Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக மீனவர்கள் இதற்கு முன்பு நூற்றுக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டபோதெல்லாம் அது குறித்து கவலைப்படாத மத்திய அரசு தற்போது அவசரமாக சில நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து இலங்கையுடன் பேசுவதற்காக வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவை இலங்கைக்கு அனுப்பி வைக்கிறது.

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடும் கோபம் மற்றும் கொந்தளிப்பில் உள்ள மீனவ சமுதாய மக்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக திரும்பி விடுவார்களோ என்ற பயத்தில்தான் மத்திய அரசு தற்போது மீனவர் பிரச்சினையில் அக்கறை காட்டுவதாக கூறப்படுகிறது.

நிரூபமா ராவ் நாளை கொழும்பு செல்கிறார். அங்கு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து இலங்கைத் தரப்புடன் விவாதிக்கவுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மீனவர்களை இதுவரை இலங்கைக் கடற்படை கொன்று குவித்துள்ளது. இவர்களில் ஒருவருக்குக் கூட இதுவரை மத்திய அரசு எந்த வகையான நிவாரணமோ, ஆறுதலோ கொடுத்ததில்லை. மாறாக அறிக்கை விடுவதோடு நின்று கொள்ளும்.

ஆனால் சமீபத்தில் அடுத்தடுத்து ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த வீரபாண்டியன், புஷ்பவனத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகிய மீனவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட செயல் தமிழக மீனவர் சமுதாயத்தை கடும் கொதிப்புக்குள்ளாக்கியுள்ளது.

மேலும், இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முறையிட்டபோது, நமது மீனவர்களும் எல்லை தாண்டி போகிறார்களே என்று கேட்டது மீனவர்களிடையே அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்டவர்கள் குறித்து பிரதமர் அனுதாபம் தெரிவிக்காமல், எல்லை தாண்டிப் போவதால்தானே கொல்கிறார்கள் என்ற ரீதியில் பேசியது அவர்களை வருத்தமுறச் செய்துள்ளது.

இந்தத் தாக்குதல்களை எதிர்த்து நாகை மாவட்ட மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் இந்தத் தாக்குதல்கள் தொடராது என்று மத்திய அரசும், தமிழக அரசும் உறுதி அளிக்காவிட்டால் சட்டசபைத் தேர்தலைப் புறக்கணிப்போம் என்றும் மீனவர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

சமீபத்தில் ஜெயக்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் ஆறுதல் கூறி விட்டு, நிதியுதவியும் அளித்து திரும்பியுள்ளார்.

இந்தப் பின்னணியில்தான் நிரூபமா ராவை கொழும்புக்கு அவசரம் அவசரமாக அனுப்பி வைக்கிறது மத்திய அரசு.

0 Responses to தமிழக மீனவர்களின் படுகொலை நாளை நிரூபமா கொழும்பு விஜயம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com