Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 70 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட வேளாண்மை பாதிப்புக்கு நஸ்ட ஈடு வழங்கக் கோரி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த அடை மழை காரணமாக இம்மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இவ் வெள்ளம் காரணமாக இயல்பு வாழ்கை ஸ்தம்பிதம் அடைந்தது. குறிப்பாக மீன்பிடி, வியாபாரம், கல்வி நடவடிக்கைகள், போக்குவரத்து, அரச நிர்வாகம், விவசாயச் செய்கை என்பனவற்றைக் குறிப்பிடலாம்.

இவற்றில் விவசாயச்செய்கையில் மேட்டு நிலப்பயிர் செய்கை முற்றாக பாதிப்படைந்த நிலையிலும், வேளாண்மை செய்கையால் பாரிய நஸ்டம் ஏற்பட்டுள்ளது. அதிகமாக வாகரை, வாழைச்சேனை, கிரான், வந்தாறுமூலை, ஏறாவூர், கரடியனாறு, ஆயித்தியமலை, மண்டபத்தடி, கல்லடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, பளுகாமம் வெல்லாவெளி, மண்டுர், கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை போன்ற விவசாயக் கண்டம், பிரதேசத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பெய்த பாரிய மழை வீழ்ச்சி காரணமாக வேளாண்மை செய்கை பண்ணப்பட்ட பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியிருந்தன. இப்பகுதியில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் இருந்து 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட வேளாண்மை செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகளின் சில அமைப்புக்கள் என்னிடம் முறையிட்டனர்.

நானும் நேரடியாக 4 தினங்கள் சென்று அவதானித்தேன். இப்பாதிப்பு தொடர்பாக இத்திணைக்கள அதிகாரிகள் விவசாயிகளின் நன்மை கருதி விரிவான அறிக்கையை தயாரிக்க ஆரம்பித்துள்ளனர். விவசாயப் பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

பெரும் வெள்ளம் காரணமாக குளங்கள் நிரம்பி உடைபெடுக்கும் அபாயம் ஏற்பட்டபோதும் சம்பந்தப்பட்ட மத்திய ,மாகாண நீர்பாசன திணைக்கள அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள் இரவு பகலாக பெருமுயற்சி எடுத்து குளங்களை பாதுகாத்ததுடன் பாரிய அழிவில் இருந்தும் மாவட்டத்தை பாதுகாத்தமை பாராட்டுக்குரியதாகும். குளங்கள் நிதானத்துடனும் தொழில்நுட்ப ரீதியாகவும் அவதானத்துடனும் பாதிப்பின்றி திறந்து விடப்பட்டன.

சிறிய நீர்பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள புளுக்குணாவ குளம், கங்காணியார் குளம், கடுக்காமுனைக் குளங்கள் திறந்துவிடப்பட்டதுடன் மதுரங்கேணி குளம், கிரிமிச்சை ஓடைகுளம், தரவைகுளம், பாலையடி ஓடைக் குளம் போன்றவை நிரம்பி நீர்வடிந்தோடியது.

இதேவேளை பெரிய நீர்ப்பாசனக் குளங்களான உறுகாமம் குளம், நவகிரிக்குளம், உன்னிச்சைக் குளம், வாகனேரிக்குளம், புணானை அணைக்கட்டுக் குளங்கள் திறந்து விடப்பட்டதோடு கித்துள் குளம், கட்டு முறிவுக்குளம், தும்பங்கேணிக்குளம், வடமுனைக்குளம், வெலிக்காக்கண்டிக்குளங்கள் என்பன நிரம்பி வழிந்தன.

மழைவெள்ளம் காரணமாக குளங்கள் திறந்துவிடப்பட்டதனாலும் குடலை, கதிராக காணப்பட்ட விவசாய வயல்கள் நீரில் தொடற்சியாக மூழ்கியதால் அன்னம் வாங்க முடியாமலும், கதிருக்குள் நீர் சென்றதினாலும் நீரில் மூழ்கிய அனைத்து வேளாண்மையும் பதரடையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் நீர்சாவியாகவும் மாறியுள்ளது. வேளாண்மை கதிர்பறியும் காலத்தில் இவ் வெள்ளம் ஏற்பட்டமையே விளைச்சலை பெறமுடியாமைக்கு காரணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இத்தோடு இப்பிரதேசங்களில் துரிசிகள், வாய்க்கால் கட்டுகள், ஆற்றுக்கட்டுகள் வரம்புகள் சேதமடைந்துள்ளதுடன் பலவயல்களில் மணல் வார்ந்தும் உள்ளது. இவ் வெள்ளத்தினால் அழிவடைந்த சுமார் 70 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட வேளாண்மையும் பாதிக்கப்பட்டுள்ளது .

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதிக்கப்பட்ட விவசாய பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பின்வரும் நிவாரணங்களை வழங்க மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் ஆவன செய்யவேண்டுமென வினயமாக கேட்டுக்கொள்கின்றேன்.

(1)-உடைந்த துரிசுகள், அணைக் கட்டுகள், வாய்க்கால்கள், வயல் வீதிகள், மணல் மூடிய வயல் நிலங்கள், குளங்கள் திருத்தப்பட வேண்டும்.

(2)-விவசாயிகளுக்கு திருத்த வேலைகளுக்காக குறைந்த விலையில் இயந்திர உபகரணங்களை வழங்க வேண்டும்.

(3)- விவசாயிகளை பாதிப்பில் இருந்து மீட்பதற்கு உடனடியாக அரசு நஸ்ட ஈடு வழங்கப்படவேண்டும்.





இரா.துரைரெட்னம்

0 Responses to தென் தமிழீழம் மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 70ஆயிரம் ஏக்கர் வேளாண்மை பாதிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com