Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாயக விடுதலைக்கான நெடிய பாதையில் எரிமலையாய் எழுந்த தடைகளையும், புயலாய் விரிந்த பேரிடர்களையும் மலையாய் நின்றெதிர்த்து, மோதி மிதித்து தன் நேரிய பாதையில், தேசியத்தலைமையின் சிறப்பான வழிகாட்டலில் ஈழத்தமிழினம் விடுதலைவேண்டிப் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் வரலாற்றுத் தேவைகருதி தாயகத்தில் எமது ஆயுதப்போராட்டம் அமைதியாக்கப்பட்ட இவ்வேளையில், புலம்பெயர் தேசங்களில் எமது விடுதலை பெருவிருப்பை, குறிக்கோளின் உறுதிப்பாட்டை பல்வேறு வழிகளில் இடைவெளியின்றி அனைத்துலகத்தின் செவிகளில் ஓங்கி ஒலிக்கச்செய்வது காலத்தின் கட்டாயமாகிறது.

இந்தவகையில் சிவந்தன் என்ற இளைஞர் பிரித்தானியாவிலிருந்து ஜெனீவாவில் அமைந்துள்ள .நா மானிடவுரிமைகள் செயலகத்தின் தலைமையகம்வரை மேற்கொண்ட நடைப்பயணத்தின் தொடர்ச்சியாக, ஜெனீவாவிலிருந்து பெல்ஜியத்திலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தை நோக்கி திரு.ஜெகன் என்ற முதியவரும் திருமதி.தேவகி மற்றும் திரு.வினோத் ஆகியோரும்

1. இலங்கை அரசுமீது .நா தானாக போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ளவேண்டும் அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்கொடுக்கவேண்டும்.

2. எமது பெண்கள், சிறுவர்கள் மீது முறைகேடு இழைத்த சிறிலங்கா அரசுமீது அனைத்துலக முறைமன்றில் ஒறுப்பு வழங்கவேண்டும். அத்துடன் சிறையில் தவிக்கும் தமிழ்க்கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.

3. மானிடஉரிமைகள் மதிக்கப்படும்வரை சிறிலங்காவை அனைத்து நாடுகளும் வேற்றுமைபண்ணல் வேண்டும்.

4. தமிழ்மக்களின் தன்னாட்சியுரிமை ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

என்ற கோரிக்கைகளை முன்வைத்து, மோசமடைந்துள்ள காலநிலையையும் பொருட்படுத்தாது தம் அகவையையும் கருத்திலெடுக்காது ஒரு கடுமையான நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக வயிற்றில் நெருப்பேந்தி முறைகேட்டு அறப்போர்புரிந்த வீரக்குல மாதின் நினைவேந்தி, தம் உடலில் நெருப்பேந்தி மறப்போர்புரிந்த மறத்தியர் வழித்தடமேந்தி, தன் காலில் நெருப்பேந்தி முறைக்காய்ப் போராடும் திருமதி. தேவகி அவர்களின் கடும் நடைப்போராட்டம் உணர்வுபூர்வமானது.

இவர்களது நடைப்போராட்டம் மூலம் அனைத்துக் கோரிக்கைகளும் அனைத்துலகத்தின் கவனித்தின்பாற்கொண்டுவரப்பட்டு வெற்றிபெற அனைத்துலகத் தமிழ்ப் பெண்கள் அமைப்பினராகிய நாம் வாழ்த்துவதோடுமக்கள் புரட்சி வெடிக்கட்டும்என்று தமிழர் மனங்களில் சூளுரைத்துச் சென்ற தியாக திலீபத்தின் நினைவுத் திங்களில் அவரின் நினைவேந்தி, வீரசபதமெடுத்து எமது முன்னையவர் எம்மிடம் விட்டுச்சென்ற தொண்டேற்று, அவர்கள் காட்டிய வழியேற்று ஒன்றுபட்ட சக்தியாக விடுதலைக்காக உலகின் முற்றமெங்கும் அணிதிரள்வோம்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

அனைத்துலகத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to தம்கால்களில் வலியேற்று நெடும்பயணம் செய்யும் மறவர்க்கு புலம்பெயர் ஈழத்தமிழ்ப் பெண்ணினம் தலைவணங்குகிறது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com