தேசவிடுதலை ஒன்றே தமது இலக்காக கொண்டு எதிரியோடு களமாடி வீரகாவியமான வீரப்புதல்வர்களை நினைவுகூரும் மாவீரர் நாளில் அவர்களுக்காக ஒன்றுபட்ட தமிழராய் அனைவரும் இணைவதோடு அந்த நாளை ஒரு தேசியவிடுமுறை நாளாகவும், வித்தாகி வாழும் வீரப்புதல்வர்களை பூசிக்கும் புனித நாளாகவும் கடைப்பிடித்து மாவீரர்களின் ஒப்பற்ற தியாகங்களை கெளரவப்படுத்த வேண்டியது உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களின் கடைமையுமாகும்.எமதும், எமது எதிர்கால சந்ததியினரதும் சுதந்திர வாழ்விற்காகவும், தமிழருக்கென்று ஒரு நாடாக தமிழீழம் அமையவேண்டும் என்பதற்காகவும் தங்கள் தங்கள் இளமை வாழ்வை தொலைத்து இலட்சிய வேட்கையோடு விடுதலை வேண்டி போராடி வீரச்சாவை தழுவிய 36,000 க்கும் மேற்பட்ட மாவீரர்களை கெளரவப்படுத்த நாம் இதையேனும் செய்யாது இருப்பது சரிதானா?
வெளிநாடுகளிலே அரச அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் தொழில் புரிவோர் இதை எவ்வாறு செய்யலாம் என்ற கேள்வியை கேட்கலாம். “மனம் உண்டானால் இடமுண்டு” எனும் தமிழ் பழமொழிக்கமைய ஒவ்வொருவரும் உண்மையாக இதை செய்யவேண்டும் என எண்ணினால் அவர்கள் முன்கூட்டியே தாங்கள் வேலைபார்க்கும் இடங்களில் விடுமுறைக்கு விண்ணப்பிக்கலாம். ஒட்டுமொத்த தமிழினமும் ஒன்றுபட்டு இவ்வாறான நடவடிக்கையில் இறங்கினால் முடியாது போகாது.
பல நாடுகளில் நத்தார் விடுமுறை, தீபவளி விடுமுறை என உள்ளது. அது போல் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளிலும் நாடுரீதியாக அங்கீகரித்து விடுமுறை கொடுக்காது போனாலும் அந்த நாடுகள் தமது சட்டதிட்டங்களுக்கமைய ஜனநாயகம் எனும் அடிப்படையில் ஒரு இனம் விரும்பும் அவர்கள் கொண்டாடும் தினத்திற்காக தாமும் சில பங்களிப்பை செய்து அவர்களை மகிழ்விக்கிறது. உதாரணமாக சொல்லப்போனால் பிரித்தானியாவிலே ஏராளமான இந்தியர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் அதிகமானவர்கள் இந்துக்களாக இருப்பதனால் அவர்கள் கொண்டாடி மகிழும் தீபாவளி, மற்றும் புதுவருடம் ஆகிய தினங்களை முன்னிட்டு பல தனியார் நிறுவனங்கள் விடுமுறை விடுகின்றன. சில தனியார் நிறுவனங்களும், அரச நிறுவனங்களும் அதற்காக விடுமுறைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் விடுமுறை வளங்கி அவர்களை மகிழ்விக்கின்றனர். அது மட்டுமன்றி அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க அந்தந்த பிரதேச சபைகள் அவர்கள் வாழும் நகரங்களில் வரண மின் விழக்குகளை ஒளிரவிட்டு அவர்களை அந்த நாட்டு குடிமக்கள் என்றவகையில் கெளரவிக்கின்றது. இது போல் ஏன் தமிழர்களால் மாவீரர் வாரத்தை சிறப்பிக்க முடியாது.
எனவே இது போன்ற நடவடிக்கைகளை செய்ய முன்வரவேண்டும். எனது அடிமனதில் இருந்து கூறுவதாயின் ஈழத் தமிழன் எனக் கூறும் ஒவ்வொருவரும் மாவீரர் தின நிகழ்வில் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தி அவர்களை கெளரவப்படுத்தவேண்டியது பொறுப்பும், கடைமையுமாகும். இலங்கையிலே துயிலுமில்லங்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களே இன்னும் அதிகமாக திரண்டு இந்த மாவீரர் நிகழ்வுகளை சிறப்பிக்கவேண்டியது இன்றியமையாததாகிறது.
ஆகவே இந்த வருடம் முதல் இனிவரும் காலங்கள் எல்லாம் ஈழத் தமிழர்கள் தாம்வாழும் நாடுகளில் தமது கடைகளை மூட முடிந்தவர்கள் மூடி மற்றவர்கள் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றும் தாயக நேரமான மாலை 6:05 க்கு அனைத்து நாடுகளிலும் அந்தந்த இடத்தில் நின்றே அகவணக்கம் செலுத்துவதோடு ஒரு மணி நேரமாவது கடைகளை பூட்டி மாவீரர்களுக்கு கெளரவப்படுத்த முன்வரவேண்டும்.அது போன்று தமிழர்கள் தமது பாடசாலைகள், வேலை இடங்கள் என்பவற்றில் விடுமுறை ஒதுக்கி இந்த மாவீரர்கள் தினத்தை ஈழத் தமிழர்களின் தேசியநாளாக எழுச்சியோடு கடைப்பிடிக்க வேண்டியதும், ஆலயங்களில் மாவீரர்களுக்கென நினைவு தூபிகளையோ அல்லது நினைவு சின்னங்களையோ நிறுவி கெளரவப்படுத்த வேண்டியதும், தாயகத்து நேரம் மாலை 6:05 க்கு மணிகள் ஒலிக்கப்பட்டு தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகளை நடாத்த வேண்டியதும் இன்றியமையாததாகும்.
தமிழர்கள் என்ற சொல்லுக்குள் மாவீரர்கள் என்ற சொல்லும் வேறாக இல்லை. ஒவ்வொரு தமிழனும் மாவீரர்களுக்கு தமது மரியாதையை கொடுக்கவேண்டும் என எண்ணுவது, அவர்களுக்காக எதையும் செய்யத் தயாராகவுமே உள்ளனர். அதில் எந்த மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் மனமுடைந்தும், ஆயுதங்கள் மெளனிக்கப் பட்டதன் பின் அதிர்ச்சியிலும், அதன் பின் உருவாகியுள்ள பிளவுகள் மற்றும் குழப்பங்களால் நம்பிக்கையிழந்து சோர்வும் அடைந்துள்ள புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் மத்தியிலே இது எவ்வளவுதூரம் சாத்தியம் என்ற கேள்வியும் இருக்கவே செய்கிறது.
மாவீரர்கள் எமக்காக, எம் மண்ணின் விடுதலைக்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்கள். அவர்களை பூஜிக்கும் புனித நாளான மாவீரர் நாள் நிக்கழ்வில் எவரும் எவரையும் தடுக்கமுடியாது.
அத்தோடு இவை மக்களால் மக்களுக்காக உயிர்நீத்தவர்களுக்காக கடைப்பிடிக்கப்பட்டுவரும் மகத்தான புனித தினம். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பாத சிலரும் இன்னும் இருக்கவே செய்கின்றனர். அவர்கள் மாவீரர்கள் என்பதாலோ, அல்லது உணர்வு இல்லாதவர்களாகவோ இருப்பதாக தெரியவில்லை. இந்த நிகழ்வை நடாத்துபவர்களோடு உள்ள கருத்து வேற்றுமைகள் காரணமாகவும், அவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும், மாவீரர்நாள் என்ற ஒன்றை பயன்படுத்தி அவர்கள் மேற்கொள்ளும் வருமானத்திற்கான சரியான தகவல்களையும், அவை பயன்படுத்தப்படும் முறைகளையும் மக்கள் மத்தியில் வெளிப்படைத்தன்மையோடு கொண்டுசெல்லாததுமே இவ்வாறு ஒதுங்கியிருக்க காரணமாகவும் இருக்கலாம்.
எனவே மாவீரர்களுக்கான நிகழ்வை உண்மையாகவும், அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி கெளரவிக்கும் நாளாகவும் மட்டுமே செய்யவேண்டியது நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் கடைமையாகிறது.
நன்றி தமிழ் மாறன் tamil.varalaaru@gmail.com
காணொளிகள்.
56வது அகவை காணும் தேசியத் தலைவர் காணொளிகள்.
மாவீரர் காணொளிகள்.



0 Responses to மாவீரர் நாளிற்கு அனைவரும் சமூகம் கொடுக்க வேண்டும்