை அங்கு காணப்பட்டிருக்கவில்லை.
* தமிழ்; மக்களின் கலாச்சார பூமியாக விளங்கும் யாழ் மவாட்டத்தில் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்க்கப்பட்ட சுமார் இரண்டு லட்சம் மக்கள் அகதிகளாக பல்வேறு இடங்களில் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்ந்த அந்தப் பிரதேசங்களான வலிகாமம், பலாலி, வடமராட்சி கிழக்கு போன்ற பகுதிகளில் இராணுவ குடியேற்றங்களையும், பௌத்த விகாரைகளையும், இராணுவ சின்னங்களையும் நிறுவி வருகின்றனர். தமிழ் மக்கள் சொந்தமாக வாழ்ந்த இந்த நிலங்கள் பறிபோன இடத்தை இந்தியப் பிரதி நிதி பார்வையிட்டிருக்கவில்லை.
* சென்ற ஆண்டு நடைபெற்ற போர்க் காலத்தில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் முற்று முழுதாக இராணுவ வலையங்களாக பிரகரணப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பிரதேச மக்கள் இந்தப் பகுதிகளில் சுதந்திரமாக குடியேற்றப்பட நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
* இடம்பெயர்க்கப்பட்ட தமிழ் மக்களை நூறு நாட்களுக்குள் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியுமென அறிக்கை விடுத்த இலங்கை அரசு அந்த நூறு நாட்களில் வன்னிப் பகுதிகளில் இராணு கட்டுமானங்களும் பௌத்த ஆலங்களும், இராணுவச் சின்னக் கடடுமானங்களையே இலங்கை அரசு செய்தது. முக்கியமாக ஆணையிறவு, கிளிநொச்சி, இரணைமடு குளம், முல்லைத்தீவு போன்ற பிரதேசங்கள் இதில் அடங்குகின்றன.
* திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் தமிழர் பூர்வீகமாக வசித்து வந்த பிரதேசங்களில் இருந்து படையினரால் வெளியேற்றப்பட்டுளனர். அந்தப் பகுதியில் இந்தியாவின் அனுசரனையுடன் அனல் மின் நிலையம் நிறுவப்படவிருக்கின்றது. திருமலை மாவட்டத்தில் தமிழ் மக்களை சிறுபான்மையினர் ஆக்குவதன் நோக்காக கொண்டே சம்ப+ரிலிருந்து தமிழர்கள் விரட்டப்பட்டுளனர்.

இப்படியான மோசமான சூழ் நிலை வட கிழக்கு பகுதியில் நிலைமையில் இருக்கையில் தமிழ் மக்களுக்கு சலுகைகளைக் கொடுப்பதன் மூலம் அவர்களது உரிமைக்கான போராட்டத்தை முடக்கி விடலாமென இலங்கை அரசு நினைக்கின்றது. இத்தகைய நிகழ்ச்சி நிரலுக்கு இந்தியா ஆதரவு கொடுக்க கூடாது என்பதையே நாம் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம். ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படு கொலை வன்முறைகளுக்கு இந்தியா தார்மீக ஆதரவினை இலங்கைக்கு வழங்கியிருக்கின்றது என இலங்கைத் தமிழர்கள் நம்புகின்றனர். இதற்கான பின்வரும் ஆதாரங்களை உங்கள் முன் வைக்கின்றோம்.

* இறுதியுத்த காலப்பகுதியில் இலங்கைப்படையினருக்கு தேவையான இராணுவ, தார்மீக ஒத்துழைப்பினை வழங்கியமை.
* போர் நடைபெற்ற காலங்களில் நடாத்தப்பட்ட இனப்படு கொலை குறித்து இந்தியா இதுவரை மௌனம் சாதிக்கின்றது.
* இலங்கை அரச படைகள் புரிந்ததாக கூறப்படும் போர்க்குற்ற விசாரணைகள்; குறித்தும் இந்தியா மௌனம் சாதிக்கின்றது.
* .நா. மனித உரிமை கண்காணிப்பகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
* போர் நடைபெற்ற காலப்பகுதியில் இலங்கைக்கு விஐயம் செய்த இந்தியப் பிரதி நிதிகளினால் போர் நிறுத்தம் குறித்து அழுத்தம் ஏதும் கொடுக்கப்படவில்லை என இலங்கை ஐனாதிபதி பல தடவைகள் பகீரங்கமாக தெரிவித்துள்ளார்.
* இலங்கை, இந்திய ஒப்பந்தம் அமுல்ப்படுத்த ஏன் இந்தியா தீவிரம் காட்டவில்லை.
* இலங்கை, இந்திய ஒப்பந்தத்தில் வடக்கு, கிழக்கு இணைப்பு வலியுறுத்தப்படிருக்கின்றது. இன்று இவை பிரிக்கப்பட்டுள்ளன. இணைப்புக் குறித்து இந்தியா ஏன் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.
* வடக்கு,கிழக்கு தமிழ்மககளால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர்களோடு ஏன் இந்திய இணக்கப்பாட்டிற்கு வர முடியாது?.

இதுவரையில் மேற்கூறப்பட்ட விடயங்கள் வடகிழக்கில் இருந்து கிடைக்கப்பெற்ற சுதந்திரமான, சுயாதீனமான தகவல்களின் அடிப்படையிலேயே உங்களோடு பகிர்ந்து கொண்டுள்ளோம்.

இனிமேலாவது இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியா வெளிப்படையான சுயாதீனமான அணுகுமுறையினை கையாள வேண்டுமென்பதே எமது வேண்டுகோள்.

சிங்கள அரசின் கொடுமைகள் குறித்து உங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு இலங்கைத் தமிழர்கள் மீது கரிசனை காட்டுவதாக தெரியவில்லை, என்ற கருத்து புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

உலகில் எந்த ஒரு மனித சமூகமும் அனுபவிக்கின்ற மிக அடிப்படையான தேவைகளைத்தான் ஈழத்தமிழர்களும் கேட்கின்றார்கள். அதிகமாக எதையும் கேட்கவில்லை.

ஸ்ரீலங்கா பிரச்சினையில் பெரும் பங்கை எடுத்துக் கொண்ட இந்தியா தமிழ்மக்களுக்கு எதிரான போரை நடத்தியதில் முக்கிய பங்கு கொண்ட இந்தியாவிற்கு இப்போது தமிழ் மக்கள் கோரும் இந்த அடிப்படைத் தேவைகளை உரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்புண்டு.

இந்திய மத்திய அரசு ஈழத் தமிழ் மக்களின் துயரமான, துன்பமான இன்றைய சூழ்நிலையில் அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டுமென உங்களுடாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தமிழக முதலமைச்சர் என்ற முறையிலும் மூத்த அரசியல் தலைவர் என்ற முறையிலும் உங்களால் இது முடியுமென நாம் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்.

- வணக்கம் -

வின் மகான்
தலைவர்

நாதன் வீரவாகு
செயலாளர்

கனடாத் தமிழர் இணையம்.

0 Responses to இந்திய வெளிவிவகாரச் செயலாளரின் இலங்கை விஐயம் குறித்து, கனடா தமிழர் இணையம் கருணாநிதிக்கு கடிதம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com