Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த வாரம் லண்டன் பயணித்திருந்த மேஜர் ஜெனரல் கலகேக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு வழக்கானது லண்டன் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது யாவரும் அறிந்ததே. இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டபோது சமர்ப்பிக்கப்பட்ட சில சாட்சியங்கள் லண்டன் மற்றும் அமெரிக்கத் தூதரகங்களில் பணியாற்றும் சில தனிநபர்களால் கொடுக்கப்பட்டவை என்று உலகத் தமிழர் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும், ஆனால் பிரித்தானியாவுக்கு வெளியேயுள்ள ஒரு நாட்டின் புலம்பெயர் அமைப்பு ஒன்றின் உறுப்பினர் தெரிவித்துள்ளதாக லங்கா நீயூஸ் வெப் இணையம் செய்திவெளியிட்டுள்ளது.

போர்குற்ற ஆதாரங்களைத் தந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்த விரும்பவில்லை என்றாலும் கூட, அந்நாடானது இலங்கை அரசுடன் மிக நெருக்கமான நட்புறவைப் பேணிவரும் நாடு என்றும் இலங்கையின் போர் நடவடிக்கைகளில் பலவித உதவிகளைப் புரிந்த நாடு எனவும் கூறப்படுகிறது. கலகேக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள வீடியோவை இவ்விணையம் பார்த்ததாகவும், அவ்வீடியோவானது 59 ஆவது படைப்பிரிவில் இருந்த ஒருவரால் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது புலனாகின்றது எனவும் கூறப்படுகிறது.

இந்த வீடியோ ஆதாரத்தையும், மேலும் சில புகைப்படங்களையும் (நாம் இணைத்துள்ள) பார்த்த பின்னர் கலகேயைக் கைது செய்யுமாறான உத்தரவை நீதிமன்று பிறப்பிக்காமல் விடுவதற்கு சாத்தியமே இல்லை என உலகத் தமிழர் பேரவையானது நம்புகிறது. இதேவேளை, 55 ஆம் படையணியின் கட்டளைத் தளபதியாக இருந்த பிரிகேடியர் பிரசன்ன டி சில்வாவுக்கு எதிராக தற்போது எடுத்துவைக்கப்பட்டுள்ள ஆதாரங்களைக் காட்டுவதற்காக உலகத் தமிழர் பேரவையானது பிரிட்டனின் வெளிநாட்டு அலுவலகத்தைச் சந்திக்கவுள்ளது. இச்சந்திப்பின்போது, லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தில் சில்வாவை ஒரு பணியாளராக ஏற்றுக்கொள்ள நம்பிக்கையற்றவர் என்று உலகத் தமிழர் பேரவை சவால்விடவும் உள்ளது எனவும் அதிர்வு இணையம் அறிகிறது.

கையளிக்கப்படும் ஆதாரங்கள் மிகவும் மோசமானவை எனக் கூறியுள்ள உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர், இந்த ஆதாரங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்க்கும்போது, வெளிநாடு மற்றும் பொதுநலவாய அலுவலகம் எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை பிரித்தானியப் பாராளுமன்றின் வெளிநாட்டு விவகார தேர்வுக் குழுவானது விசாரணை செய்யும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய தினம் சனல் 4 ஒளிபரப்பின்படி இன்னொரு போர்க் குற்றவாளி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண சுட்டிக்காட்டப்பட்டுள்ளார். போர்க் குற்றங்கள் அவராலும் அவரது 53 ஆவது பிரிவுப் படையணியாலும் செய்யப்பட்டன என்று குற்றம்சாட்டியுள்ளனர். போரின்போது கமால் குணரட்ணவின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்தன என்பதைக் காட்டும் பிரத்தியேகமான புகைப்படங்கள் சில எமக்கு கிடைத்துள்ளது. இவையும் 2009, மே மாதம் 18 ஆம் திகதி எடுக்கப்பட்டன. ஆனால், ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் கைகள் 53 ஆவது பிரிவு படையணியினரால் பின்புறமாகக் கட்டப்பட்டு 2009, மே மாதம் 19 ஆம் திகதி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று சனல் 4 கூறியுள்ளது.

கமால் குணரட்ணவின் இன்னொரு 13 புகைப்படங்கள் இருப்பதாகவும், அது அவர்கள் மே 18ம் திகதி மாலை வெற்றிக்கழிப்பில் ஈடுபட்டவேளை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனவும் கூறப்படுகிறது. வெகு விரைவில் பல திடுக்கிடும் வீடியோக்கள் வெளியாக உள்ளது. இதனால் இலங்கை அரசானது மேலும் சிக்கலுக்குள் மாட்டுண்டு, நிச்சயம் போர்குற்ற விசாரணைகள் நடைபெறுவதற்கான வாசல் திறக்கப்படும்.

இச் செய்தி அதிர்விலிருந்து...


0 Responses to போர்குற்ற விசாரணைகளைத் தூண்டும் மர்ம நாடு: புதிய ஆதாரங்கள் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com