Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காலத்தின் தேவையும் யதார்த்தத்தின் நிர்ப்பந்தமும் தோற்றுவித்திருக்கும் பிரான்ஸில் தமிழர் நடுவம் அமைப்பைத் தோற்றுவிக்கச் செய்துள்ளதாக அந்த அமைப்பு அறிவிக்கின்றது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் மக்களிடையே மெல்லத் தோன்றிவருகின்ற அச்சங்களையும், கவலைகளையும் எம் இனத்தின் தேவைகளையும் மொத்தமாகக் கவனத்தில் எடுத்து, அதற்கேற்ப தமிழர் நடுவம் தன் செயற்பாடுகளை வகுத்துச் செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

அளப்பரிய தியாகங்களையும், அற்புதமான சாதனைகளையும், தமிழர்தம் வரலாற்றில் மெய்சிலிர்க்கும் வாழ்வியல் பதிவுகளையும், ஆழமாகப் பொறித்தபடி தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் அர்த்தம் பொதிந்த தன் அடுத்த கட்டம் நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றது.

கடந்த காலங்களில் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் சக்திமிக்கதோர் அங்கமாகவும் தாங்கு சக்தியாகவும் திகழ்ந்த புலம்பெயர் தமிழ்ச் சமூகம், தற்போது காலத்தின் கட்டாயத்தின் பேரில் புதிய பாத்திரமேற்றிருக்கின்றது. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை தன் தோளிலே சுமந்து இறுதிவரை பயணிக்க வேண்டிய பெரும் பொறுப்பை புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மீது காலம் சுமத்தியிருக்கின்றது.

பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் இரும்புப் பிடிக்குள் சிறைப்பட்டுள்ள எமது தாயக மக்களின் விடுதலைக் குரலாகவும், விடுதலைக்கு ஏங்கும் அவர்களின் ஆன்மாவாகவும் செயற்படவேண்டிய தார்மீகக் கடமை புலம்பெயர் தேசத்து மக்களிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது.

முன்னைய காலங்களிலும் பார்க்க பலமடங்கு பொறுப்பை, துடிப்புமிக்க செயற்பாட்டை புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தற்போது ஆற்றவேண்டியிருக்கின்றது.

தமிழீழ மக்களின் விடுதலைக்கான அடுத்தகட்டப் போராட்டம், புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களினதும், உலகமெல்லாம் பரவி வாழும் தமிழ் மக்களினதும் கைகளில் தங்கியுள்ளதையும், விடுதலைப் போராட்டத்தின் பிரதான பாத்திரத்தை வகிக்கவேண்டிய கடமை புலம்பெயர்ந்த தமிழ் மக்களை - குறிப்பாக இளைய சமூகத்தையே சாரும் என்பதையும் எமது தேசியத் தலைவர் அவர்கள், காலம் உணர்ந்து பணித்திருந்தார்.

பேரிழப்புக்களையும், மிகமோசமான அழிவுகளையும், அவலங்களையும், துன்ப துயரங்களையும் அனுபவித்துவிட்ட தமிழர்களாகிய நாம், இந்தச் சிதைவுகளுக்குள் இருந்து எம்மை மீட்டெடுத்துக்கொண்டு, தமிழீழத் தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கும் எதிர்பார்ப்பிற்கும் ஏற்ப, எம் மக்களின் விடுதலை வாழ்வு என்ற ஒற்றைக் குறியுடன் ஒன்றிணைந்து, பயணப்படுவது இன்றியமையாததாகும்.

இந்த அடிப்படையில், எமது தாயக மக்களின் விடுதலை, அவர்களின் சுபீட்சமான வாழ்வு என்ற நோக்கில், காலத்தின் தேவை கருதியும், தவிர்க்கமுடியாத யதார்த்த நிலை கருதியும், பிரான்ஸ் நாட்டில்தமிழர் நடுவம்என்ற அமைப்பு உருப்பெற்றுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக, முழுமையான ஜனநாயகப் பண்புகளுடன், திறந்த வெளிப்படைத் தன்மையுடன், தமிழர் நடுவம் செயற்படும்.

தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய, அவர்களின் நலன் நோக்கிய அரசியல், சமூக, இராஜதந்திரச் செயற்பாடுகளை மேற்கொள்வதும், அந்த வழிமுறைகளில் செயற்படுவோரையும் செயற்படும் கட்டமைப்புக்களையும் இனங்கண்டு, ஊக்குவிப்பதும், உறுதுணை புரிவதும், அரவணைத்துக் கொள்வதும் தமிழர் நடுவத்தின் பணியாகின்றது. வேற்றுமைகள் தவிர்த்து, கருத்து வேற்றுமைகள் களைந்து, பிரான்ஸ் வாழ் தமிழ்ச் சமூகத்தை, ஒரு குடையின்கீழ் கொண்டுவரும் பெரும் பணியை தமிழர் நடுவம் சளைக்காது மேற்கொள்ளும்.

புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் அடுத்தகட்டப் போராட்ட நகர்விற்கு ஒற்றுமை அதிமுக்கிய தேவையாகின்றது. இதுகால வரை பொது ஓட்டத்தில் இருந்து விலகி இருந்தவர்களையும், எதிர்நிலை எடுத்தவர்களையும் கூட அவர்களுக்குள் அடங்கிக் கிடக்கின்ற தேசிய உணர்வையும், விடுதலை அவாவையும் தட்டியெழுப்பி, யதார்த்தத்தைப் புரியவைத்து அவர்களையும் தேசியச் சேவைக்கு அணிதிரட்டுவதும் தமிழர் நடுவத்தின் நோக்காகவும் பணியாகவும் இருக்கின்றது.

தேசிய நலன் சார்ந்த ஈடுபாட்டோடும், சமூக நலன் சார்ந்த அக்கறையோடும், செயற்பட்ட, செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற அனைத்துத் துறைசார்ந்த செயற்பாட்டாளர்களையும் உள்ளடக்கியதாக பிரான்ஸ் தமிழர் நடுவம் உருவாக்கம் பெற்றுள்ளது.

பிரான்ஸ் தமிழர் நடுவம் தன் கரங்களை அகலத் திறந்து வைத்திருக்கின்றது. தமிழ் மக்களின் விடுதலைக்காகப் பணியாற்றும் ஆர்வம்கொண்ட அனைத்து நெஞ்சங்களையும் அரவணைத்துக்கொள்ள காத்திருக்கின்றது. எமது மக்களின் விடுதலை என்ற உன்னதமான புலர்விற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த, எங்கள் இதயங்களில் என்றென்றும் வீற்றிருக்கின்ற மாவீர்களின் நினைவுசுமந்து, ஒரு காலத்தின் தேவை கருதிய பிறப்பாக பிரான்ஸ் தமிழர் நடுவம் தற்போது பிறப்பெடுத்திருக்கின்றது.

பிரான்ஸ் தமிழர் நடுவத்தின் நோக்கம் தெளிவானது. செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மை கொண்டவை. அதன் எண்ணங்கள் சிந்தனைகள், ஆரோக்கியமான திசையில் அகல விரிந்து செல்பவை. உலகமெல்லாம் திசைக்கொன்றாய் முனைப்புறும், தமிழர் செயற்பாடுகளை குறைந்தபட்சம் இணைப்பதற்கும், ஒரு திசைநோக்கி முனைப்புறச் செய்வதற்குமாவது தகுதிவாய்ந்த ஒரு பொதுக்கட்டமைப்பின் தேவையை தமிழர் நடுவம் வலியுறுத்துகின்றது. அத்தகைய ஆக்க பூர்வமான முயற்சிகளுக்கு தமிழர் நடுவம் நிச்சயம் துணை நிற்கும்.

தனித்தனியான, ஒத்திசைவற்ற செயற்பாடுகள் எதிரிக்கு வாய்ப்பாவதோடு, தமிழ்மக்களிடையே பிரிவுகளையும் குழப்பங்களையும் உருவாக்க வழிகோலும் என்பதை தமிழர் நடுவம் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விளைகின்றது. நீண்ட நெடுங்காலமாக நடைபெற்ற விபரிக்க முடியாத பெரும் அர்ப்பணிப்புகள் நிரம்பிய போராட்டத்தின் அடுத்தகட்டத் தொடர்ச்சியை குழப்பங்களில் இருந்து தொடங்க முடியாது.

கடந்தகாலப் பட்டறிவுகளில் இருந்து நிகழ்காலத்தையும், அதன்வழி எதிர்காலத்தையும் சரியான முறையில் வகுத்துச் செயற்படவேண்டிய தேவையும் அவசியமும் எமக்கு உண்டு. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர், புலத்தில் காத்திரமான செயற்பாடுகள் அற்ற தற்போதைய மந்தகாலம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உறங்குநிலை நோக்கிக் கொண்டு சென்றுவிடுமோ என்ற அச்சம் எம் மக்கள் மத்தியில் எழத் தொடங்கியிருக்கின்றது.

அதேவேளை, போரினால் சிதிலமடைந்துபோயுள்ள தாயக உறவுகளின் மீள்வாழ்க்கைக்கான தேவை அளப்பரியதாய் எம்முன் காட்சியளிக்கின்றபோதும் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் இதுவிடயத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை என்ற கவலைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களாலும் பௌத்த மத விஸ்தரிப்புக்களாலும் தமிழர் தாய்நிலம் பௌத்த - சிங்களப் பேரினவாதத்தால் விழுங்கப்பட்டுவருகின்றது. தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய போராளிகளும், பொதுமக்களும் அனைத்துலகப் போரியல் விதிகளை மீறும் வகையில் சிங்களக் கொடுஞ்சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். சொந்த வாழ்விடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படாத மக்கள் தொடர்ந்தும் அகதிகளாகவே அவலம் சுமந்து வாழ்கின்றனர். தமிழர் தாயகம் எங்கும் பரவி விரவி வியாபித்து நிலைகொண்டுள்ள சிங்கள இராணுவத்தின் ஆட்சிக்குள் எம் மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் அச்ச உணர்வுடன் வாழ்கின்றனர்.

இவற்றுக்கெல்லாம் வழிகாணவேண்டிய பெரும் பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழர்களாகிய எம்மிடமே உள்ளது. தமிழ் மக்களிடையே மெல்லத் தோன்றிவருகின்ற அச்சங்களையும், கவலைகளையும் எம் இனத்தின் தேவைகளையும் மொத்தமாகக் கவனத்தில் எடுத்து, அதற்கேற்ப தமிழர் நடுவம் தன் செயற்பாடுகளை வகுத்துச் செயற்படும்.

எம்முன் காத்திருக்கின்ற பெரும் பணியை நிறைவேற்ற தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான ஒத்துழைப்பைக் கோருவதுடன், ஆக்கபூர்வமான கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம்.

தாயகம் நோக்கிய சேவைக்கென அனைத்துத் தமிழ் மக்களினதும் உறுதிமிக்க கரங்கள் ஒன்றிணையட்டும். மாவீரர்களின் தியாகங்களை நெஞ்சில் நிறுத்தி, அற்புதமான எங்கள் தலைவன் காட்டிய பாதையில் எங்கள் பயணத்தைத் தொடர்வோம்.

ஒன்றாய் உழைப்போம். ஓளிமயமான காலத்தைப் படைப்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

0 Responses to தமிழீழ விடுதலைப்போராட்டம் - பிரான்சில் தமிழர் நடுவம் அமைப்பு உருவாக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com