Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இராட்சதன் இராசபக்சா! ஈழத்துயரம்

பதிந்தவர்: ஈழப்பிரியா 10 December 2010

அரக்கர்கள் என்றும் தீய

அசுரர்கள் என்றும் முந்தைப்

பரப்பெலாம் புராணத் துள்ளே

பலகதை உண்டு ஆயின்

இரக்கமில் லாமல் நின்று

இனக்கொலை செய்த ரத்தக்

கரத்தினால் மகிந்தன் இற்றைக்

காலத்தின் அரக்க னானான்!



இரும்பினை ஒத்த வாட்சி

இதயமே இல்லாச் சாதி

நரம்பினை விறைக்க வைத்த

நாசர்கள் கொண்ட வீதி

அரக்கர்கள் மட்டு மென்ன

அசுரர்கள் இராட்ச தர்கள்

புரக்கதை எல்லாம் மிஞ்சப்

பெற்றனன் மகிந்தக் கோனே!



அற்புதத் தமிழ்ப்பெண் ணாளை

ஆடையைக் கிளறி நெஞ்சக்

கற்பெனும் பெருமை பெற்ற

கனியரின் கையைக் கட்டி

கற்பழித் திட்டுக் கொன்று

காகமாய்ச் சடலம் தின்ற

மற்றொரு மகிந்தச் சாதி

வையத்தின் அரக்க னானார்!



கத்தியால் குத்தி ரத்தக்

களரியாய் நிலத்தைத் தோய்த்து

எத்தனை இளைஞர் கொன்ற

இராட்சதப் பக்சர் அந்தப்

புத்தனாய் முகத்தைக் காட்டிப்

புலையரின் கைகள் மாற்றி

மத்தியில் நடித்துத் தீய

மகிந்தனே வரக்கன் ஆனான்!



போரிலே எதிர்ப்புக் காணப்

பேணலாம் போரின் சாவு!

நேரிலே கைதி யாக

நிசத்திலே உயிர்கொண் டோரைப்

பாரிலே பாது காக்கப்

பகுத்தவோர் சட்டம் உண்டு!

மூரியாய் நின்றான் வைய

விதியொன்றும் மதித்தான் இல்லை!



குறித்துமே சொன்னான்! தம்பி

கோத்தபா யாவாம் கூற்றன்!

பறித்திடு தமிழ்ப்பெண் ணாளைப்

பதைத்திடக் காமம் தீர்த்து

வெறிக்களம் செய்வீர் என்றே

விதந்துமே படைக்குச் சொன்னான்!

கறிக்குழம் பாகக் காமம்

கரைத்தனர் சிங்கச் சேடர்!



கிருசாந்தி முதலே செத்த

கிஞ்சித்தும் அறியாப் பெண்கள்!

உருவான உடலத் தோடும்

உள்ளதே ஈழம் எங்கும்!

பெருமாடன் சரத்பொன் சேகா

புரிந்தவோர் கொலையின் காடு

உருமாடன் மகிந்தன் ஈறாய்

உலவுதே வெறியின் காடு!



புத்தனாய் நடித்துத் தீய

புலைத்தொழில் மறைத்து, இன்று

சத்தமில் லாமல் செய்த

சந்ததித் தமிழின் சாவை

மத்தியில் முகத்தை மாற்றி

மன்றிலே யுரைக்கச் சென்று

பித்தனாய்ப் பிரிட்டன் விட்டுப்

பிசிறினான் திரும்பி வந்தான்!



சணல்போ(ர்) றென்ற காட்சிச்

சரித்திரம் படமும் போட்டு

மணல்மேடு கரைகள் தோறும்

மலிந்தவோர் சடலம் காட்டி

தணல்போலே பெண்ணும் ஆணும்

தசையொடும் துடிக்கக் கொல்லும்

பிணமேடு நாட்டைக் காட்டிப்

பிரிட்டனை மலைக்கச் செய்தார்!



பத்தாயி ரம்மென் மக்கள்

பதைத்திடும் பனியின் உள்ளே

செத்தாருக் காகத் தங்கள்

செந்தமிழ் உறவுக் காக

மத்தாகக் கடைந்தார் மன்றில்

மகிந்தனின் குற்றம் சொன்னார்!

புத்தாவே பெருமான் என்று

பிசத்தியே மகிந்தன் போனான்!



நத்தாகக் கத்தி யென்ன?

நல்லவ னாகச் சென்னி

சுத்தமாய்க் கரைந்தால் என்ன?

சுக்கனாய் இலட்சம் மாந்தர்

செத்தவோர் ஈழம் செய்த

சிங்கனை மறக்கு மாமோ?

சத்தியம் விடாது! எங்கள்

சாவுக்குத் தர்மம் சொல்லும்!



- மகரம் (மலேசியா)

0 Responses to இராட்சதன் இராசபக்சா! ஈழத்துயரம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com